இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத்
தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்
“வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016
ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
“இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும்
வேறான கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய
படையெடுப்பாளர்களின் ஆயுதபலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல
நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக
இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப்
பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும்
விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய
இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ
எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக
ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை,
பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை
இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட
அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின்
தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு
உலகுக்கு அறிவிக்கின்றது.
மேலும், ‘தமிழ் ஈழம்’ என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன்
ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய,
சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில்
தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க
முடியாத்தாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.” 1976 மே 14 ஆம் தேதியன்று
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தலைமையில்
நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில்
இவ்வாறு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனவெறியாட்டத்திற்குப் பதிலடியாக
ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டமானது மக்களது
பேராதரவுடன் சுதந்திர தமிழீழம் நோக்கிய விடுதலைப் போராட்டமாக பரிணாமம்
பெற்றது. ஆயுதப் புரட்சியில் அசையாத நம்பிக்கை, அடக்குமுறையை உடைத்தெறியும்
ஆவேசம், தமிழீழமே தணியாத இலட்சியம் என்பதில் உறுதி கொண்ட தமிழ்
இளைஞர்களின் புரட்சிகர உத்வேகத்திற்கு வடிகாலாக கட்டுக்கோப்பு, ஒழுக்கம்,
இலட்சியத்தில் உறுதியுடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கம் திகழ்ந்தது.
பாரம்பரிய அரசியல் கட்சிகளின் இயலாத்தன்மையினால் அனாதரவாக விடப்பட்ட தமிழ்
மக்கள் புரட்சிகர இளைஞர்களை உச்சி முகர்ந்து வரவேற்கத்தலைப்பட்டனர். இந்தப்
பின்னணியில்தான் மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதான வரலாற்றுத் தீர்மானம்
வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டதுடன், இலங்கைத் தீவில்
நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமாக தமிழர்கள் மீழ்வது ஒன்றே நிரந்தரத்
தீர்வாக அமையும் என்பதை அறுதியிட்டு உரைக்கும் இப் பிரகடனத்திற்கு மக்கள் ஆணை
கோரும் தேர்தலாக 1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தமிழர் ஐக்கிய
விடுதலைக் கூட்டணி எதிர்கொண்டது.
ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை ஏற்று ஆதரிக்கத் தலைப்பட்டமை
வன்முறையின் மீதான விருப்பத்தின்பாற்பட்டதல்ல இலட்சியத்தின்பாற்பட்டதென்று
நிரூபிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்து
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை
உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமது ஆணையினை சனநாயக
முறையில் தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். 168 உறுப்பினர்களைக் கொண்ட
பாராளுமன்றத்திற்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 பேரை வெற்றி
பெறவைத்ததன் மூலம் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழர் கட்சி
ஒன்று இரண்டாவது அதிகப்படியான இடங்களை கைப்பற்றி நாடாளுமன்றத்தில்
அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாகவும், தமிழர் எதிர்கட்சித் தலைவராகவும் பதவியேற்கும்
வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உருவாக்கத்திற்கு காரணமாகவும்,
தவிசாளராகவும் விளங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் திடீர் மரணமும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலமாக வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள்
வழங்கியிருந்த ஆணையானது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர்களால்
வீணடிக்கப்பட்டிருந்தமையும் மீண்டும் சூனியமான அரசியல் இருட்டிற்குள் தமிழர்களை
இட்டுச்சென்றிருந்தது.
சத்தியத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது சுயநல இன்பங்களைத்
துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் தியாக வரலாற்றின் பிரவாகமானது தமிழ்
மக்களை தலைநிமிர வைத்தது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக்
கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கிய
ஆணையானது மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் உயிர்பெற்றதுடன் மூன்று
தசாப்தங்கள் கடந்தும் அந்த இலட்சியதில் பற்றுக் கொண்டு, உறுதி கொண்ட மக்கள்
சக்தியாக தமிழர்களை ஒன்று திரட்டியுள்ளது.
