துயிலும் மாவீரர்களுக்கு….
நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்புக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். என்னுடன் ஒரு பொறுப்பாளர் உட்பட இரண்டு போராளிகள் இருந்தனர். வாகனம் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. வாகனத்தில் இயக்கப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னோடு பொறுப்பாளரும் போராளிகளும் கடந்தகால போர் நிகழ்வுகள் குறித்தும் கடந்துசெல்லும் இடங்கள் குறித்த பல்வேறு வரலாற்று செய்திகளையும் ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டு வந்தனர். நானும் வெளியே கடந்து செல்லும் இடங்களைப் பார்த்துகொண்டே அனைத்தையும் கவனமாக கேட்டு உள்வாங்கிக் கொண்டு வந்தேன். திடீரென வாகனத்தில் ஒலித்தப் பாடல் நிறுத்தப் பட்டது. என்னுடன் பேசிக்கொண்டு வந்த போராளிகள் அமைதியானார்கள். வேகமாக சென்றுகொண்டிருந்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டுக்கு வந்து மெதுவாக சென்றது. மிகவும் அமைதி நிலவியது. நானும் அமைதியானேன். வாகனத்தில் மட்டுமல்ல அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியே மிகவும் அமைதியாக இருந்தது. எனக்கு இடதுபுறம் விசுவமடு “மாவீரர் துயிலும் இல்லம்”. எதிரே வந்த வாகனங்களும் மெதுவாகவும் அமைதியாகவும் கடந்தன. மாவீரர் துயிலும் இல்லத்தைக் கடந்ததும் வாகனம் வேகமெடுத்தது. பாடல்கள் ஒலிக்கத்தொடங்கின. உரையாடலும் தொடந்தது. நான் உணர்ந்து கொண்டேன். அது அம் மாவீரர்களுக்கு செலுத்துகின்ற மரியாதை, துயிலும் அம்மாவீரர்களின் அமைதியை எந்த விதத்திலும் கெடுத்துவிடக் கூடாது என்ற உயரிய மாண்பு.
அதன்பிறகு தமிழீழத்தில் பல இடங்களுக்கு பயணிக்கும் போதும். பல மாவீரர் துயிலும் இல்லங்களை கடந்து சென்றிருக்கிறேன். மாவீரர் துயிலும் இல்லங்களை கடக்கின்ற வாகனங்கள் அது இயக்க வாகனமாக இருந்தாலும், தனியார் வாகனமாக இருந்தாலும், அல்லது பொதுமக்கள் பயணிக்கின்ற பேருந்து அல்லது சிற்றுந்துகளாக இருந்தாலும், இரு சக்கர வாகனமாக இருந்தாலும், அது எவ்வளவு வேகத்தில் வந்தாலும் 20 கிலோ மீட்டார் வேகத்திற்கு குறைத்து மிகவும் மெதுவாக, வாகனத்தில் ஒலிக்கும் பாடல்களை நிறுத்தி, பேசுவதையும் தவிர்த்து, மிகவும் அமைதியாக அந்த இடத்தைக் கடந்து செல்வதை பார்த்திருக்கிறேன். அப்படி ஓர் உயரிய மரியாதையை அம்மக்கள் அம்மாவீரர்களுக்கு வழங்குகிறார்கள்.
“மதிப்பிற்குரியவர்களே! இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள் உங்கள் பாதங்களை மெதுவாகப் பதியுங்கள்”
என்ற அறிவிப்பைத் தவிர காவல் துறையோ, போராளிகளோ கண்காணிப்பது இல்லை. அது தன்னியல்பாக உளப்பூர்வமாக நடைபெறும் ஒரு செயல்.
உலகில் பல நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். எங்கும் இதுபோல் நடைமுறையில் இருப்பதாக கேள்விப் பாடவும் இல்லை. காணவும் இல்லை.
– ஓவியர் புகழேந்தி .
(நான் எழுதிய, தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து…)