எப்போதும் ஒரு புன்முறுவல் சந்தோசத்தின் இதழ் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும். எந்த கடினமான சூழலிலும் நிதானம் இழக்காமல் அதே நேரம் முழுவேகத்துடன் செயற்படும் திறன் ஒருசிலருக்கே உரித்தான ஒன்று. அவர்களில் ஒருவர் சந்தோசம்.
ஒரு விடுதலை அமைப்பு தனது பிறப்பில் இருந்து அது வளர்ந்து வேகமெடுக்கும் வரைக்கும் அது சந்திக்கும் சோதனைகளும் கடக்க வேண்டிய நெருப்பாறுகளும் ஏராளம் ஏராளம்.
எமது விடுதலை அமைப்பும் அப்படி நிறையவே சந்தித்தது. வெளியல் இருந்து சிங்கள பேரினவாதம் ஏவும் தடைகளும் சோதனைகளும் நசுக்கி எறிய எடுக்கும் முயற்சிகளும் ஒருபுறம் என்றால் ,உள்ளுக்குள்ளேயே எழும் துரோகங்களும் பிளவுகளும் அதனைவிட ஏராளம்தான்.
இப்படி எல்லாவிதமான சோதனைகளையும் கடந்தே பயணப்பட வேண்டிய பாதையே விடுதலைப் பாதை.
அமைப்பு வளர்ந்த பின்னர் இருக்கும் வளங்களையும் பலத்தையும் மனித வலுவையும் வைத்து எதனையும் சந்திக்கலாம். ஆனால் இயக்கம் ஆரம்பித்தவுடன் தோன்றும் இத்தகைய சோதனைகள் ஒன்றில் இயக்கத்தை அழித்து உருத்தெரியாமல் சிதைத்து வரலாற்று குப்பைக்குள் கடாசி எறிந்துவிடும். அல்லது இயக்கத்தை பாதை தவறி பயணப்பட வைத்துவிடும்.
இவை இரண்டையும் தவிர்த்து விடுதலை அமைப்பை கொண்டு நடாத்தும் ஆற்றல் அதன் தலைமைக்கு இருந்தாலொழிய அந்த இயக்கத்தை கடவுளால்கூட காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.
இதில் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த உள் பிளவுகள், வெளி அழுத்தங்கள், சிங்கள பேரினவாதத்தின் சுற்றிவளைப்புகள் என்பன எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்து இயக்கத்தை வளர்த்தெடுத்த ஆற்றல்மிகு தலைவருக்கு துணைநின்றவர்கள் ஒரு சிலரே. சந்தோசம் அவர்களில் ஒருவன்.
சந்தோசத்தை முதலில் பார்த்தது 79 நடுப்பகுதியில் வன்னிப் பகுதியின் ஒரு பண்ணையில்தான்.
சிலரின் பெயர்கள் ஒருவகையில் காரணப் பெயர்களாக அமைந்து விடுவது அரிதிலும் அரிது. அதில் சந்தோசத்தின் பெயர் முழுக்க முழுக்க காரணப்பெயரேதான். அவனை பார்த்த முதல் கணத்திலேயே அவனின் சந்தோசம் மற்றவர்களையும் தொற்றி கொள்ளும் ஒரு தோற்றமும் அதே புன்முறுவலும்.
சந்தோசம் வன்னி பண்ணைக்கு வந்தபொழுதுகள் இயக்கம் இன்னொரு கட்டத்துக்கு பயணப்படும் பெரு முயற்சியில் இருந்தநேரம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல்முறையாக உத்தியோகபூர்வமாக பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்பி எமது செயற்பாடுகளை உரிமைகோரி இருந்த பொழுது.
தமிழர்கள் மத்தியில் தமக்கான ஒரு விடுதலை அமைப்பு முகிழ்ந்துவிட்டது என்ற பேருணர்வு ஏற்றப்பட்டிருந்த காலம் அது. இன்னொரு புறத்தில் சிங்கள பேரினவாதம் எமது உரிமை கோரல் கடிதம், எழுச்சி என்பனவற்றை பார்த்து பதறி அடித்து விடுதலைப் புலிகள் தடை அது, இது என்று அரற்றி கொண்டிருந்த நேரமும் அதுதான்.
சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரமான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கா விடுதலைப் புலிகளை அழிப்பேன் என்ற சபதத்துடன் யாழ் கச்சேரியடியில் இருக்கும் பழைய பூங்காவில் முகாமிட்டு முற்றுகைகள், சுற்றிவளைத்தல் என வெறியாட்டமாடிக் கொண்டிருந்த பொழுது அது.
தமிழீழ விடுதலைப் புலிகளும் இதற்கு தமது எதிர்வினையை தகுந்தமுறையில் கொடுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த நேரத்தில் சொல்லி வைத்தால்போல இயக்கத்துள் குழுப்பம் ஏற்படுத்தப்பட்டது.
பிரிவுகளை ஏற்படுத்தி குழப்பமுனைந்தோர் இயக்கத்தைவிட்டு வெளியேறிய காலம் அது.
இயக்கத்துள் ஏற்பட்டிருக்கும் பிளவு சிங்களபேரினவாதத்தின் காதுகள்வரைக்கும் எட்டியும் இருந்தது.
இதுவே தருணம் தொடு அம்மை என சிங்கள உளவு அமைப்பு சரத்முனசிங்க தலைமையில் அலைந்து கொண்டிருந்த பொழுதில் இயக்கத்தில் எஞ்சி இருந்த ஒவ்வொருவரின் தோள்கள்மீதும் வரலாற்றின் பெரும்சுமை ஒன்று ஏறி உட்கார்ந்தது.
எப்படியும் இந்த சுழலுக்குள் இருந்து விடுதலைப் படகை மீட்டு எடுக்க வேண்டிய வரலாற்று தேவை வந்துவிட்டிருந்தது. அந்த நேரம் தலைவருடன் நின்றிருந்த அனைவரும் மெச்சத்தக்க பணிகளை செய்தார்கள் என்றாலும் சந்தோசம் மூன்று முனைகளில் இருபத்து நாலு மணி நேரமும் சுழன்றான்.
யாழ்.பல்கலைக்கழகத்துள் தமிழீழ விடுதலைக்கான ஒரு பாரிய வேலைத்திட்டத்தையும் அதே நேரம் ஆயுத ரீதியான தாக்குதல்களில் முதன்நிலை போராளியாக செயற்பட்டது மட்டும் இல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புதிய போராளிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்திலும் அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தில் எமது போராட்டத்தை விரிவாக்கும் வேலையிலும் உழைத்த முக்கியாமான போராளி சந்தோசம்.
சந்தோசம் புதிதாக உள்வாங்கிய போராளிகள் ஒவ்வொருவரிலும் சந்தோசம் மாஸ்ரரின் ஆளுமை தெரிந்து கொண்டே இருந்தது.
திருமலையில் இருந்து லெப்.சீலன் (சாள்ஸ் அன்ரனி),லெப்.கேணல் புலேந்திரன் லெப்.கேணல் அருணா போன்றோர் சந்தோசம் மாஸ்ரரின் தெரிவுகளே..
அதுமட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட கருத்துகளை தென்னமரவாடி தொடக்கம் கந்தளாய் வரைக்கும் ஒரு சைக்கிளில் அலைந்து விதைத்த வீரியமிக்க போராளி சந்தோசம்.
எங்கோ தொலைவில் மூதூரின் கிளிவெட்டி கிராமத்தில் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சந்தோசத்துடன் சைக்கிளில் பயணித்த அந்த நாட்களில் அவனுக்கு அந்த பாதைமுழுதும் எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்து உரையாடும் அளவுக்கு பரிச்சயம் இருந்தது தெரிந்து வியப்பே எழுந்தது.
