தமிழீழ தேசியத் தலைவர் போன்று தோழர் தமிழரசன் அவர்களும் காலத்தால் அழிக்க முடியாத தமிழின அடையாளம்!

0
111

1984 ஆம் ஆண்டு, நான் திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டு அங்குள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு இரண்டு நாள்களுமே பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் யாராவது என்னைப் பார்க்க வருவார்கள்.
என்னைப் பார்க்க வருவதை விடவும், அவர்கள் கொண்டு வரும் தூக்குப் பையிக்காகத்தான் நான் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அதில், எனக்கான தின்பண்டம் இருக்கும். கம்யூனிஸ்ட் இயக்கத்தினரோடும், பெரியவர் தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பினரோடும் என் தந்தை வடமலைக்கு நெருங்கிய தொடர்பு இருந்த காலமது.
பகுதி நேர ஊழியர் என்று சொன்னாலும் முழு நேரமும் அமைப்பு சார்ந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். வீட்டில் வறுமை தாண்டவம் ஆடியதால் நான் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். யாருக்கு திங்கறப்பண்டம் வந்தாலும் அவரவர் நண்பர்களுக்கும் கிடைக்கும் என்பதால்
இந்த இரண்டு நாட்களுமே யார் யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காக சில மாணவர்கள் விடுதிக்கு முன்பாகவே காத்துக் கொண்டிருப்பார்கள். விடுதி இருந்த இடத்திலிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில், எனது உறவினர்கள் வரும்போதே அந்தத் தகவல், எனது நண்பர்கள் மூலம் எனக்கு வந்து விடும். என்னைச் சந்திக்க வரும் அக்கா, மாமா, அம்மா வழி தாத்தா, ஆயா, ஐயா, அம்மா அனைவரையுமே விடுதி மாணவர்களுக்குத் தெரியும்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் என்னைப் பார்க்க இதுவரை வராத யாரோ ஒருவர் வந்திருப்பதாக ஒரு மாணவன் ஓடிவந்து சொன்னான். இதுவரை என்னைச் சந்தித்திராத உறவு அது யாராக இருக்கும்? சந்தேகத்தோடு போனேன். விடுதிக்கு முன்புள்ள பெரிய வேப்பமரத்தின் கீழே ஒருவர் சைக்கிளைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
அவர் உடுத்தியிருந்த வேட்டியிலும், ஓட்டிக்கொண்டு வந்திருந்த சைக்கிளிலும் செம்மண் படிந்திருந்தது. நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டேன். காலில் தேய்ந்துபோன ரப்பர் செருப்பு, வேட்டியிலும், சட்டையிலும் குட்டை மண் படிந்திருந்தது. ஆறாடி உயரத்துக்கு மேலே வளர்ந்திருந்த அந்த நெடிய கம்பீரமான உருவத்தைப் பார்க்கும்போது, எனக்கு இனம் புரியாத மனநிலை.
இவர் யாராக இருக்கும்? என்ற கேள்வியோடு பக்கத்தில் போனேன். அந்தக் கருத்த உருவம் சிரித்துக்கொண்டே “வாங்க…” என்று என்னை மரியாதையோடு அழைத்தது. பெற்றோர், உறவினர், ஆசிரியர், நண்பர்கள் என எல்லோருமே “வாடா போடா” என்று அழைத்து வந்த அந்த நேரத்தில், என்னை வாங்க என்று கூப்பிட்ட முதல் மனிதர் அவர்தான்.
என் தோளைத் தொட்டு, முதுகில் தட்டிக் கொடுத்தபடியே “நல்லா இருக்கீங்களா…? என்ன படிக்கிறீங்க…? என்றார். அவர் கையிலும், ஓட்டிக்கொண்டு வந்திருந்த சைக்கிளிலும் தின்பண்டம் எடுத்து வந்ததிற்கான அடையாளம் எதுவும் இல்லை. பெருத்த ஏமாற்றத்தோடு “நல்லா இருக்கிறேன், ஏழாம் வகுப்பு படிக்கிறேன்” என்று சொன்னேன்.
பள்ளிப் பாடம் தொடர்பாக ஏதேதோ கேள்விகள் கேட்டார். என்ன பதில் சொன்னேன் என்பது இப்போது நினைவுக்கு வரவில்லை. விடுதியின் உணவு மற்றும் தங்கும் வசதிகளையும், வகுப்பில் உள்ள மாணவர் எண்ணிக்கையையும் கேட்டார்.
