ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.
பெல்ஜியம், ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தை செலுத்தி இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாங்கள் முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம். தற்போது ரஷ்யாவின் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் போர் நடைபெறும் எல்லைக்கு அருகில் தான் உள்ளோம். எம்முடன் பாலச்சந்திரன் என்பவரும் உள்ளார்.
ஒவ்வொரு நாளும் போர் உக்கிரமாக இடம்பெறுகிறது. நாங்கள் இருக்கின்ற இடத்துக்கு அருகில் ஆட்லறி எறிகணைகளும், ட்ரோன் மூலமான தாக்குதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் தற்போதும் இருக்கிறோம்.
எங்களுடன் இருந்த 19 இலங்கையர்களில் 3 பேர் இறந்துவிட்டார்கள். ஒருவரைக் காணவில்லை. அவர்களில் பலர் இலங்கை இராணுவம், கடற்படை போன்றவற்றில் இருந்தவர்கள். அவர்கள் கூட அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். எங்களால் போர் எல்லையில் தொடர்ந்தும் இருக்க முடியாது.
எமது உயிருக்கு உத்தரவாதமில்லை. தயவு செய்து எம்மை மீண்டும் இலங்கைக்கே செல்வதற்கு யாராவது நடவடிக்கைகளை எடுங்கள். நாங்கள் மிகத் தாழ்மையாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். எங்களை உறவுகளுடன் இணைத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, குறித்த இளைஞர்களின் உறவினர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு மேற்படி விடயம் சம்பந்தமாக எடுத்துரைத்தபோது, ரஷ்யா இலங்கையில் இருந்து எவரையும் போருக்காக இணைத்துக்கொள்ளவில்லை என்றே பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெளிவிவகார அமைச்சிடம் இந்த இளைஞர்களின் விடயம் சம்பந்தமாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று வினவி வாரமொன்று கடந்துள்ளபோதும் இதுவரையில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி: வீரகேசரி)