இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சிங்கள மக்களை நோக்கி மிகக் காத்திரமான உரையொன்றை நிகழ்த்தினார்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸவிகாரையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த உரையானது, தமிழர்கள் ஒருபோதும் பெளத்தத்திற்கு எதிரானவர்கள் அல்லர் என்பதையும், ஒருபோதும் தம் நியாயமான அரசியல் கோரிக்கைகளை எடுத்துச்செல்ல இனவாதத்தைக் கையிலெடுக்கவில்லை என்பதையும் ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தினார். உண்மையில் இந்த உரை சிங்கள மக்களின் கருத்துருவாக்கத் தளங்களுக்கு செல்லவேண்டியது. ஆனால், தெற்கிலிருக்கின்ற ஆங்கில, சிங்கள ஊடகங்கள் ஒருபோதும் அதனைச் செய்யாது. அண்மை நாட்களாக அர்ச்சுனா எம்.பியின் குழறுபடிகளுக்கே தெற்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தமிழர்கள் தம் அரசியல் அபிலாசைகளைக் கைவிட்டு, கோமாளிகளாகிவிட்டனர் என்கிற “படத்தை” அர்ச்சுனாவை வைத்துக் காட்டத் தொடங்கியிருக்கின்றன. எனவே இந்த ஆபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும் தமிழர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவாவது இதுபோன்ற உரைகள் அவசியப்படுகின்றன.