பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

0
226

vikiஇன்றைய சம காலத்தில் நல்ல பல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வஞ்சகம், பொறாமை, சூது என எந்த மார்க்கமும் போதிக்காத பல தீய பழக்க வழக்கங்களை எம்மிடத்தே சேர்த்துக் கொண்டு எந்த நேரமும் ஏனையோர்க்கு இடைஞ்சலாக இருத்தல் அல்லது ஏனையோரின் சொத்துச் சுகங்களை நாம் அபகரித்துவிட வேண்டும் என்ற மிகக் கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறியுள்ளோம் என வட மாகான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அறிவுமைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசியதிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் மற்றும் தொழில் நுட்ப பீடம் ஆகிய கட்டடிடங்களை திறந்து வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ் பாடசாலை அதிபர் செ.செல்வரஞ்சன் தலைமையில் நேற்று நடைபெற்ற இவ் விழாவில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இங்கு தொடர்ந்து பேசுகையில்,

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகா வித்தியாலய தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். உங்கள் கல்லூரியின் தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றை வடமாகாண முதலமைச்சரே திறந்து வைக்க வேண்டும் என்பதில் கௌரவ றயீஸ் அவர்கள் மிகவும் குறியாக இருந்தார். உங்கள் கல்லூரி விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னர் எப்படியாவது இதனைத் திறந்து வைக்க வேண்டும் என மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் கடந்த வருட செலவீனங்களை முடிவுறுத்துகை, 2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு என பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் என்னால் கலந்து கொள்ள முடியாமையை வினையமாக எடுத்துக் கூறியிருந்தேன்.

அவரோ விட்ட பாடில்லை. பாடசாலை தொடங்கியதும் திறப்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார். இதற்குப் பின்னரும் நான் வராவிட்டால் மிகப் பெரிய தவறொன்றை இழைத்தவனாக மாறிவிடுவேன் என்ற காரணத்தினால் மறு பேச்சுப் பேசாது அவர் குறிப்பிட்ட திகதியிலே வந்து சேர்ந்து விட்டேன்.

நேற்றைய தினம் சிலர் என்னை வராது தடுக்க சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதை அவர்கள் அறியாமல் விட்டது மனவருத்தமாக இருக்கின்றது. கௌரவ ரயிஸ் அவர்களின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்.

உங்கள் கிராமம் பற்றி, இக் கல்லூரி பற்றி பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் கிராமத்தின் அழகு பற்றியும் இங்குள்ள மக்களின் நல்ல பழக்கவழக்கங்கள் பற்றியும் ஏனைய இன மக்களுடன் நீங்கள் பேணி வருகின்ற நல்ல உறவுகள் பற்றியும் மிகவும் பெருமையாகக் கூறினார்கள். இதனை கேள்வியுற்று நான் மிகவும் மகிழ்வடைந்தேன். எப்படியாவது வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைவு நனவாகியுள்ளது.

எமது மார்க்கங்கள் வேறுபட்டிருக்க முடியும். ஆனால் தமிழர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகவே வாழ்கின்றோம். எனக்கு சகல மக்களும் ஒன்றே. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று எமக்குப் பாகுபாடில்லை. இறைவன் படைப்பிலே யாவரும் சமமே.

உங்களது கல்லூரியின் சிறப்புப் பற்றியும் கேள்வியுற்றுள்ளேன். 1945களில் இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமன்றி கிறீஸ்தவ மாணவ மாணவியர்கள் மற்றும் இந்து மாணவ மாணவியர்கள் வடமாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இங்கு வந்து கல்வி கற்றுப் பயனடைந்து மிக நல்ல நிலையில் பல்வேறு பதவிகளில் இருக்கின்றார்கள் என்று காண்கின்றேன். பழைய மாணவ மாணவியர் பலர் ஓய்வு பெற்ற நிலையிலும் சிலர் இன்னமும் சேவையில் இருப்பதையுங் காணக்கூடிய மகிழ்வான ஒரு நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன என எண்ணிப் பார்க்கின்றேன். இற்றைக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மிகவும் அமைதியாகவும் அன்னியோன்னியமாகவும் இலங்கையின் எப் பாகத்திலும் எந் நேரத்திலும் கடமையாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்ததை நினைவு கூறிகின்றேன். அப்போது மக்களிடையே போட்டித் தன்மை மிகக் குறைவு. தாமுண்டு தமது வேலை உண்டு என கருமமே கண்ணாக இருந்தார்கள்.

அயலவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ ஒரு இடைஞ்சல் அல்லது துன்பம் என்று வந்து விட்டால் ஆளுக்கு ஆள் முண்டியடித்துக் கொண்டு உதவி செய்வதற்கு ஓடி வருவார்கள். இன்று அந்த நிலை காணப்படவில்லை. நல்ல பல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வஞ்சகம், பொறாமை, சூது என எந்த மார்க்கமும் போதிக்காத பல தீய பழக்க வழக்கங்களை எம்மிடத்தே சேர்த்துக் கொண்டு எந்த நேரமும் ஏனையோர்க்கு இடைஞ்சலாக இருத்தல் அல்லது ஏனையோரின் சொத்துச் சுகங்களை நாம் அபகரித்துவிட வேண்டும் என்ற மிகக் கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறியுள்ளோம்.

இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எமக்கு தொழில் செய்ய விருப்பமில்லை. வருந்தி உழைத்து சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைவதற்கு எமது சோம்பல்த்தனம் இடம் கொடுப்பதில்லை. எதற்கெடுத்தாலும் ஏனையவர்களின் கைகளையே நம்பி நம்பி வாழப் பழகி அப்பழக்கத்தின் மறுவடிவமாகவே தற்போதைய நிலை தோன்றிவிட்டதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

எனினும் எருக்கலம்பிட்டி மக்களுக்கு இந்தக் குணம் தொற்றிக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. அது ஏன் எனப் பார்த்தால் இக் கிராமம் மிகக் குறைந்த நிலப்பரப்பையும் மிகக் கூடிய மக்களையும் கொண்ட ஒரு முஸ்லீம் கிராமம்.

இக் கிராமத்தின் மூன்று பகுதிகள் கடலினால் சூழப்பட்டதும் மறு பகுதி மன்னார் பகுதியுடன் தரை வழி இணைப்பைக் கொண்டதுமான ஒரு கிராமம். இங்குள்ள மக்களுக்கு தொழிலுக்குப் பஞ்சமில்லை. இத் தீவைச் சுற்றி கடல் வளங்கள் நிறைந்திருப்பதால் கடல்த் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது கடற்தொழிலிலும், கடல் கடந்த வர்த்தகம், உள்ளூர் வர்த்தகம், விவசாயம் என பல்வேறு தொழில் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியாகவும் பாரபட்சமற்றவர்களாகவும் மூவினத்தவர்களையும் நேசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இக் கல்லூரி ஒரு முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயமாக காணப்படுகின்ற போதிலும் இக் கல்லூரி ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை மிகக் கூடுதலாகத் தமிழர்களே அதிபர்களாக இருந்துள்ளனர் என்று கேள்விப்படுகின்றேன்.தற்போதைய அதிபரும் அப்படித்தான்.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து கூட பல மாணவர்கள் இங்கு வந்து பாடசாலை விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்று நல்ல நிலைகளில் இருக்கின்றார்கள் என்றும் அறிகின்றேன். இப்படிப்பட்ட ஒரு பாடசாலையின் ஆய்வுகூடம் மற்றுந் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை அமைத்துக் கொடுப்பதென்பது காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்தது.

அன்பார்ந்த மாணவர்களே! இதுவரை நேரமும் நான் உங்கள் கிராமத்தைப் பற்றி எடுத்துக் கூறியது இங்கே வந்திருக்கக்கூடிய உங்கள் பெற்றோர்களுக்காகவோ அல்லது ஆசிரியர்களுக்காகவோ அல்ல. சிறு பிள்ளைகளாகிய நீங்கள் எப்படி ஏனைய இன மக்களுடன் அன்புடன் வாழ வேண்டும், எமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற உண்மையை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே மேற் குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு எடுத்துக் கூறினேன்.

இந்த அவசர உலகத்தில் அனைவரும் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள். சீரிய வாழ்க்கைமுறை, ஒழுக்கம், வர்த்தகத்தின் உண்மைத்தன்மை, மார்க்கத்தின் வழிமுறை அனைத்தையும் தொலைத்துவிட்டு என்ன இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள்.

தமது பிள்ளைகளையே இழந்துவிடக் கூடிய போதைப் பொருள் கடத்தல், மது பாவனை போன்ற தொழில்களை சிலர் மேற்கொள்வதன் மூலம் நாம் பாரிய பின்னடைவுகளையும் பயங்கர பின்விளைவுகளையும் விரைவாக எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதுவரை காலமும் மிகச் சிறப்பாக வாழ்ந்து வந்த எமது மக்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை எவ்வாறு பரவியது? இதற்கான காரணம் யாது? எங்கிருந்து இவை எடுத்து வரப்படுகின்றன? என்ற பல கேள்விகள் எம்முன் எழுகின்றன.

தினசரிப் பத்திரிகைகளை பார்த்தீர்களாயின் ‘மாதகலில் நூறு கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது’. ‘மன்னாரில் கஞ்சா களஞ்சியம் கண்டுபிடிப்பு’ என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவை எமது மனத்திற்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது. மாதகலிலும் மன்னாரிலும் உள்ள மக்கள் என்ன கஞ்சா செடியா பயிரிடுகின்றார்கள்? யாரோ அவற்றை இங்கெல்லாம் அறிமுகப்படுத்துகின்றார்கள் என்பது தான் உண்மை.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். இல்லையேல் நாம் அனைவரும் எமது வருங்கால சந்ததியினரைத் தொலைத்தவர்களாக மாறிவிடுவோம். எனவே அன்பார்ந்த பெற்றோர்களே, மாணவ மாணவியர்களே நீங்கள் இவை குறித்து மிகவும் உன்னிப்புடன் செயற்பட வேண்டிய காலம் இது. போதைப் பொருட்கள் பற்றி மிகவும் கவனமாக இருங்கள். அவற்றோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாதீர்கள். சம்பந்தப்படுபவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.

பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளில் ஏதாவது மாற்றங்கள் தென்பட்டால் அவை குறித்து மிக அவதானமாக நெருங்கி ஆராயுங்கள். அதற்காகப் பிள்ளைகளைக் கடுமையாக கண்டித்துவிடாதீர்கள். பிள்ளைகளுடன் அன்பாகவும் அரவணைப்புடனும் அதே நேரம் பழக்கவழக்கங்கள் குறித்து கூடிய கண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்க்க முற்படுங்கள். எங்கள் பிள்ளைகள் தான் எங்களின் உண்மையான சொத்தும் சுகமும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அது போன்று மாணவர்களுக்கும் நான் அறிவுரை ஒன்றை கூற வேண்டும். உங்களுக்குப் பழக்கமில்லாதவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். அவர்கள் தருகின்ற தின்பண்டங்களையோ அல்லது இனிப்புக்களையோ வாங்க வேண்டாம். வாங்கினாலும் உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் போதைப் பொருள் பழக்கவழக்கங்களுக்கு உங்களை ஆளாக்குவதற்குப் பல வழிகளிலும் சூத்திரதாரிகள் முயன்று வருகின்றார்கள்.

நாம் விழிப்பாக இருந்தால் எம்மை எவரும் மாற்றிவிட முடியாது என்ற செய்தியை உங்களுக்குத் தெரிவித்து வைக்கின்றேன். இன்றைய இந்த நல்ல நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்பக் கூடம் என்பனவற்றின் உச்சப் பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உங்கள் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

(வாஸ் கூஞ்ஞ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here