இராணுவத்தை வெளியேறக் கோரி கேப்பாப்புலவு மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
179

8522கேப்பாப்பிலவிலவு எங்கள் நிலம் இராணுவமே வெளியேறு” என்ற கோசத்துடன், இராணுவம் கேப்பாப்பிலவில் பொது மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பெரும் போராட்டம் ஒன்றினை நேற்று காலை முன்னெடுத்துள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கேப்பாப்பிலவில் 490 ஏக்கர் பொது மக்களின் நிலப்பரப்பினை இராணுவம் அபகரித்து வைத்து, அந்த நிலத்திற்கு சொந்தமான மக்களை வேறு இடங்களில் மாதிரி கிராமம் என்ற பெயரில் குடியமர்த்தி விட்டு அவர்களது சொந்த நிலங்களை இராணுவம் பிடித்து வைத்துள்ளது. இதனை உடனடியாக விடுவிக்குமாறு கோரியே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் 320 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 120 குடும்பங்கள் இராணுவம் பிடித்து வைத்துள்ள குறித்த இடத்திற்கு சொந்தக்காரர்களாவர்கள். எனினும் அம்மக்களின் காணிகளை விடுவிக்காமல் மக்களின் காணிகளில் பாரியளவு முகாமை அமைத்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பலதடவைகள் முல்லை மாவட்ட அரச அதிபர் ஊடாகவும், மற்றும் தமது போராட்டங்கள் ஊடாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவர்களது கோரிக்கைகளை கவனத்திலெடுக்காத அரசு, சொந்த நிலத்தில் அம்மக்களை மீளக்குடியமர்த்தாமல் அருகில் உள்ள இடமொன்றில் மாதிரிக்கிராமம் என்ற இடத்தை அமைத்து அங்கு மக்களை குடியமர்த்தி உள்ளனர்.

அந்த மாதிரி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் அம்மக்கள், தமது இந்த மாதிரி கிராமமும் அரசாங்கத்தின் உதவிகளும் வேண்டாம், எங்கள் சொந்த நிலங்களை தந்தால் போதும். எங்களால் முன்னேற முடியும், ஆகையால் எங்கள் இடத்தில் உள்ள இராணுவம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தியே மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் எமது நிலம் இல்லை, எமக்கு வேண்டாம் அகதி வாழ்க்கை சீரழிய போகின்றது இளைய சந்ததி, எமது ஊர் எமக்கு வேண்டும் இராணுவமே உடனடியாக வெளியேறு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திருமதி விவேகானந்தன் இந்திராணி, ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கனக்காண மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது இராணுவத்தின் டாங்கி வாகனம் ஆர்பாட்டகாரர்களின் அருகில் நிறுத்தப்பட்டதோடு, பெருமளவிலான போலீசார் ஆர்ப்பாட்ட காரர்களை சூழ்ந்து காணப்பட்டதோடு, பொலிசாரில் சிலர் பொது மக்களை புகைப்படமும் எடுத்தவண்ணம் இருந்தனர். இதனை விட புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பும் தீவிரமாக காணப்பட்டிருந்தது.

இந்த கெடுபிடிகளால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்களில் பெரும்பாலானோர் ஊடகங்களுக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கருத்து தெரிவிக்க கூட தயங்கியிருந்தனர். இன்னும் சில புலனாய்வாளர்கள் ஊடகங்கள் சிலவற்றோடு சேர்ந்து நின்று மக்கள் கருத்துக்களை ஒளிப்பதிவு செய்திருந்ததனையும் காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here