சிரியாவில் வட மேற்கு இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையொன்றை இலக்கு வைத்து ரஷ்ய போர் விமானங்களால் நேற்று நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 21 பொதுமக்கள் உட்பட 57 பேர் பலியாகியுள்ளதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
மாரெத் அல் நுமான் நகரிலுள்ள சிறைச்சாலை வளாகத்தை இலக்குவைத்து போர் விமானமொன்று 4 ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்நிலையில் மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 21 பொதுமக்களும் 29 கிளர்ச்சியாளர்களும் 7 கைதிகளும் உள்ளடங்குவதாக மனித உரிமைகள் அவதான நிலையம் கூறுகிறது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய விமானங்கள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ராவின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்படி நகரிலுள்ள சிறைச்சாலை மீது மட்டுமல்லாமல் அங்குள்ள சந்தை மற்றும் நீதிமன்ற கட்டடம் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக பிராந்திய செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதல்களில் மொத்தம் பெருந்தொகையான உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.