தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் தமிழ்ச்சோலைகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கோடும் மூன்றாந்தலைமுறை தமிழ் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு கற்பித்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கோடும் ஆசிரியப் பட்டயப் பயிற்சி நெறியொன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இப்பட்டய நெறிக்காக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் மேற்கொண்ட நேரடி ஒப்பந்தம் ஒன்றினூடாக பிரான்சில் இப்பட்டய நெறி கற்பிக்கப்படவுள்ளது.
இலக்கியம்,இலக்கணம், எழுத்தாற்றல், நுணுக்கக் கற்பித்தல் உத்தி முறைகள் , இரண்டாம் மொழிக் கற்பித்தல்,ஆசிரியர் மாணவர் உளவியல் உட்பட்ட பல புதிய உறுதிப்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளை இக்கற்கை நெறி உள்ளடக்கியுள்ளதாக தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
2024 கல்வியாண்டுக்கான கற்கை நெறியில் பிரான்சில் பிறந்து தமிழ் கற்பிக்கும் இளந்தலைமுறை ஆசிரியர்கள் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்ச்சோலைத் தமிழாசிரியர்கள் இக்கற்கை நெறியை முதற்கட்டமாகத் தொடங்கியுள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இக்கற்கை நெறியை அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்களூடாக அறியமுடிகிறது.
பிரான்சில் இரண்டாம் தலைமுறையினர் தமிழாசிரியர்களாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ள நிலையிலும் மூன்றாந் தலைமுறை மாணவர்கள் தமிழைப் பயிலத் தொடங்கியுள்ள நிலையிலும் இவ்வாறான கற்கை நெறி வினைத்திறன் மிக்க கற்பித்தலைத் தூண்டும் எனக்கருதப்படுகிறது. காலத்தேவைகருதி உலக ஓட்டத்திற்கு ஏற்ப கல்வி முறைமையில் மாற்றங்களைக் கொண்டுவரும் ஒருசெயற்பாடாகவே இது காணப்படுகிறது என கல்வியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஆரம்பித்துள்ள ஆசிரியப் பட்டயப் பயிற்சி நெறி!