அன்பான பிரான்சு வாழ் தமிழீழ உறவுகளே !
01.01.2025
இனத்தின் சுபீட்சமான எதிர்காலத்தை மட்டுமே தம் இதயங்களில் நிறைத்துக்கொண்டு தங்களை அர்ப்பணிக்க மாவீரர்களையும், என்றுமே எங்கள் உள்ளங்களில் வாழும் எமது தேசியத்தலைவரையும் மனதிலிருத்திக்கொண்டு அனைவரும் தாயகத்துக்கான கூட்டுப்பணியில் ஒன்று சேருமாறு நீங்கள் அனைவரும் அழைக்கப்படுகிறீர்கள். காலவோட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள், கருத்து வேற்றுமைகளுக்காக இன்று செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தமக்கிடையே முரண்பட்டு நிற்கும் இப்போக்கைக் கைவிட்டு அனைவரும் இணைந்துவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். கடந்த 15 வருடங்களில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழப் பணியகத்தின் செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டின் போதாமைகள் ஏதாவது உங்களின் மனதைக் காயப்படுத்தியிருப்பின் அதற்காக தமிழீழ மண்ணையும் மக்களையும் தேசியத்தலைவரையும் நேசிக்கும் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் தாழ்மையுடன் எமது இதய பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
எமது தேசியத் தலைவர் நிகழ்த்திக்காட்டிய தமிழீழத்தேசக்கட்டுமானத்திறன் வரலாறாக எம்முள்ளங்களில் நிறைந்துகிடக்கிறது. அதன் வழியொற்றி தாயக மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களையும், அவர்களுக்குக் தோள் கொடுக்கக்கூடியதொரு பலமான புலம்பெயர் திரட்சியாக எம்ைைம ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டங்களையும் ஆராய்ந்து, ஆலோசித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுத்துவோம் ! அனைவரும் வாரீர் ! அழிக்கப்பட்ட கல்லறைகளை இதயங்களில் என்றுமே சுமக்கும் தமிழீழ மக்களிடையே பேதங்கள் தேவையில்லை. பெருங்கனவை நனவாக்கும் புலத்தின் பலமாக இணைவோம்.
அன்புக்குரிய பிரான்சு வாழ் தாயகச் செயற்பாட்டாளர்களே!
2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களில் எமது தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எம்மினம் சந்தித்துவரும் பின்னடைவுகளும் ஏமாற்றங்களும் நீங்கள் அறிந்தவையே. முழு உலகமே வியந்து பார்க்க எந்த ஒரு நாட்டினதும் அரவணைப்பில்லாத நிலையில் ஒற்றைக்தலைவனின் வழிகாட்டலில் ஈழத்தமிழினமாக ஓரணியில் நின்று மானுட விழுமியங்களையும் போரியல் அறத்தையும் கைவிடாமல் வெற்றிப்பாதையில் தனிப்பலத்தில் ஒருகாலம் வீறுநடைபோட்ட பெருமைக்குரிய இனம் நாம். எமது ஆக்கிரமிப்பாளனோ உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஒட்டுமொத்த உதவிகளையும் பெற்ற நிலையிலும், போரியல் தர்மங்களை முற்றிலும் மீறி இனவழிப்புப்போரை மேற்கொண்டவன். அப்போரின் கொடுந்துயர் ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும் இன்னும் மாறாத வடுவாய்க் கனத்துநிற்கின்றது.
அறத்தின்பாதையில் எமது விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட்டதாக எக்காளமிட்ட சிங்களம், எம்மை ஒடுக்குவதற்காக அது கொடுத்த விலையின் கடன் சுமையில் நசுங்கிக்கிடக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதிலிருந்து மீளுவதற்கான எந்த வாய்ப்பும் அதனிடம் இல்லை. இப்படியான சூழலிலும் சிங்களப்பேரினவாதம் கட்சிவேறுபாடுகள் கடந்து சத்தமில்லாமல் இனவழிப்புப்பொறிமுறையைத் தமிழீழத்தாயகப்பகுதிகளில் தொடர்ந்தும் திட்டமிட்டு முன்னெடுத்து வருவகை அனைவரும் அறிவீர்கள். எம் இனத்தின் காப்பரணாக விளங்கிய விடுதலைப்புலிகளின் அமைதிக்குப் பின் காயகத்திலுள்ள எமது மக்களின் தேசிய இருப்பைக் காக்கவேண்டிய பெரும் வரலாற்றுப்பொறுப்பு புலம்பெயர்வாழ் எமக்குள்ளது. ஆகவே எம்மினத்தின் இருப்பைக் காப்பதற்கான சகல தேவைகளையும் இனங்கண்டு எமது தேசியத்தலைவர் வழிகாட்டியவாறு அரசியல், பொருளாதார, கல்வி, தொழில்வாய்ப்பு சூழல்பாதுகாப்பு போன்ற அனைத்துத் தளங்களிலும் செயற்றிறனுடன் நாம் இயங்கவேண்டும். எனினும் அனைவரும் சேர்ந்து முன்னெடுக்கவேண்டிய இப்பணியில் துரதிஸ்டவசமாக நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். 2009 மே 18 பெருந்துயர் ஏற்படுத்திய மனத்தளர்ச்சி, விரக்தியுணர்வு எதிரியின் சூழ்ச்சிகள் கால இடைவெளி எனப் பலதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்தும் இதற்கு இடங்கொடாமல் நாம் இணைந்தெழ வேண்டியது இனி அவசியமாகும். அதற்கான அறைகூவலாகவே, 2009 மே வரையான காலம்வரை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த தாய்-அமைப்பு என்ற உறவுரிமையுடன் பிரான்சு-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உங்களை நாடுகிறது.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு