பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் கடும் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

0
91

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2024) வியாழக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழின உணர்வாளர் திரு. சுப்பிரமணியம் தவரூபன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரெஞ்சு தேசத்தின் தேசியக்கொடியை ஆர்ஜொந்தை நகர பிதா ஜோர்ஜ் மொன்ரோ அவர்கள் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி அச்சுதாயினி பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தூபிக்கான ஈகைச்சுடரினை சோதியா படையணியைச் சேர்ந்த மேஜர் விடுதலை அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க,
கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1999 ஆம் ஆண்டு யாழ். கொக்குவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பம் மாஸ்ரர் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 11.12.1995 அன்று சூரியக்கதிர் 2 நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த லெப்.சிவதாஸன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தூபிக்கான மலர்மாலையை 1998 ஆம் ஆண்டு கிளிநொச்சிப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கலையொளி அவர்களின் சகோதரன் அணிவிக்க,
கேணல் சங்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 23.01.2000 அன்று யாழ்ப்பாணத்தில், வீரச்சாவடைந்த வீரவேங்கை அற்புதன் அவர்களின் சகோதரன் அணிவிக்க,

தியாகதீபம் திலீபன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களின் துணைவியார் அணிவித்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் உணர்வோடு அணிவகுத்து சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவுரையை பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைப் பொறுப்பாளர் திரு. அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் குறித்த மாவீரர்கள் தொடர்பில் பல கருத்துக்களையும் அவர்களுடனான தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து “வீரன் மண்ணில் புதையும் போது…” என்ற பாடலை திருமதி தயாநிதி அவர்கள் பாடியிருந்தார்.

தியாக தீபம் நினைவு சுமந்த கவிதையினை கிளிச்சி தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் திரு.சச்சிதானந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து காலை 10.00 மணிக்கு அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்ட மூதாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு மாலை 17.00 மணியளவில் குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டு உண்ணாவிரதம் நிறைவுசெய்துவைக்கப்பட்டது.

சிறப்புரையினை தமிழர் தாயகத்தில் இருந்து வருகைதந்த வணபிதா கந்தையா ஜெகதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில், குறித்த மாவீரர்களின் ஈகம் பற்றி உணர்த்திய அதேவேளை, தாயகத்தின் இன்றைய நிலை பற்றியும் தனது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

நிறைவாக கொட்டும் மழைக்கு மத்தியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்த பின்னர். தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பிரெஞ்சுத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here