தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் முதுகலைமாணி பருவத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன . முதற்கட்டமாக 12 தேர்வர்கள் இத்தேர்வுகளில் தோற்றுகின்றனர். இவர்களில் தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ்-12 ஐ நிறைவுசெய்து தமிழியல் இளங்கலைமாணிப் பட்டம் பெற்ற இளையோரும் அடங்குகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது . அத்துடன் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்ச்சோலைகளில் ஆசிரியர்களாகவும் ஆசிரியப் பயிற்றுநர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.
பிரான்சில் தமிழ்மொழிக் கல்வியின் தகுதிநிலையை மேம்படுத்தும் குறிக்கோளோடு ஆசிரியர்களுக்கான பட்டயநெறியுடன் (Diploma in Tamil Teaching ) மேலதிகமாக முதுகலைமாணிக் கல்வியும் (M.A Tamil) இணைந்துள்ளமையானது ஐரோப்பிய மண்ணில் தமிழ்மொழிக்கல்வி நிறுவனவயப்படுத்தப்படுவதற்கான முதற்படியாக கொள்ளமுடியும் என மொழியியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் கடந்த 2023 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட நேரடி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரான்சில் முதுகலைமாணி (M.A Tamil) கற்கைநெறி கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்படி தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினூடாக இளங்கலைமாணிப் பட்டப்படிப்புகள் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.