தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் இளந்தலைமுறையினர் அப்பட்டப்படிப்பு சார்ந்து தாம் பெற்றுவரும் பட்டறிவுகளையும் பயன்பாடுகளையும் வெளிப்படுத்தி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருவதோடு தாம் சார்ந்த துறைகளிலும் உச்சந் தொட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 21.09.2025 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டமளிப்பு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் தமிழியல் பட்டப்படிப்பை 100 இற்கும் மேற்பட்ட இளந்தலைமுறையினர் மேற்கொண்டு வருவதோடு ஏற்கனவே கடந்த இரு பட்டமளிப்பு விழாக்களில் 20 இற்கும் மேற்பட்ட இளந்தலைமுறையினர் பட்டம் பெற்றுள்ளனர்.
மேற்குலகில் தமிழ் மொழியில் இந்தளவு எண்ணிக்கையான இளந்தலைமுறையினர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருவதும் பட்டம் பெறுவதும் பிரான்சிலுள்ள தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.