2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறரை வருடங்களை கடந்த பின்னரும் கூட, முள்ளியவளை பிரதேசத்திலுள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல், அந்த கிராமத்தை ‘உயர் பாதுகாப்பு வலயம்’ என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
கேப்பாப்புலவு கிராமத்துக்கு மாற்றீடாக, உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகேயுள்ள காடுகளை அழித்து புதிய குடியேற்றம் ஒன்றை தோற்றுவித்து அதற்கு ‘கேப்பாப்புலவு மாதிரி கிராமம்’ என்று பெயர் வைத்து, அங்கு ‘சொந்த நிலத்துக்குரிய மக்கள் காலாதிகாலத்துக்கும் அகதிகளாக’ பலவந்தமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ¼ ஏக்கர் அளவில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, தற்போது அங்கு 60 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கேப்பாப்புலவு மாதிரி கிராமம், சிறீலங்கா இராணுவத்தின் 59வது டிவிசன் படையணியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமம் ஆகும். இந்தநிலையில், 59வது டிவிசன் படையணியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர்…
மாதிரிக்கிராமத்தில் வசித்துவரும் 26 வயதுடைய குடும்பப்பெண்ணின் கணவர் (முன்னாள் போராளி) மாலை வேளைகளில் முல்லைத்தீவு சிறுகடலில் (நந்திக்கடலில்) மீன்பிடி தொழிலுக்கு செல்லும் நாள்களில், குறித்த குடும்பப்பெண்ணின் வீட்டை உளவு பார்க்கும் அநாகரிக நடத்தையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த குடும்பப்பெண் பாத்திரங்கள் துலக்கும் போதும் – குளிக்கும் போதும், இராணுவ சிப்பாய் வேலி பிரித்து எட்டிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பலதடவைகள் இதனை அவதானித்துள்ள குறித்த குடும்பப்பெண் சம்பவம் தொடர்பில் தனது கணவரிடம் முறையிட்டுள்ளார்.
கணவரும் அவரது நண்பர்களும், ‘கையும் மெய்யுமாக’ இராணுவ சிப்பாய்யை பிடிப்பதற்கு திட்டமிட்டு காத்திருந்துள்ளனர்.
08.01.2016 அன்று முன்னிரவில் நடந்தது என்ன?
திட்டமிட்டவாறு தொழிலுக்கு செல்லாமல் கணவரும் அவரது நண்பர்களும் மறைந்திருந்தபோது, 6.45 மணியளவில் குறித்த இராணுவ சிப்பாய் சிவில் உடையில் வந்து வீட்டு வேலியை பிரித்துள்ளார்.
மறைந்திருந்தவர்கள் இராணுவ சிப்பாய்யை பிடித்து, அங்கிருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து பலமாக நயப்புடைந்துள்ளனர். சம்பவம் அறிந்து திரண்டு வந்த கிராம மக்களும் இராணுவ சிப்பாய்யை கூட்டாக தாக்கி நயப்புடைத்துள்ளனர். இதனால் கிராமத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டு விட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 7.00 மணியளவில் விரைந்து வந்த 59வது டிவிசன் படையணியின் மேலதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு கன்னத்தில் பலதடவைகள் அறைந்துவிட்டு, அவனை காப்பாற்றி தமது முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பொலிஸாரும் உடந்தை !!!
மறுநாள் (09.01.2016) கிராம அபிவிருத்திச்சங்கத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம், காலை 8.00 மணியளவில் முள்ளியவளை பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை பதிவுசெய்ய, பாதிக்கப்பட்டுள்ள குடும்பப்பெண்ணும் அவரது கணவரும் சென்றுள்ளனர்
‘முறைப்பாடு பதிவு செய்ய முடியாது என்றும், 59வது டிவிசன் படையணியின் கட்டளை அதிகாரி விடுமுறையில் சென்றிருப்பதால், அவர் 14.01.2016 அன்று திரும்பி வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்றும்’ கூறி பொலிஸார் முரண்டு பிடித்துள்ளனர்.
‘தமக்கு இராணுவத்தினர் ஏதாவது செய்யக்கூடும் என்று தாம் அச்சப்படுவதாகவும், தமக்கு பாதுகாப்பு தருமாறும்’ குறித்த குடும்பப்பெண்ணும் அவரது கணவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கும், பொலிஸார் ‘பாதுகாப்பு எல்லாம் தர முடியாது’ என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
பொலிஸார் தமது முறைப்பாட்டை பதிவு செய்ய மறுக்கும் சம்பவம் தொடர்பில் அவர்கள் முள்ளியவளையிலுள்ள மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஒருவரிடம் தெரிவித்ததையடுத்து, அந்த செயல்பாட்டாளர் தனது பணி சார்ந்த மனித உரிமைகள் அமைப்பின் கொழும்பிலுள்ள தலைமைக்காரியாலயத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கொழும்பிலிருந்து முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மனித உரிமைகள் அமைப்பினரால்,
‘பாதிக்கப்பட்டுள்ளவர்களின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அடுத்து தமது நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?’ என்றும் பொலிஸாருக்கு காரசாரமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தியதா பொலிஸ் ???
இதனையடுத்து குடும்பப்பெண்ணின் கணவருக்கு நண்பகல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட பொலிஸார், ‘மாலை 4.00 மணியளவில் வாக்குமூலம் பதிவுசெய்ய வீட்டுக்கு வருவோம். எங்கும் போய் விடாதீர்கள்’ என்று கூறிவிட்டு, மாலை அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மாலை 6.00 மணியளவில் குறித்த குடும்பப்பெண்ணும் அவரது கணவரும் கிராம மக்களிடம், ‘இந்தப்பிரச்சினையை இதோட விட்டு விடுவம். யாரும் இதை பெரிசுபடுத்த வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தினரை, ‘கடத்தி காணாமல் போகச்செய்வோம். அல்லது கொலை செய்வோம்’ என்று பொலிஸாரும் – இராணுவத்தினரும் மிரட்டியிருக்கலாம்’ என்று தாம் உறுதியாக நம்புவதாக கேப்பாப்புலவு மாதிரி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-மிஸ்டர்.கழுகுகண்-