அவரது பேச்சில் படித்தவர் என்பது தெரிகிறது. ஆனால் உருவ அமைப்பு முந்திரிக்காட்டில் இருந்து வந்தவர் என்பதைக் காட்டியது. என்னைப் பார்த்துப் பேசும்போது, அவர் வயதை ஒத்துள்ள ஒருவரைப் பார்த்துப் பேசுவது போலவே மிகுந்த மரியாதையுடன் பேசினார். எனது ஐயாவைப் பற்றிப் பேசும்போது “தோழர் வடமலை” என்ற சொற்களைப் பயன்படுத்தினார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் நாங்கள் பேசியிருப்போம். இறுதியாக “நல்லா படிக்கனும், பெரிய ஆளா வரனும். தோழர் வடமலை பெயரைக் காப்பாத்தணும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னைச் சந்திக்க ஐயா வந்தார். வந்ததுமே “உன்னைப் பார்க்கப் பெரியவர் வந்தாரா…?” என்றுதான் கேட்டார்.
பெரியவர் என்று அப்பா கேட்டதும் நான் அவரை விட வயதில் மூத்தவர் என்று நினைத்துக் கொண்டு “இல்லைங்க ஐயா ” என்றேன். இல்லப்பா போன வாரம் ஞாயிற்றுக்கிழமை உன்னை வந்து பார்த்ததாக சொன்னாரே…?. நீ நன்றாகப் பேசியதாகவும், எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவாய் என்றும் எங்கிட்டே சொன்னாரே” என்றார்.
பெரியவர் யார் என்று எனக்குப் புரியவில்லை. என் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த ஐயாவே “பெரியவர் தமிழரசன்தான் உன்னைப் பார்க்க வந்ததாகச் சொன்னார் என்றார். தமிழரசன் என்ற அந்தப் பெயரை அந்த இடத்தில்தான் முதன்முதலாகக் கேட்டேன்.
படித்தவர் போன்ற பேச்சும், படிப்பறிவில்லாதவர் போன்ற தோற்றமும் கொண்டிருந்த “அவர் என்னய்யா செய்கிறார்” என்று கேட்டேன். “அவர்தான் மக்களின் தலைவர், அவர் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற ஓர் இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார். வயதில் சிறியவராக இருந்தாலும், அவரை பெரியவர் என்றுதான் மரியாதையோடு நாங்கள் எல்லோரும் அழைப்போம். எஞ்சினியரிங் படித்துள்ளார். அவரது பெயர் தமிழரசன்” என்று என்னென்னவோ சொன்னார். எனக்கு அந்த வயதில் ஐயா சொன்னதில் பாதிக்குமேல் புரியவில்லை.
ஐயா இதற்கு முன்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த போது திட்டக்குடி கடைத்தெருவில், கையில் கொடி பிடித்துக்கொண்டு, உண்டியல் ஏந்தி காசு வசூலித்துக் கொண்டு வருவார். சாலை ஓரங்களில் உட்கார்ந்து கொடிக் கம்பம் நடுவதற்காகக் வேர்க்க விறுவிறுக்க குழி நோண்டிக் கொண்டிருப்பார்.
என்னோடு படிக்கும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்களின் செல்வாக்கைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். எனக்கு ஐயாவின் செயலைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் வேதனைப் பட்டிருக்கிறேன். ஐயா சார்ந்துள்ள அமைப்பு எப்படிப்பட்டது? என்ன நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது? என்பதெல்லாம் எனக்கு அந்த வயதில் தெரியவில்லை .
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விடுமுறையில் ஆக்கனூர் பாளையத்திலிருந்த எங்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நள்ளிரவு நேரம், நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டது. ஐயா, அம்மா எல்லோருமே எழுந்து உட்கார்ந்தோம். அம்மாவின் தலைமாட்டில் குறைவான வெளிச்சத்தில் சிம்னி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அம்மா அந்த விளக்கின் திரியை ஏற்றி விட்டார்.
வீட்டின் பின்வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. கதவை திறக்கப்போன அம்மாவிடம் சைகை செய்து “போக வேண்டாம்” என்கிறார் ஐயா. அதே பலத்துடன் முன் வாசல் கதவும் தட்டப்படுகிறது. “உதட்டு அசைவிலேயே போலீஸ் வந்திருக்காங்க” என்கிறார் ஐயா. அம்மா முந்தானையைப் பிசைந்து கொண்டிருக்கிறார். இருவரின் வாய் அசைவு மட்டுமே தெரிகிறது, காற்றின் மொழியில் பேசிக் கொள்கின்றனர்.
எதற்காக போலீஸ் வந்துள்ளனர்? வழக்கமாக அந்தப் பகுதியில், கள்ளச் சாராயம் காய்ச்சுவோரை போலீசார் பிடித்துக்கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். நம் வீட்டிற்கு எதற்காக இந்நேரத்தில் வந்துள்ளனர் என்று எனக்கு புரியவில்லை. கதவைத் திறக்கலாமா வேண்டாமா…? என அப்பாவும், அம்மாவும் யோசித்து கொண்டிருக்கிறனர். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் போயிருக்கும். அப்போதும், வெளியிலிருப்போர், “கதவைத் திறங்க வடமலை, கதவைத் திறங்க…” என்று கத்திக்கொண்டே, விடாமல் கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர்.
