பொதுவில் ஒரு அமைப்பின் உருவாக்கத்தின் போது அது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுமாயின் அந்த அமைப்பின் உருவாக்கம் பெருவெற்றி என்று குறிப்பிடலாம்.
அதிலும் தமிழ் மக்கள் பேரவை மிகவும் அமைதியாக தனது பணியை முன்னெடுத்துச் செல்லும் போது, அந்த அமைப்புக் குறித்த விமர்சனங்கள் கடுமையாக இருப்பது அந்த அமைப்பு மக்கள் மத்தியில் வெற்றி பெற்று விட்டது என்றும் மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டது என்றும் பொருள்படும்.
இவ்வாறு ஆரம்பித்த உடனேயே தமிழ் மக்கள் பேரவை சர்வதேசம் முழுவதிலும் பேசுபடுபொரு ளாகியதன் இரகசியம் என்ன என்றொரு கேள்வி எழுமாயின், எல்லாம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமையில் வடக்கின் முதலமைச்சர் இடம்பெற்றிருப்பதுதான் என்று கூறிக்கொள்ளலாம்.
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தமிழ் மக்கள் தங்களின் மரியாதைக் குரிய தலைவராகப் பார்க்கின்றனர்.
நேர்மை, நீதி, உண்மை என்ற உயர்பண்புகளின் தோற்றமாக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை தமிழ் மக்கள் பார்ப்பதன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியோ அல்லது மாற்றுத் தலைமையோ அல்ல என்று பேரவையின் ஏற்பாட்டுக்குழு பகிரங்கமாக அறிவித்த நிலையிலும் பேரவை தமது எதிர்கால அரசியல் சத்துருவாகி விடுமோ என்ற பயம் தமிழ் அரசியல் தலைமையை கடுமையாகப் பாதிக்கவே செய்துள்ளது.
ஒரு பலமான அரசியல் தலைமை இத்துணை தூரம் தமிழ் மக்கள் பேரவையின் உதிப்புக் கண்டு வெகுண்டெழுவது அர்த்தமற்றது. அரசியல் என்றால் அதனை தீர்மானிப்பவர்கள் மக்கள் என்பது தெரிந்த உண்மை. இருந்தும் மக்கள் தீர்மானிப்பார்கள் என்று ஆறுதலாக இருக்க முடியவில்லை என்றால், எங்கோ பிரச்சினை இருக்கின்றது என்பதே பொருள்.
அதாவது தமிழ் மக்கள் எங்களைக் கைவிட்டு விடுவார்களோ என்ற ஏக்கம் இருக்கும் போதே பேரவையைக் கண்டு பயம் கொள்ளல் ஏற்புடைய தாகும்.
இருந்தும் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாயின்; அரசுடன் சேர்ந்து நாங்கள் அடைய உள்ள தீர்வுத்திட்டம் இதுதான் என்று தமிழ் மக்களுக்குப் பகிரங்கப்படுத்துமாயின் எங்கள் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்வர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தமது அரசியல் தலைமைகள் தங்களோடு இருந்து தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். தாம்படும் அவலத்தைப் போக்க வேண்டும் என்பதுதான்.
இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யுமாயின், தமிழ் மக்கள் பேரவை என்ற ஒளியைக் கண்டு பயம் கொள்ள வேண்டியிராது.
பொதுவில் இருளைக் கண்டு சிறுவர்கள் பயம் கொள்வர். ஆனால் இங்கோ பெரியவர்கள் ஒளியைக் கண்டு பயம் கொள்கிறார்கள் என்பதாக நிலைமை இருப்பதுதான் இங்கு துரதிர்ஷ்டமானது.