இதற்கான அவனின் உழைப்பும் நித்திரை அற்ற நாட்களும் பசியுடன் இருந்த பொழுகளும் நிறையவே. மிக தூர இடத்து இயக்கவேலைக்கு என்று சென்று மாதக்கணக்கில் தங்குபவர்கள் பற்றி தலைவர் எப்போதும் கரிசனையுடனும் அதே நேரம் அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்ற தகவல் இன்றி தவிப்புடனுமே இருப்பார்.
தகவல் தொடர்ப்புகள் ஏதுமற்ற காலம் அது. ஆனால் சந்தோசம் பற்றி தலைவருக்கு தெரியும்.எந்த சூழலிலும் சந்தோசம் மாறமாட்டான், எந்த நிலைமைக்குள்ளாகவும் சந்தோசம் நுழைந்து வந்துவிடுவான் என்பதில் தலைவருக்கு ஏராளம் நம்பிக்கை.
இந்த வேலைகளுடன் சந்தோசம் இன்னுமொரு வேலைத்திட்டத்தையும் செயற்படுத்துவதில் உழைத்த ஒருவன். தமிழீழ விடுதலைப் புலிகள் முதன்முறையாக வெளியிட்ட உணர்வு என்ற பத்திரிகையிலும் சந்தோசத்தின் உழைப்பும் அவனின் கருத்துகளும் நிறையவே இருந்தன.
சிங்கள பேரினவாதம் போடும் எலும்பு துண்டுகளை ஏதோ விடுதலைக்கான மாற்றீடு என்று மற்றவர்கள் மேடைகளில் முழங்கியபோது உணர்வு மிகவும் திடமாக கூறியது இது சிங்களம் எறியும் சலுகை.
இதற்கு பின்பாக இத்தனை சூழ்ச்சி இருக்கிறது என உணர்வு பத்திரிகை எழுதி எமது மக்களை தெளிவாக்கியதில் சந்தோசத்தின் பங்கு அதிகம்தான்.
அதுமட்டுமல்லாமல் உணர்வு பத்திரிகை குழு என்ற பெயருடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராளிகள் இணைந்து கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து திடீர் கூட்டங்களை நடாத்தியதிலும் சந்தோசம் மாஸ்ரரின் வேலையே அதிகம்.
இன்று யோசித்தால்கூட திகைப்பாக இருக்கிறது. விடுதலை மீது இத்தனை நம்பிக்கை கொண்ட மனிதனாக இவன் இருந்திருக்கிறானே என்று. அத்தனை தெளிவும், உறுதியும் இருந்ததால்தான் தென் தமிழீழம் முழுதும் அவனால் கிராமம் கிராமமாக நடந்தும் சைக்கிளிலும் திரிந்து வேலை செய்ய முடிந்தது.
இன்னொரு பாசையில் சொல்வதானால் தமிழீழ விடுதலைப் புலிகளை திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் காட்டியவன் அவனே.
இது மட்டுமல்லாமல் சந்தோசத்தின் இன்னுமொரு திறமையும் சொல்லியாக வேண்டும். குறி தவறாமல் குண்டெறியும் ஆற்றல். இதற்காகவே அந்த நேரத்து தாக்குதல்களில் சந்தோசமும் ஒருவராக கட்டாயம் இருப்பார்.
திருநெல்வேலியில் சிங்களப் படைமீதான தாக்குதலில் 13 இராணுவத்தினன் கொல்லப்பட்டும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்ட பொழுதில் கமர் கிரனைட் என்ற புதிய எறிகுண்டுகளும் எடுக்கப்பட்டது.
ஜேர்மனிய இராணுவத்தால் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வகை அது. எப்படி பாவிப்பது என்பதை ஆங்கில கையேடுகள் மூலம் படித்து சொன்னதும் சந்தோசம்தான்.
அதுமட்டுமல்லாமல் முதலில் அதனை எறிவது யார் என்ற கேள்வி எழுந்தபோது தலைவர் சந்தோசத்தையே தெரிந்தார். இப்படி ஒரு விடுதலைக்கான அனைத்து வேலைகளிலும் முழு ஈடுபாட்டுடன் போராடிய தோழன் சந்தோசம்.
