இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றதிற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள எல்லைக்குள் தான் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முருகன் ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளும் மக்கள் குடியிருப்பு நிலங்களும் உள்ளன.
குறித்த பாடசாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
2005ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பிரதேச மக்கள் யுத்த சூழ்நிலையில் தமது பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அந்த பிரதேசம் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றமும் தடைப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களின் காணிகளை மீள கையளிக்கும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அங்குள்ள கடற்படை முகாமுக்கு மாற்று காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இரண்டு, மூன்று மாதங்களில் கடற்படையினர் குறித்த பாடசாலைகளிலிருந்து வெளியேறிவிடுவார்கள் ஜனாதிபதியினால் அவ்வேளை உறுதிமொழி வழங்கப்பட்டிருந்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்கிறார் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா.
இது தொடர்பாக தெளிவுபடுத்துமாறு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர மனுக்களில் அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணியை தொடர்பு கொண்ட போது குறித்த விடயம் தொடர்பாக ஆளுநர் கடற்படையுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளாதாக பதில் அளித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களில் அந்த பகுதியிலிருந்து கடற்படை வெளியேறிவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.