சித்திரை வருடப் பிறப்பினையே நாம் தமிழ் புருவருட பிறப்பாக கொண்டாடினாலும், நவீன யுகத்தில் ஜனவரி முதலாம் திகதியை அனைவரும் பொதுவாக புதுவருட பிறப்பாக கொண்டாடும் காலம் ஏற்பட்டுள்ளது. தை பிறப்பினை தமிழ் புதுவருட பிறப்பாக கொண்டாடும் ஒரு வழக்கமும் உள்ளதென்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
பண்டைய எகிப்து மக்கள், நைல் நதி பெருக்கெடுக்கும் காலம் மற்றும் வெள்ளம் வடியும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கால மாற்றத்தை கணித்து வந்த செயற்பாடே, பிற்காலத்தில் கலண்டர் எனும் நாட்காட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு காரணமாகியது. அதாவது பூமி சூரியனை சுற்றிவரும் நாள், வளர்பிறை, தேய்பிறை, வான மண்டலத்தில் காணப்படும் நட்சத்திரங்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, வருடம், மாதம், வாரம் என்பவற்றை கணிப்பிட்டு இந்த நாட்காட்டி உருவாக மூலகாரணமாக இருந்தவர்கள் எகிப்தியர்கள்தான்.
இந்த கால மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பின்னர் 304 நாட்களை உள்ளடக்கி ரோமானிய காலத்தில் கலண்டர் தயாரானது. பின்னர் ரோமானிய சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர், 370 நாட்களைக் கொண்ட கலண்டரை உருவாக்கினார். இதுவும் முழுமை பெறாத நிலையில், கிரகரி என்பவரிடம் இதனை சீரமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு அவரால் சீர்திருத்தப்பட்ட கலண்டரே இன்று வழக்கில் உள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி வருடத்தின் முதலாவது நாளாக கணிப்பிடும் முறை வழக்கத்திற்கு வந்தது. அதனையே புதுவருட பிறப்பாக கொண்டாடும் வழக்கம் பின்னர் ஏற்பட்டது.
புதுவருடம் உருவான கதையைப் பார்த்தோம். சரி இனி கடந்த வருடத்தின் சுவாரஷ்யங்களையும் கசப்புணர்வுகளையும் பிறந்துள்ள வருடத்தின் எதிர்பார்ப்புகளையும் நோக்கினால், அது மனிதனுக்கு ஒரு சவால் நிறைந்ததாகவே காணப்படுகிறது.
இலங்கையின் கடந்த வருட அனுபவங்களை சற்று முன்னோக்கிப் பார்த்தால், யாரும் எதிர்பார்க்காத மைத்திரிபால சிறிசேன, எதிர்பாராதா நேரத்தில் பொது எதிரணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு, ஜனாதிபதியாக ஆட்சிபீடமேறி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது முதல், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இத்தாலிய பாடகரான ஹென்ரிக் இஸிலேஸியஸின் இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது பிரா வீசப்பட்ட கதையை ஜனாதிபதி மைத்திரி கூறியது வரை, ஒவ்வொன்றும் அதிரடியாகவே இடம்பெற்று வந்தன.
அதேநேரத்தில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறிய கொட்டதெனிய சிறுமி சேயா படுகொலை தொடக்கம் யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை உள்ளிட்ட பல கசப்பான அனுபவங்களை மறக்கமுடியாது. அத்துடன் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் அப்படியே கைவிடப்பட்டமை நாடு என்று பார்க்கும்போது பாரிய பின்னடைவு என்பதுதான் உண்மை.
இது இவ்வாறிருக்க, உலகத்தை சற்று நோக்கினால் பாரிஸ் தாக்குதல், நேபாளத்தில் இடம்பெற்ற பாரிய பூகம்பம், இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளமும் அதனால் ஏற்பட்ட அழிவும், பின்னர் பிரபஞ்ச அழகிப் போட்டியில், குறித்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் அழகியின் பெயரை தவறாக அறிவித்தமை வரை ஒவ்வொன்றும் மறக்கமுடியாதவையாகவே இடம்பெற்றன.
சரி, இனி நமது நாட்டுக்குள் வருவோம். பிறந்துள்ள வருடமானது, அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றி நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அறிந்திருப்பது கடமை.
அரசியலை எடுத்து நோக்கினால், கடந்த வருட ஆட்சி மாற்றமானது, இனப்பிரச்சினைக்கு தீர்வு என தமிழ் மக்கள் அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தாலும், அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது பற்றி வரப்போகும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து நாம் பேசவேண்டியுள்ளது.
இனப்பிரச்சினை என்பது ஒருபுறமிருக்க, எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், எதிர்பாராத விதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் என்ன நடக்கும்? அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்குமான சட்டமூலம், அமைச்சரவையிலும்
அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றம் வரை செல்லும். அதன் பிறகு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு விடாக்கொம்பனும் கொடாக்கொம்பனும் போல இரு கட்சிகளும் கசையடிப்பட்டு கடைசியில் மக்கள் பிரச்சினை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பும் ஏற்படலாம்.
அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்தை பற்றி தெரிந்திருப்பதும், அதன் விளைவுகள் பற்றி அறிந்திருப்பதும் தலையாய ஒன்று. உதாரணத்திற்கு இன்று உலக சந்தையில் எரிபாருள் பீப்பாய் ஒன்றின் விலை 34 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 120, 110, 107 என காணப்பட்டபோது, உள்ளூர் சந்தையில் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்று 162 ரூபாவாக காணப்பட்டது. ஆனால் 34 டொலர்களாக தற்போது எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை குறைவடைந்துள்ள நிலையில், இதனால் அரசாங்கத்தின வருமானம் முன்னரை விட அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாய் வரை குறைக்கலாம். ஆனால் தற்போது 117ஆக பெற்றோல் விலை காணப்படும்போது அரசாங்கம் மக்கள் மீது திணித்துள்ள வரிச்சுமை அதிகம். அதாவது, ‘‘கடந்த வருட எரிபொருள் பீப்பாயின் விலையும் பெற்றோலின் விலை குறைப்பும், இவ்வருட எரிபொருள் பீப்பாயின் விலையும் பெற்றோல் விலை குறைப்பும்’’ என்பதை சமன்பாடிட்டு பார்த்தால், முன்னரை விட தற்போதைய விலைகுறைப்பு மிகவும் குறைவானது. அத்துடன், மறுபக்கத்தில் வரிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் எங்கே என்ற ஓர் கேள்வியை இங்கு கட்டாயம் எழுப்பியே ஆகவேண்டியுள்ளது.
அடுத்ததாக, அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கன்னி வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதில் ‘கரு கதாநாயகதுமனி’ (மதிப்பிற்குரிய சபாநாயகரே’) என்ற வார்த்தையைத் தவிர ஏனைய அனைத்தையும் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் அப்படியே மாற்றி அதனை சமர்ப்பித்தார்கள். அதனால் ஏற்பட்ட போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், எதிர்ப்;புகள் என்பவற்றை கூறவேண்டிய அவசியமில்லை.
அடுத்ததாக சமூகத்தை எடுத்துக்கொள்வோம். சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர் ஒருவர் இடம்பெறாமை, சிந்திக்க வேண்டிய ஒன்று. முரளி இல்லாத தற்போதைய கிரிக்கெட் குழாம், இவ்வருடத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது, ஆனால், நல்ல ஓட்டங்களை குவித்திருந்ததை பாராட்டியாகவேண்டும், இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியை தவிர. அதிலும், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இரண்டு விக்கெட்டுக்களுக்கு 277 ஒட்டங்களை குவித்து வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனை வைத்து பார்த்தால் இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை ஸ்தீரமற்றது. இதன் நிலை பிறந்துள்ள வருடத்தில் எதனை நோக்கிச்செல்லும் என்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டும்.
அடுத்ததாக, யுத்த காலத்தில் வடக்கில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன. இப் பணியில் ஈடுபடும் நாடுகளில் கனடாவும் ஒன்று. கனேடிய கண்ணிவெடி அகற்றும் குழாம் தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் முன்னெடுத்து வந்த கண்ணிவெடி அகற்றும் பணி முடிவடைந்துவிட்ட நிலையில், அந்த குழாம் இன்னும் நாட்டில் தங்கியுள்ளது. யுத்தத்தில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டமை குறித்து கனடா கடும் ஆத்திரத்துடன் உள்ள நிலையிலும், அதன் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் தற்போதும் இலங்கையில் உள்ள காரணம், இலங்கை மக்கள் உண்மையாக எதிர்பார்த்த சமாதானத்தை அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்.
அதனைத் தவிர தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகளின் இலங்கை நோக்கிய வருகை, தற்போது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஐ.நா அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, இம்முறை இலங்கைக்கு சார்பாக பிரேரணை கொண்டுவந்துள்ளது. இலங்கையில் கலப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் பணியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இலங்கையில் அந்த நீதிமன்றம் அமைக்கப்பெற்றால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பினாலும், எமது நாட்டு சட்டம், கலாசாரம், அரசியல் உள்ளிட்ட விடயங்களில் வெளிநாடுகள் கைவைக்கும்போது, அது எங்கே சென்று முடியும், உண்மையில் தீர்வை பெற்றுத் தருமா அல்லது இலங்கையை தமது ஆதிக்கத்திற்குள் கொண்டுவரும் முயற்சியா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
ஆக, நகர்ந்துள்ள வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள், அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு என்பவற்றிற்கு, ஆட்சிமாற்றம் என்ன செய்தது
என்ற கேள்வி எம் மத்தியில் உள்ளது. இவ்வாறான தளம்பலான நிலையில் பிறந்துள்ள புதுவருடத்தில், இனிமேலும் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். எதிர்பார்த்தவைகள் அனைத்தும் நடப்பதில்லையென்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் நாமாகிலும், எதிர்காலம் பற்றி சிந்;திக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் நாம். அந்தவகையில், பிறந்துள்ள வருடத்தில் சவால்களை எதிர்கொண்டு, அனைவருக்கும் சுபீட்சமான வாழ்க்கை அமையவேண்டுமென பிரார்த்திப்போம்.
…கலாவர்ஷ்னி …