லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹிஸ்புல்லா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹிஸ்புல்லா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹிஸ்புல்லா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.