தான் இயக்கத்துக்கு சேர்த்த சீலன் மீசாலையில் மரணித்தபோது சந்தோசம் கலங்கியதை பார்க்கவும் நேர்ந்தது. அதுவும் கொஞ்ச நேரத்துக்குதான். அதில் இருந்து இன்னும் உறுதி எடுத்து போராடும் வலுவுடன் அவன் �சீலன் விட்டுப் போன வேலைகள் இன்னும் கிடக்கு.அது எல்லாத்தையும் செய்யிறதுதான் அவனுக்கு காணிக்கை� என்று சொல்லியபடி மீண்டும் தனது வேலைக்குள் ஆழ்ந்து போனது சந்தோசத்தின் இன்னொரு பக்கம்.
நாம் எல்லோரும் இன்றும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பெரும்பாடமும் சந்தோசத்தின் குணங்களில் ஒன்று. லெப்.சீலனை இயக்கத்துக்கு அழைத்துவந்தது சந்தோசம் மாஸ்ரர்தான்.
ஆனாலும் 81, 82 தொடக்கம் 83 யூலை 15ம்திகதி வரைக்கும் சாள்ஸ் அன்ரனியே (லெப்.சீலன்) இயக்கத்தின் தாக்குதற்பிரிவு தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டபோது சந்தோசம் மிகவும் விருப்புடனேயே முழு அர்ப்பணிப்புடனேயே சீலனின் வழிகாட்டலில் செயற்பட்ட ஒரு அற்புத மனிதன் சந்தோசம்.
தன்னால் இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்ட ஒரு போராளி தனக்கு தளபதியாக இருக்கிறானே என்ற வித்தியாசம் ஒரு சிறிதளவுகூட சந்தோசத்தில் தென்படாது.
அதிலும் பொன்னாலை பாலத்தில் கடற்பட ரோந்து அணி மீதான தாக்குதலிலும், சாவகச்சேரி காவல்நிலை தாக்குதலிலும் ஒவ்வொரு விடயத்தையும் சீலனிடம் கேட்டே செய்யும்போது சந்தோசம் எமக்கான பாடத்தை சொல்லாமல் சொல்லி நின்றான்.
அப்படியான ஒரு போராளி, தளபதி சந்தோசம் இந்தியப் படைகளின் பெரும் அணி ஒன்றை யாழ்.நகருக்குள் நுழையவிடாமல் தொடர்ந்து காக்கும் ஒரு போரில் வீர மரணத்தை சந்தித்தான்.
ஒரு சுருட்டு ஒன்றை பற்ற வைத்து ஊதி முடிப்பதற்குள் உங்களை அழித்து விடுவோம் என்று ஆணவத்துடன் சொல்லிய வல்லாதிக்கத்துக்கு வெல்ல இது ஒன்றும் பங்களாதேசோ, காஸ்மீர் பனிமலையோ அல்ல.
இது தமிழீழம். மலைகள் இங்கில்லாது விட்டாலும்கூட எமது மக்களே மலைகள். அவர்கள் ஆதரவே எம் பெரும் பலம். எமது வீரம் என்பது அச்சமறியாத ஆளுமையிலிருந்தே உருவாகிறது என்ற பெரும் செய்தியை சொல்லிய போராளிகளுள் சந்தோசமும் ஒருவன்.
நாளை எம் தேசம் நிச்சயமாக விடுதலை ஆகும். அப்போது அங்கு சிரிக்கும் சிறுகுழந்தை புன்னகையில், நிம்மதியான வாழ்வுக்குள் எமது மக்கள் விடும் ஆறுதல் பெருமிதத்தில் சந்தோசத்தின் புன்னகை என்றும் வாழும்.
நீ திரிந்த தம்பலகாமம் நெல்வயல்களில், மூதூர் கிராமத்தின் காடுகளில், வெருகல் வனப்பில் எல்லாவற்றிலும் தோழனே நீ அதே புன்னகையுடன் என்றும் இருப்பாய். நீ தேடிய விடுதலையை நாடிய படி.