இந் நிலையில்தான் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் இனவழிப்பில் இருந்து
தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்கள் அதே தமிழர்களின்
பாதுகாப்பினையும், எதிர்கால நலனையும் கருத்திற்கொண்டு 2009 மே 18 அன்று
முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழர்களின் அரசியல் உரிமைப்
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பும் கடமையும் தமிழ் அரசியல்
தலைமைகளிடம் கையளிக்கப்பட்டது.
சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும் தமிழர்களின்
ஒன்றுபட்ட முடிவினாலும் 32 ஆண்டுகளின் பின்னர் என்ற ஆரவாரத்துடன் தமிழர்
கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகவும் அது சார்ந்த சம்பந்தன்
அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்கும் நிலை உருவாகியது. எழுபதுகளைப்
போன்றே தற்போதைய தமிழ் அரசியல் தரப்பானது உரிமைகளை மறுத்து சலுகைகளை
முன்னிறுத்தியதான அடிபணிவு அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தும் தேசிய அபிலாசைகளை மறுத்தும்
சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் நலன்களை உள்வாங்கியதான பௌத்த சிங்கள
பேரினவாத அரசுடன் இணங்கிப் போகும் அடிபணிவு அரசியலில் ஒரு சில தமிழ் அரசியல்
தலைமைகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான
வெளிப்பாடகவே வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை
இணைத்தலைவராக கொண்டு தமிழ் குடிசார் (சிவில்) சமூகத்தின் பங்கேற்புடன்
உருவாக்கப்பட்டிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ அனைவராலும் பார்க்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்து அதனை நிறைவேற்றுவதற்கான
பணிகளை அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதே ‘தமிழ் மக்கள்
பேரவை’யின் முக்கிய கடமையாகும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்கள், வட-கிழக்கு
மாகாணங்களை உள்ளடக்கிய தமது மரபுவழித் தாயக மண்ணில், தம்மைத் தாமே
ஆட்சிபுரியும் உரிமை உடையவர்களாக, சுதந்திரத்துடன் கௌரவமாக வாழ வேண்டும்
என்பதனை அறுதியிட்டு உரைக்கும் ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ அனைத்துலகம்
ஏற்றுக்கொண்ட ஜனநாயக வழியில் எமது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கையில்
மாற்றான ஒரு தீர்வுத்திட்டம் அவசியமற்றது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
தமிழ் மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘தமிழ் மக்கள்
பேரவை’யினரும் ஏலவே சனநாயக முறையில் மக்கள் ஆணை பெறப்பட்டிருக்கும்
வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தியதான செயற்பாட்டினை மேற்கொள்வதே
பொருத்தப்பாடுடையதாக இருக்கும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 6 வது சரத்து
தமிழீழக் கோரிக்கையினை சட்டரீதியாக அனுமதிக்காது என்பதையிட்டு ‘தமிழ் மக்கள்
பேரவை’யினருக்கி தயக்கம் இருக்கக்கூடும்.
இந்நிலையில்தான், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் நியாயாதிக்க எல்லைக்கு
அப்பால் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எம்மைப் பொறுத்தவரையில் அதற்கு
கட்டுப்படவேண்டியதில்லை என்பதால் அந்தப்பணியை முன்னெடுக்க
உறுதிகொண்டுள்ளோம். ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40வது
ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்புப்பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க 2016 ஆம் ஆண்டினை ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ வலுவூட்டல்
ஆண்டாக நாம் பிரகடனம் செய்கின்றோம். தமிழர் திருநாளாகிய தை பொங்கல்
(15/01/2016) முதல் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (27/11/2016) வரை உலகம் தழுவிய
செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீழ் வாக்கெடுபானது 2009 மே 10 இல்
நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து
வாழ்ந்துவரும் அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறு
மேற்கொள்ளப்பட்ட மீள்வாக்கெடுப்பின் முடிவில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு
ஆதரவாக ஏறக்குறைய 98 சதவிகிதமானோர் வாக்களித்தன்மூலம் ஈழத்தமிழருக்கு நிரந்தர
தீர்வாக சுதந்திரமான தமிழீழம் ஆங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை
மீண்டும் உலகநாடுகளுக்கு தெளிவாக பறைசாற்றினர்.
இதைத் தொடர்ந்து அனைத்துலக ரீதியில் தமிழர்களது உரிமைப் போராட்டத்திற்கான
களத்தினை விரிவாக்கும் முகமாக 15/11/2009 அன்று தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு
தனித் தமிழீழம் ஒன்றே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி
உருவாக்கப்பட்ட நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் நடைபெற்றது. நோர்வே
உள்ளிட்ட 14 நாடுகளிலும் ஈழத்தமிழர் மக்களவை கட்டமைக்கப்பட்டு தேர்தல் மூலம்
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவ்வாறு 14 நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்
மக்களவையின் கூட்டு அமைப்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலான காலத்தில்
தமிழர் தரப்பானது சகல வழிகளிலும் இலங்கைத் தீவானது சுபீட்சமாக இருக்க
வேண்டுமென்ற நல்லெண்ணத்தினடிப்படையிலான அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு
வந்தது. ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலமைந்த
வட்டமேசை மாநாடு முதல் அனைத்து கட்சிக் கூட்டம் வரை அனைத்திலும் தமிழர்
தரப்பின் பங்கெடுப்பானது உளப்பூர்வமானதாகவே இருந்துவந்துள்ளது. அமைதி
முயற்சியை காரணம் காட்டி சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியே வந்துள்ளதுடன்
தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வையும்
முன்வைக்கவில்லை. மாறாக, தமிழர்களின் மூலாதாரக் கோரிக்கையை ஏற்கமறுத்து
இராணுவ மேலாதிக்கத்தை தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்தி தமிழர்களை
அடிமைகொள்ளவே முயற்சித்து வருகின்றது.
தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பதாக அனைத்துலகத்தாரின் முன்னிலையில்
வாக்குறுதியளிப்பதும் பின்னர், தீவிரப்போக்குடைய சிங்கள பௌத்த இனவாத சக்திகளை
தூண்டிவிட்டு எதிர்க்கவைத்து அதனைக் காரணம்காட்டி பின்வாங்குவதுமான
உபாயத்தின் மூலம் தமிழர்களது தேசிய பிரச்சினைக்கான தீர்வை வெளிப்படையாகவே
மறுத்துவருகின்ற நாடகங்களை கட்சி வேறுபாடின்றி சிங்கள அரசுகள் அரங்கேற்றி
வருகின்றன.
சிங்கள பௌத்த இனவாத சக்திகளையும் ஆட்சி மாற்றங்களையும் காரணம்காட்டி
தமிழர்களது உரிமைகளை மறுப்பதும், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் காலங்கடத்துவதும்
சிங்களத்தின் தந்திரமாகவே இருக்கட்டும். அதில் நாம் சிக்கிக்கொள்ளாது விளிப்பாக
இருப்பதுடன் இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய
இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத்
தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும்
வட்டுக்கோட்டை தீர்மானத்தினை வலுப்படுத்துவது ஒன்றே சிங்களத்தின்
தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.
ஆகவே, வட்டுக்கோட்டை தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டிருக்கும் தமிழர் கட்சிகள்,
இயக்கங்கள், அமைப்புக்கள் மற்றும் தனிநபர் செயற்பாட்டாளர்கள் என அனைவரையும்
உலகில் எங்கிருந்தாலும் இச்செயற்பாட்டில் இணைந்து கொள்ளுமாறு இலட்சியத்தின்
மீதான மாறாப் பற்றுறுதியுடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றோம். ஒரே இலட்சியத்தில்
ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாக நாம் ஒன்றினைவது ஒன்றே எமக்கு முன்
உள்ள எல்லாத்தடைகளையும் உடைத்தெறிந்து இலட்சியத்தை வென்றெடுக்கும்
மார்க்கமாகும்.
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-