சுவிசில் வலே மாநிலப் பகுதியில் அதிவேக விரைவுச் சாலையில் இடம்பெற்ற மகிழுந்து – பாரவூர்தி விபத்தில் மகிழுந்தில் பயணித்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சீடஸ் (Siders) லோயூக் (Leuk) பிரதான வீதியில் உள்ள ஃபைன்ஸ்ட் (Pfynstrasse) வீதியில் இன்று 19.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் பார ஊர்தியுடன் மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறை இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த கேசவன் (வயது 27) என்ற இலங்கைத் தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் இரவுப் பணி முடித்து மகிழுந்தில் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தின் போது மேலும் இரண்டு மகிழுந்துகள் விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சுவிஸ் செய்தி இணையங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வலே மாநில காவல்துறையின் , வலாய்ஸ் மீட்பு பிரிவு , லோயூக் பிராந்திய தீயணைப்பு பிரிவு , லோயூக்- லோயூக்பாட் பிராந்திய காவல்துறையினர் மற்றும் பெர்ன் மாநில காவல்துறை விபத்து சேவை ஆகியவை மீட்பு பணியில் இருந்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் காவல்துறை இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எரிமலை செய்திப் பிரிவு)