பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற 15 ஆவது “சங்கொலி – 2024” தேச விடுதலைப் பாடல் போட்டி!

0
164

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு. பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தும் தாயக விடுதலைப் பாடற் போட்டி சங்கொலி தேசவிடுதலைப் பாடற் போட்டி நிகழ்வு நேற்று (22.12.2024) ஞாயிற்றுக்கிழமை செந்தனி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.00 மணிக்கு பொதுச்சுடரினை செந்தனி பிராங்கோ தமிழ்ச்சங்க தலைவர் திரு விமலேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக் மாவீரர்கள் நினைவு திருவுருவப்படத்திற்கு முன்பாக ஈகைச்சுடரினை 20.11.2007 அன்று மன்னார் பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ஆம் லெப் வைகைக்குமரன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வில் கீழ்ப்பிரிவு, பாலர் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதி மேற்பிரிவு, அதிஅதி மேற்பிரிவு, சிறப்புப்பிரிவு என்ற 7 பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இப்போட்டி நிகழ்வில் நடுவர்களாக மிருதங்க வித்துவான் திரு.கண்ணதாசன்ஜஅவர்கள்,
மிருதங்க ஆசிரியர் திரு. மரியநாயகம் கட்சன்  அவர்கள், தாயகப் பாடகி திருமதி பிறின்சி ரஞ்சித்குமார் அவர்கள்
ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

முதற்போட்டியாக கீழ்பிரிவுக்கான போட்டி இடம் பெற்றது. தொடர்ந்து பாலர் பிரிவுக்கான போட்டிகளோடு தொடர்ந்து போட்டிகள் இடம் பெற்றன. போட்டியாளர் குழந்தைகள் தமது பிஞ்சு மழலை மொழியில் பாடல்களை தத்துரூபமாக வழங்கியிருந்தனர். அதற்கேற்றவாறு கலைபண்பாட்டுக்கழக வாத்தியக்கலைஞர்கள் தமது அற்புதமான இசையை வழங்கியிருந்தனர்.
சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் வழங்கியிருந்தார்.

ஆண்டு தோறும் தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி நிகழ்வு நடாத்திவருவதையும், இந்த ஆண்டு 14 ஆவது ஆண்டினை தொட்டிருக்கும் இவ்வேளை பிரான்சு நாட்டிலே எமது கலைஞர்களை அவர்களின் பாடல்திறனினை ஊக்குவித்து அவர்களின் அற்புத திறனை மக்கள் முன் இனம்காட்டி பாடகர்களாக்கி தாயக விடுதலையோடும் பலபாடல்களையும், பாடல் வரிகளையும் தந்து மண்ணில் மாவீரர்களாகிப் போனவர்களின் மாண்பை வெளிக்காட்டி வெற்றியடையச் செய்யும் ஒரேயொரு களமாக சங்கொலி பாடற்போட்டி மட்டும்தான் அமைந்திருக்கின்றது என்றும், கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆக்கமும், ஊக்கமும் இது போன்ற போட்டி முன்னெடுப்புக்களும்தான், பிரான்சில் பலரை பாடகர்களாகவும், கலைஞர்களாகவும், இசையமைப்பாளர்களாகவும் உருவாக்கி விட்டுள்ளது என்றும், எனவே இக்கலைஞர்கள் தாம் எப்படி கலைபண்பாட்டுக்கழகத்தால் ஊக்கிவித்து உருவாக்கப்பட்டார்களோ அதேபோலவே இனிவரும் எம் கலைக்குழந்தைகளுக்கு இவர்கள் நன்றியோடு, தேசவிடுதலைப்பாடற்போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்கிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


இந்நிகழ்வில் சிறப்பாக மதிப்பளித்தல் நிகழ்வும் நடைபெற்றது. சங்கொலி நிகழ்வில் ஆண்டு தோறும் தாயகவிடுதலைப் போராட்டத்திற்கு பிரான்சு மண்ணிலே கலையாலும், மொழியாலும், விளையாட்டு, குமுகாயப் பணியிலும் இன்று வரை பணியாற்றியவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற தேசியத்தின் விருப்பிற்கமைய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ‘ விடுதலையின் வேர்கள் ‘ என்ற பட்டத்தை வழங்கியும் மதிப்பளித்து வருகின்றது.


பரப்புரைப் பொறுப்பாளர் விடுதலையின் வேர் அறிக்கையை வாசித்தளிக்க தமிழர் கலைப்பணியால் மக்கள் முன் நன்கு அறிமுகமான பரதநாட்டிய ஆசிரியர் கலாவித்தகர். திருவாட்டி. செந்தூரன் விநோதா அவர்களுக்கு “ விடுதலையின் வேர் ’’ என்ற உயரிய விருது வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டது.

குறித்த மதிப்பளித்தலினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் – பிரான்சு பொறுப்பாளர் திரு.மாறன், துணைப் பொறுப்பாளர் திரு.செல்வா ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கும், வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கும், கடமையாற்றிய நடுவர்கள் , மற்றும் கட்டமைப்புப் பொறுப்பாளர், பரிசில்களையும், வெற்றிக் கேடையங்களையும், பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்பு செய்திருந்தனர்.
இசைகளை வழங்கிய வாத்திய இசைக்கலைஞர்களும் மேடையில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டு சிறந்த பாடகராகவும் ‘ சங்கொலி’ விருதுக்கு உரியவராகவும் செல்வி. திருவருள் லேயா அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டுகளில் சங்கொலி விருதினை பெற்றவர்கள், இசைக்கலைஞர்கள், நடுவர்கள் , கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் மத்தியில் மக்களின் கரகோசத்தோடு செல்வி திருவருள் லேயா அவர்களுக்கு ‘சங்கொலி’ 2024 விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.


2024 தாயகவிடுதலைப்பாடற்போட்டியில் அனைத்து பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்னர் இணைக்கப்படும்.

தாயக விடுதலைப் பாடற்ப் போட்டி சங்கொலி 2024 நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரக மந்திரத்தோடு இனிதே நிறைவு பெற்றது.

(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here