பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர் ஒன்றின் நகரமான நியூலிசூர்மாறன் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 26 ஆவது ஆண்டு விழா கடந்த 14.12.2024 சனிக்கிழமை நடைபெற்றது.
மதியம் சரியாக 13.00 மணிக்கு நியூலிசூர்மாறன் துணை முதல்வர் EFTEKHARI – Maire adjointe déléguée à la culture et aux associations culturelles , மற்றும் இங்குள்ள பல்லின நாட்டு கலாசார பிரிவுக்கு பொறுப்பானவரும், Gaëlle OBADIA PLARD – Directrice des affaires culturelles மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புப் பிரதிநிதிகள், தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலைப் பிரதிநிதிகள், தமிழ்ச்சங்கத்தினர், பெற்றோர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறைஇசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு 1993 அன்று தவளைப்பாய்ச்சல் சமரில் வீரச்சாவடைந்த கப்டன் திலகர் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கத்தை செய்திருந்தார். தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் அகவணக்கம் இடம் பெற்றது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றலினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புபின் பொறுப்பாளர் திரு. பரராசசிங்கம்,, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு நாகயோதீஸ்வரன் அவர்களுடன் நியூலிசூர்மாறன் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர் திரு. கணநாதன், நிர்வாகி திருவாட்டி. கோமதி குணரட்ணம் அவர்கள் மற்றும் துணை நிர்வாகி திருவாட்டி.கேணேஸ்வரி ஆகியோர் ஏற்றி வைத்ததுடன் தமிழ்ச்சோலைக்கீதம் இடம் பெற்றது.
வரவேற்புரை தமிழ், பிரெஞ்சு மொழிகளில் இடம் பெற்றது. மாணவர்கள் மகிழ்பறை இசை நடனத்தை வழங்கியிருந்தனர். நடன மாணவியரது வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து கிராமிய நடனம்,அபிநயப்பாடல், பெரியோர் வேடம், நாட்டிய நாடகம், காவடி நடனம் கண்ணன் இசை, வில்லிசை எழுச்சி நடனங்கள், தமிழ்மொழிக் கவிதைகள், இடம் பெற்றன. விருந்தினர்களாக வந்திருந்த மாநகர துணை முதல்வர், மற்றும் கலாச்சாரத்துக்கு பொறுப்பானவர்கள் உரையாற்றினர். தமிழர்களின் கலை, கலாசாரத்தை கண்டு மகிழ்ந்ததாகவும், தாய் மண்ணை விட்டு வந்தாலும் அவற்றை மறந்து விடாது அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதையும், கொண்டு செல்வதையும் இட்டு சந்தோசமடைவதாகவும் ஆற்றினார்கள். தொடர்ந்து இடைவேளை விடப்பட்டது. இடைவேளையைத் தொடர்ந்து இசைவும், அசைவும், தமிழ்த்தாயின் குரல், சிலப்பதிகாரம் நாடகம், கவிதை, பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன் அவர்கள் மதிப்பு உரையை ஆற்றியிருந்தார். நியூலி சூர்மாறன் தமிழ்ச்சோலை மாணவர்களின் தாய்மொழிப்பற்றும் அதன் பெறுபேறுகள் பற்றியும் பங்களிப்புப் பற்றியும் தெரிவித்திருந்தார்.
ஆசிரியர்களும் அவரால் மதிப்பளிக்கப்பட்டனர். தொடர்ந்து குரலிசை, கிராமிய நடனம், எழுச்சி நடனம் சிறப்புரை என்பன இடம் பெற்றன. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக சிறந்த பணியை பலவழிகளில் இச்சங்கம் செய்திருந்தமையையும், எதிர்பாராத ஒரு திருப்புமுணைக்கு சென்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பதியதையிட்டும் அதற்கு பெரும் பலமாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார்.
வாழ்விட நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள், எம் தாயகத்தின் இன்றைய அரசியல் போக்குகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இந்த தமிழ்ச்சோலையிலும், இதேபோன்று பிரான்சில் 76 தமிழ்ச்சோலைகளில் கற்றிருக்கின்ற மாணவ, மாணவிகள் இன்று மிகப் பெரும் தலைசிறந்த இடத்தில் பணியாற்றி வருவதையும் அவர்கள் தாம் வளர உயர உறுதுணையாக இருந்த தமிழ்ச்சோலையையும் மறக்காது உதவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பறைஇசை பயிற்றுவித்த கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவிகள், பொதுத்தேர்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
நன்றியுரையுடன் தமிழ்மொழி வாழ்த்துடன் 26 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இரவு 9.30 மணிக்கு நிறைவு பெற்றது.
நன்றி
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு.