யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த மகிந்த துரையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும், கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலுத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையிலும் இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் சரி இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே சுகாதாரத்திலும் சரி கல்வியிலும் சரி யாரையும் கைவைக்க விடமாட்டேன்.
கடந்த 3 வருட காலத்தில் பாதிப்படைந்திருந்த கல்வியை மீண்டும் வடக்கில் மீட்டெடுத்துள்ளோம். அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில் தேசிய ரீதியில் கணித பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளமையை இதற்கு உதாரணமாக கூறமுடியும்.
வடமாகாண சபைக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ள போதும் 50 வீதமான அபிவிருத்திக்குகூட மக்களுக்காக ஆளும் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செலவழிக்கவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிள்ளைகள் வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகள் இந்நாட்டில் எனவே எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களே. நீங்கள் என்னை நம்பலாம் உங்களை நான் என்றும் பாதுகாப்பேன் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல என்னுடன் இணையுங்கள் – என்றார்.