ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்!

0
61


(05.09,2013 – 05.09.2024)

புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்ககள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று ஐ.நா முன்றலில் முருகதாசன் திடலிலே தீயினிற் கருவாகி தமிழீழ விடுதலைக்கு ஒளியாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்கநாளில்

தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவாவில் 05.09.2013 அன்று தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு புலத்தேசத்தில் இருந்து தமிழீழ விடிவிற்காய் போராடிய “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன்

சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை.

அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் உரையாடியுள்ளார். உரையாடும் போது, தமிழீழம் மலரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எனவும் இறுதியாகத் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பொய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு ஓய்ந்து போயுள்ளான் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்.

புலம்பெயர் மக்கள் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பினால் துடித்துள்ளார்கள். ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது போராட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான ஒரு அர்ப்பணிப்பை வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான்.

தாய்மண்ணின் தணியாத தாகத்துடன் ஆகுதியாகிய தமிழ்த் தேசிய உணர்வாளரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி வணங்குவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here