ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று காலை யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுத்தல், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கொண்டு நிரந்தரத் தீர்வை பெறல், இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் நிலங்களை விடுவித்தல், காணாமற்போனோர் குறித்து உரிய பதிலளித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்க்காத அதே நேரத்தில் அவற்றை மறைப்பதற்கான நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்களுக்கு எதிராகவே இந்த கறுப்புக் கொடி போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும் குறித்த போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள்; முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.