பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை இன்று ( 06.10.2024) ஞாயிற்றுக்கிழமை காலை கொலம்பஸ் பிரதேசத்தில் காலை 9.31. மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை கீதம் இசைத்தலோடு ஆரம்பமாகியது.
இன்றைய நாள் வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
கடந்தவாரம் மழலையர் நிலை தொடங்கி வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் வளர் தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரையான தமிழ்ச் சோலை ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்பு ரீதியாக 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இலக்கண மற்றும் பாடத் தலைப்புக்கள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு வகுப்பு ரீதியாகத் தாம் தயார்படுத்தி தமது கற்பித்தல் திறனைத் திறமையாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இம்முறை ஒவ்வொரு ஆசிரியர்களின் குழுச் செயற்பாடுகளின் நடுவே நீண்டகால பட்டறிவுடைய பயிற்றுநர்கள் ஒவ்வொரு இலக்கண, பாடநூல், வரலாறு, பாடவிதான கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் சமகால அரசியல் போன்ற தலைப்புக்களின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட குறித்த நேரத்தினுள் காட்சிப்படுத்தலினூடாகத் தமது பயிற்றுரையை வழங்கியிருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.
அத்துடன், உளவியல் சார்ந்த பயிற்றுரையை பிரான்சு தேசத்தில் பிறந்து வளர்ந்து தமிழ்ச் சோலையில் கல்விகற்று தமிழ் இணைய வழியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்த உளவியலாளர் & முனைவர் பட்ட மாணவர் (Psychologue et Doctorant) நிந்துலன் அவர்கள் அழகிய தமிழில் திறம்பட ஆற்றியிருந்தமை அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தன.
அதேவேளை, குழுச் செயற்பாட்டில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்களும் பாடத்திட்டம், பாடநூல் மற்றும் துணைக்கருவிகளின் உதவியுடன் கற்பித்தல் செயற்பாட்டைத் திறம்பட வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டியிருந்தனர்.
ஒரு ஆசிரியர் பாடத்துடன் தொடர்புபட்ட துணைக் கருவியாக இறப்பர் பாம்பு ஒன்றை கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வழமை போன்று கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டிருந்தன.
குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பட்டறையூடாகத் தாம்பெற்ற தமது பட்டறிவுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்தத் தவறவில்லை.
நிறைவாக மாலை 16.30 மணியளவில் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தோடு பட்டறை இனிதே நிறைவடைந்தது.
( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -ஊடகப்பிரிவு)