யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மன்னார் பிரஜைகள் குழு ஊடாக இன்று புதன்கிழமை வடக்கு முதலமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அன்ரனி சகாயம், தேசிய தைப்பொங்கல் தினம் யாழ்ப்பாணத்தில் இம்முறை கொண்டாடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இந்த நிலையில் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் ஜனாதிபதியையும், பிரதமரையும் நேரில் சந்தித்து, தங்களது பிள்ளைகளின் விடுதலை தொடர்பான நேரடி கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின்றனர்.
அதற்கான ஒரு சந்தர்ப்பதாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை இன்று சந்தித்து, ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அரசியல் கைதிகளின் பெற்றோர் கோரிக்கை விடுக்கவுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றையும் அவர்கள் முதலமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர் என்றார்.