யாழ். வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகள் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தன.
தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலும் வளலாய், பலாலி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் என்பவற்றிலிருந்தே இந்த 700 ஏக்கர் காணிகளும் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் திங்களன்று கொழும்பில் ஜனாதிபதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்ற யாழ் மாவட்ட அரச செயலக அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளது.
அதிகாரிகளின் இந்த விஜயத்தையடுத்து, அந்தப் பிரதேசத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் அங்கு சென்று தமது காணிகளின் எல்லைகளை அடையாளம் காட்டவும், அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் யாழ் அரச அதிபர் வேதநாயகன் மேலும் தெரிவித்துள்ளார்.