ஒருபுறம் பனிப்புயல், மறுபுறம் காட்டுத்தீ – அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

0
5


அமெரிக்காவின் ஒருபகுதியில் கடும் பனி மக்களை வாட்டி வதைக்க, மற்றொரு பகுதியில் காட்டுத் தீ கடும் சேதம் ஏற்படுத்தி வருகிறது.

தெற்கு கலிஃபோர்னியாவில் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது.

தற்போது வரை 10 ஆயிரம் வீடுகளில் இருந்து குறைந்தது 30 ஆயிரம் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் செங்கொடி எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். அதாவது தீ விபத்துக்கான அதிகப்படியான ஆபத்தில் அவர்கள் உள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலசேட்ஸில்10 ஏக்கரில் இருந்த காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 2,900 ஏக்கருக்கும் பரவியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் தீப்பற்றும் ஆபத்து இருப்பதால் வேறு வழியின்றி வெளியேறியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பசிபிக் பாலசேட்ஸில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டடேனாவிலும் (Altadena) மற்றொரு காட்டுத் தீ ஏற்பட்டது. சிறு காட்டுத் தீயாக தொடங்கிய இதுவும் படிப்படியாக அதிகரித்து 400 ஏக்கருக்கு மேல் பரவியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் குறைந்தது 2 லட்சம் பேர் மின்சார வசதி இன்றி இருப்பதாக மின் துண்டிப்பை கண்காணிக்கும் PowerOutage.us இணையப்பக்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு, பலத்த காற்று காரணமாக சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.

லாய் ஏஞ்சல்ஸின் தீயணைப்புத்துறை தலைவர் கிரிஸ்டின் க்ரோலி இது தொடர்பாக கூறுகையில், ‘ மக்களை வெளியேற்றுவதில் குழப்பம் இருந்தபோதிலும் இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பாக எவ்வித தகவல்களும் இல்லை; என்றார்.

நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் தரைவழியாக, வான்வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் தீயை கட்டுப்படுத்துவதில் காற்றின் வேகம் தடையாக உள்ளது.

காட்டுத் தீ பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

மறுபக்கம், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவின் பிடியில் அமெரிக்காவின் சில மாகாணங்கள் சிக்கியுள்ளன. மத்திய அமெரிக்காவின் கேன்ஸஸ் முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள நியூ ஜெர்ஸி வரையிலான மாகாணங்கள் பனியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் குறைந்தது 5 பேர் பனிக்கு உயிரிழந்துள்ளனர்.

(நன்றி: பிபிசி தமிழ் )

  • இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here