இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலுள்ள விமானப் படைத் தளத்தின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தப் படைத்தளம் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
பெருந்தொகையான ஆயுதங்களுடன் வந்து தாக்குதலை நடத்திய நான்கு தீவிரவாதிள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது இரண்டு இந்திய படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தின் உடை அணிந்திருந்த அந்தத் தீவிரவாதிகள் இன்று அதிகாலை எல்லைப்புறத்திலுள்ள அந்தப் படைத்தளத்தின் மீதான தாக்குதலை முன்னெடுத்தனர்.
தீவிரவாதிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே சுமார் ஐந்து மணி நேரம் சண்டை நடந்தது என்று, பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இருந்தபோதும் அங்கு மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன என தகவல்கள் கூறுகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் லாகூரில் பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை சந்தித்து பேசிய நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெறுள்ளது.
அந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் ஆச்சரியமளிக்கும் வகையில் சமாதான முன்னெடுப்பு ஒன்றைச் செய்திருந்தார்.