பிரான்சில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் மா. ஜெயசோதி அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
33

நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! ஆர்ஜொந்தே பகுதியில் நேற்று 01.12.2024 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. பொதுச்சுடரினை ஆர்ஜெந்தே பிராங்கோ தமிழ்ச்சங்க துணைத்தலைவர் திரு. பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களுடைய புதல்வி ஏற்றி வைக்க அவரின் துணைவியார் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் சுடர் வணக்கம் மலர் வணக்கம் செய்திருந்தனர். நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்கள் பற்றிய நினைவுப்பகிர்வை பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சச்சிதானந்தன் அவர்களும் ஆசிரியர், கவிஞர் திரு. பாஸ்கரன் அவர்களும், ஆற்றியிருந்தனர்.

தனது தந்தை பற்றி அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களுடைய புதல்வி நிருசா அவர்கள் வந்திருந்த தமிழ்ச்சோலைக் குழந்தைகளுக்கு தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் வழங்கியிருந்தார். அவர்காலத்தில் நிர்வாகியாகக் கடமையாற்றிய திருமதி பவளராணி அவர்களும் நினைவுரையை கவிதை வடிவில் வழங்கினார். செல்வி மோசிக்கா கந்தவேள் அவர்பற்றி அறிந்தவற்றை உரையாகவும், தமிழ்ச்சோலை ஆசிரியர் திருமதி கோகிலா அவர்கள் கவிதையில் வழங்கினார். தமிழ்ச்சோலை மாணவிகள் மாவீரர் பாடல் நடனத்தை வழங்கியிருந்தனர். நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களுக்கு “தகைசார் தமிழர்” என்ற விருது அவர் வாழ்ந்த காலத்தில் தலைவராக இருந்து ஆற்றிய பணிக்கு இன்று அவர் இல்லாத போதும் அவரது பணிக்கு கொடுக்கப்பட வேண்டியதை அவரது 10 ஆவது ஆண்டு நினைவு நாளில் அவரது குடும்பத்தினரிடம் வழங்கி மதிப்பளிப்பு செய்யப்பட்டது. அம்மதிப்பளித்தலினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் வழங்கியதுடன் சிறப்புரையையும் ஆற்றியிருந்தார். நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்கள் தனது வாழ்நாளில் மண்விடுதலையை எவ்வளவு நேசித்தார், அதற்காக பிரான்சு மண்ணிலே உழைத்தார் என்று அன்று பல குழந்தைகளாக இருந்தவர்கள் எல்லாம் இன்று சிறந்த இடங்களிலே வாழ்வதும், பணிகள் ஆற்றுவதுடன் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்கள் இவர்களுடைய வாழ்விலும் நல்ல சகோதரனாக, நண்பனாக, மனிதநேயப் பண்பாளனாக, அர்ப்பணிப்பாளனாக வழிகாட்டியாக கடைசிவரை வாழ்ந்திருக்கின்றார் என்பதை மறந்து விடாது அவர்களின் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதே போல எமது மண்ணின் விடுதலைக்காகத் தம்உயிர் ஈந்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள், மக்கள் கதைகளைச் சொல்ல வேண்டும் என்றும், இன்று உயர்ந்த நிலையில் நிற்கும் எமது மக்கள், பிள்ளைகள் மண் விடுதலையில், சுதந்திரமான நல் வாழ்வில் அதனை அடைய தொடர்ந்தும் பங்காளர்களாக இருப்போம் என்று மனதில் உறுதியெடுக்கும் ஒரு நாளாகவும் மனதில் கொள்வோம் என்றும் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் சார்பாக திரு. மோகனதாசன் அவர்களும் உரையாற்றினார். எமது மொழியிலும், இலட்சியத்திலும் பல்வேறு பணிகளில் நாம் பணியாற்ற வேண்டும். அதில் மொழியும், கலையும், முக்கியமானதெனவும் கூறியிருந்தார். சின்னஞ்சிறு சிறுமியரின் விடுதலைப்பாடல் நடனத்துடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
(ஊடகப்பிரிவு – பரப்புரைப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here