தமிழர் தாயகத்தில் மாவீரர் நாளை நினைவுகூர்ந்தமை, தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடியமை மற்றும் இணையங்களில் குறித்த விடயங்களைப் பதிவிட்டு பகிர்ந்தமை தொடர்பில் பல அப்பாவி இளைஞர்களை சிறிலங்கா அரசின் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துவருகின்றனர்.
பலர் மீது விசாரணைகளும் குறித்த பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் முடிவுற்றதும் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் கடந்த 26 ம் திகதி நடைபெற்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியவர்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
அத்துடன் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என கூறி அதனை அகற்றுமாறு தெரிவித்திருந்தனர்
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவாஜிலிங்கம் உட்பட்டவர்கள் புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அது தொடர்பில் இன்று காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புபவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.
பருத்தித்துறையில் தாயின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்ட, பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரத்தைச் சேர்ந்த சங்கர் விஜயசுந்தரம் என அடையாளம் காணப்பட்ட 43 வயதுடைய குறித்த நபர், நவம்பர் 30 ஆம் திகதி பாரிஸில் இருந்து வந்திறங்கியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று பிரித்தானியக் குடியுரிமை பெற்ற விஜயசுந்தரம், இலங்கையில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புக்கு ஐக்கிய இராச்சியத்தில் நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) இவருடைய செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பெற்று, 2012 மே 31ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை அறிக்கை செய்தது. இதனையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பயணத் தடை விதிக்கப்பட்டதாம். இந்தப் பயணத் தடையை அறியாத சந்தேக நபர் இலங்கை திரும்பியதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, கொழும்பு குற்றப்பிரிவினர் விஜயசுந்தரத்தை தங்களுடைய காவலில் எடுத்துக்கொண்டனர்.
பருத்தித்துறையில் மரணமான தனது தாயாரான யோகேஸ்வரியின் இறுதிக் கிரிகைகளை மேற்கொள்வதற்காகவே சங்கர் லண்டனிலிருந்து வந்ததாகத் தெரியவருகின்றது.