வடக்கு மாகாண சபையின் தனித்துவத்தை பேணும் வகையிலும் எமது இலக்கை நோக்கிய பயணிக்கும் ஆண்டாக 2016 செயற்பாடுகள் அமைய வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2015 இற்கான வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்ததன் பின்னர், செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுடனான மதிய போசன நிகழ்வு யாழ்.கிறின் கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
2013 இல் தான் இந்த சிறிய பாலகன் ஜவட மாகாணசபைஸ தவழத் தொடங்கியது. வடக்கு மாகாண சபை என்பது இரண்டு வருடங்கள் தான் பூர்த்தியாகின்றது. இந்த இரண்டு வருடத்தில் காணப்பட்ட முரண்பாடுகளும் பிரச்சனைகளும் எங்களுக்குள்ளே இருந்த பரஸ்பர தப்பெண்ணங்களும் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறான ஒரு கூட்டத்தை கூட்டி எல்லோரினையும் ஒருமித்து உங்கள் எல்லோரிடமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்த ஒழுங்கமைப்பாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். வடக்கு மாகாண சபை ஆரம்பமாகும் போது நாங்கள் எல்லோருமே அரசியலுக்கு புதிது. ஆகவே பலவகையான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தோம்.
அப்போது இருந்த ஆளுநர் வித்தியாசமான ஒருவர். அதாவது இராணுவத்திலிருந்து வந்தவர். என்ற காரணத்தினால் எங்களிடையே பலவிதமான முரண்பாடுகள் காணப்பட்டன. இப்பொழுது அந்த காலம் மாறிக்கொண்டு வருகின்றது. இந்த வருடத்திலே பல நன்மைகளை கண்டு வருகின்றோம். ஆனால் அது காணாது. இந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் தொடங்கும் போது எங்களுடைய கட்டுப்பாடுகள் சற்று கடுமையாக இருக்கும் என்பதனை இப்போதே கூரிவைக்கின்றேன்.
ஏனென்றால் இதுவரை காலமும் எங்களுடைய நிதிக் கொடைகளை எவ்வாறு செலவளித்தோமேயானால், அதிலே பலவிதமான தடங்கல்கள் தடைகள், செயலாபடின்மைகள், தளர்வுகள், என பலதும் இருந்த காரணத்தினால் எல்லாவற்றையும் செய்யாதிருந்து கடைசி நேரத்தில் அவை செய்யப்பட்டுள்ளன. என்றாலும் ஓரளவிற்கு மற்றைய மாகாணங்களிலும் பார்க்க செய்து முடித்துள்ளோம்.
நல்லவழியில் எமது கொடிகள் செலவழிக்கப்பட்டாலும் முன்னர் திட்டமிட்ட செயல் திட்டங்களுக்கு பணத்தை செலவழிக்காமல் ஏதேதோ செயல் திட்டங்களுக்கு செலவளித்துல்லோம் என்பதே உண்மை. ஆனால் இவ்வாறு அடுத்த வருடம் இருக்க கூடாது. நேரத்துடன் எல்லா வேலைத்திட்டங்களும் தொடங்கப்படல் வேண்டும்.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மற்றைய மாகாணங்களை பார்க்கிலும் சற்று வேறுபட்டது. தமிழ் மக்கள் கூடியளவில் உள்ள மாகாணமாக இது உள்ளது. ஆகவே எங்களுடைய தனித்துவத்தை எடுத்து காட்டும் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயற்படல் வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.