அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மூக்கைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செயற்கையாக மூக்கைப் பொருத்துவது முதல் முறையல்ல என்றாலும் கூட முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.
மார்ஷல்ஸ் தீவைச் சேர்ந்த டேலன் ஜென்னட் எனும் சிறுவனுக்கு 9 வயதாக இருந்த போது விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக ஏற்பட்ட மின் விபத்து காரணமாக அவனது மூக்கு பொசுங்கிப் போனது.
அன்று முதல் சிறுவனது முகம் சிதைந்த நிலையில்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் நியூயார்க் சென்றுள்ளனர் அவனது குடும்பத்தினர்.
அங்குள்ள மெளன்ட் சினாய் கண் காது மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு தற்போது புதிய மூக்கைப் பெற்று புது வாழ்வும் பெற்றுள்ளான் இச்சிறுவன்.
16 மணி நேரம் இந்த சத்திர சிகிச்சை நடந்துள்ளது.
தற்போது எல்லோரையும் போலவே இயல்பான முறையில் சிறுவனால் நுகர முடியும்.
ஜேனட்டுக்கான மருத்துவ சிகிச்சைக்கான செலவை கலிபோர்னியாவைச் சேர்ந்த பெனிசியா என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.