ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5 ஆம் திகதி அணு குண்டை விட அதி பயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக வடகொரியா பரிசோதித்தது.
இது குறித்து அந்நாட்டு தொலைக் காட்சியில் வெளியான செய்தியில், “வடகொரியா ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக நடத்தி விட்டது.
இதன் மூலம் அணுசக்தியில் வடகொரியா அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் மட்டுமே இதை பயன்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
வடகொரியாவின் இந்த பரிசோதனை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், வடகொரிய விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நியூயோர்க் நகரில் அவசரமாக கூட்டப்பட்டது.
மூடிய அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஹைட்ரஜன் குண்டு வெடித்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் பலவற்றால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வட கொரியா ஐதரசன் வெடிகுண்டை சோதனை செய்த தாக அறிவித்துள்ளது.
வட கொரியாவின் ஜனாதிபதி, தங்கள் நாடு ஐதரசன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐதரசன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
இந்தச் சோதனையால், வட கொரிய அணு ஆயுத சோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் செயற்கையாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2006, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையின் வர்த்தக மற்றும் நிதி தடைகளுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா இந்த சோதனையை நடத்தியிருப்பதால் சர்வதேச நெருக்கடிக்குள்ளாகலாம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து தென் கொரியா தனது ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளது.
இதனால் கொரிய எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வீரர்களை எல்லையில் குவிக்க தென் கொரியா தயாராகி வருகிறது.
வட கொரியாவின் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வட கொரியா அத்துமீறிவிட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் இந்த அறிவிப்பு சர்ச்சை மற்றும் பீதியை ஏற்படுத்தியிருந்தாலும் சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. வட கொரியா உண்மையிலேயே ஐதரசன் வெடிகுண்டைதான் சோதித்ததா என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
வட கொரியா தற்போது சோதித்துள்ளது ஐதரசன் வெடிகுண்டாக இருந்திருந்தால் அதன் தாக்கம் தற்போது உணரப்பட்ட தாக்கத்தைவிட 10 மடங்கு அதிக சத்ததுடன் அது வெடித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐதரசன் குண்டுகள் புளூடோனியம் குண்டுகளை விட சக்தி வாய்ந்தன. மேலும் அமெரிக்கா 1945 ஆம் ஆண்டு ஹிரோசிமாவில் பயன்படுத்திய அணு குண்டை விட பல நூறு மடங்கு சக்திவாய்ந்தவை இந்த ஐதரசன் குண்டுகள் என்பது குறிப்பிட த் க்கது.