2016ம் ஆண்டிலிருந்து குற்றமில்லாத மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்றி நீதிபதி இளஞ்செழியன் பிரகடனம்!

0
344

ilanseliyan2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வின் பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட வேண்டும். உத்தியோகத்தர்கள் கடமைகளில் கரிசனையும் செலுத்த வேண்டும். நீதிச் சுதந்திரம் மிக முக்கியமானது, அந்த கடமையினை அனைவரும் இணைந்து செய்துகொள்வோம். யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதை வஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக மாறட்டும், ரவுடித்தனம், காடைத்தனம் அழிக்கப்படும் மாவட்டமாக மாறட்டும். இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் அனைத்து குற்றச்செயல்களையும் ஒழித்து, சமாதானமான, சுதந்திரமான யாழ். குடாநாட்டினை உருவாக்குவதற்கு, நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நீதித்துறை உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்பு மிக முக்கியமானது,நீதிபதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை மதிக்கின்ற உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகஇ நீங்கள் வாழும் இடம் நீதி தேவன் ஆலயம். அதை மறந்துவிடக் கூடாது. நீதி தேவன் ஆலயத்தில் வாழும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும், நீதி தேவனுக்கும், நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவும், நீதிக்கு தலை வணங்குபவர்களாகவும் இருக்க வேண்டும். 2016ம் ஆண்டு யாழ்.குடாநாடு சுபீட்சமான குடாநாடாக மாற வேண்டும். 2015ம் ஆண்டு எமக்கு கவலைக்குரிய ஆண்டாக மாறியது. நீதிமன்ற தாக்குதல் இடம்பெற்றது. புங்குடுதீவில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவங்கள் அனைத்தும், நீதித்துறைக்கு சவால் விடுக்கப்பட்ட சம்பவங்களாக இருந்தன. அந்த ஆண்டு இன்றுடன் நிறைவுபெற்று விட்டது. 2016 ஆம் ஆண்டு மாணவ மாணவிகளை பாதுகாக்கின்ற ஆண்டாகவும், சிறுவர்களையும், பெண்களையும் பாதுகாக்கும் ஆண்டாக மலர வேண்டும். அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க நீதித்துறை எப்போதும் துணை நிற்கும். அனைத்து மாவட்ட நீதிபதிகளும் துணை நிற்பார்கள். போதைவஸ்து குற்றங்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோக குற்றங்கள், பாரிய கொலை குற்றங்களுக்கு பிணை வழங்க முடியாத நிலமையினை நீதித்துறை ஏற்படுத்தும் என்பதனை எமது கடமைப் பொறுப்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நீதிபதிகள் கடமைகளை செய்யும் போது, சமூக நலன்கொண்ட தீர்ப்பாக அமைய வேண்டும். சமூக நலனைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் கருவி தான் நீதிபதி. அவ்வாறு நீதிபதிகள் சமூக நலன்கொண்ட தீர்ப்புக்களை வழங்குவார்கள். சமூக நலன், பொருளாதார சீரழிவுகள், கலாசார சீரழிவுகள்,சமூக குற்றங்களை அழித்து ஒழிக்கின்ற நீதிபதிகள் பிரகடனப்படுத்துகின்றார்கள். 2016ம் ஆண்டு யாழ்.குடாநாடு, குற்றம் இல்லாத சமாதானமான மாவட்டமாக மலரும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம் என்றார்.அரச உத்தியோகத்தர்கள் நீதிக்கு தலைவணங்குபவர்களாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here