என்னை ஓரமாக நிற்கச் சொல்லி விட்டுப்போன ஐயா, கதவைத் திறந்து விடுகிறார். ஏழெட்டு போலீசார், கையில் டார்ச் லைட்டுடன் உள்ளே பாய்ந்து வந்தனர். டார்ச் வெளிச்சத்தில், வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் பரபரப்போடு தேடினர். கம்பு, சோளம் போட்டு வைக்கும் மண் குதிரினையும் (தொம்பை) திறந்து பார்த்தனர். பண்ட பாத்திரங்களை காலால் எட்டி உதைத்தனர்.
நான்கைந்து பேர் ஐயா முன் வந்து நின்றனர். தமிழரசன் எங்கே…? என்று ஒருவர் கேட்டார். அப்பா பதில் சொல்லும் முன்பாகவே ஒருவன், ஐயாவின் கன்னத்தில் ஓங்கி அறைகிறான், “தமிழரசனா… அவர் யாரென்றே எனக்கு தெரியாது” என்றதும் ஒருவன் கையில் வைத்திருந்த தடியால் மடாரென்று துணியற்ற அவரது தோள்பட்டையில் அடிக்கிறான். அதிர்ச்சியில் நான் உறைந்துபோய் நிற்கிறேன்.
வீட்டுக்குள்ளே வந்த போலீசாரை விட அதிக எண்ணிக்கையில், வீட்டின் கொல்லைப் பகுதியில் கொஞ்சம் பேர் யாரையோ தேடி, மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருக்கின்றனர். வெளியில் இருந்து வந்த ஒரு போலீஸ் அதிகாரி, “இந்த ஆள் சொல்ல மாட்டான் இவன் பொண்டாட்டியை அடிச்சா உண்மையைச் சொல்லுவான்” என்கிறார்.
ஒருவன் அம்மாவை அடிக்கப் போகிறான், இன்னொருவன் அம்மாவை “வாடி, போடி” என்று கெட்ட வார்த்தைகளில் திட்டியபடியே, “நீ தாண்டி தமிழரசனுக்கு சோறு போட்டுருப்ப. உனக்குத் தெரியாம இருக்காது. மரியாதையா சொல்லுடி” என்று கத்திக்கொண்டே, பளாரென்று அறைகிறான்.
அப்பாவை அடிக்கும்போது கூட எனக்கு பெரிதாக வலிக்கவில்லை. அவர் அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும், போலீசுக்கும் எதோ பிரச்சனை நடந்துள்ளது என நினைத்துக் கொண்டிருந்தேன். எதுவும் தெரியாத அம்மாமேல் கைவைத்தபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“எதுக்குங்க எங்க அம்மாவை அடிக்கறீங்க…? மரியாதையாக பேசுங்க, உங்க அப்பாவை, அம்மாவை இப்படிப் மானக்கேடாப் பேசுனா உட்ருவீங்களா..? ஆவேசத்தோடு கத்தினேன். நான் கத்தி முடிப்பதற்கு முன்பாகவே என் கன்னத்தில் ஒருவன் ஓங்கி அறைந்து விட்டான். காதுக்குள் வின் என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தலை கிறுகிறுத்தது. காதைப் பிடித்தபடி அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டேன்.
மீண்டும் “தமிழரசன், தமிழரசன்” என்ற பெயர் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. என்னையும் ஐயாவையும் தரையோடு இழுத்துக் கொண்டுபோய் வெளியே நின்ற வேனுக்குள் தூக்கிப் போட்டனர் காவலர்கள். திட்டக்குடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து, என்னை ஓர் அறையில் உட்கார வைத்துவிட்டு, இன்னொரு அறையில் ஐயாவை அடித்துக் கொண்டிருந்தனர். எலும்பும் தோலுமான அவரது உடம்பில் விழும் குண்டாந்தடிகளின் சத்தம் என் உயிரை உலுக்கி எடுத்தது.
என்னிடம் பேசிய ஒருவர் “என்ன படிக்கிறாய்? எங்கே படிக்கிறாய்? என்று கேட்டார். சொன்னேன், “நீ எல்லாம் இதற்கு பிறகு படிக்கவும் முடியாது, படித்து அரசாங்க வேலைக்கும் போக முடியாது, சுழிச்சுடுவோம். நீயாவது உண்மையைச் சொன்னால் தப்பிக்கலாம். தமிழரசன் வந்தானா? எப்ப வந்தான்?” என்று கேட்டு மிரட்டினார்.
பக்கத்து அறையில் ஐயாவுக்கு அடி விழும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருகிறது. வலி தோய்ந்த குரலில் “அவங்க யாரும் வரவில்லை. நான் யாரையும் பார்க்கவில்லை” என்றே சொல்லிக் கொண்டிருந்தார். நான் அதற்கு முன்பும், அதற்குப் பின்னரும் கேட்டிராத கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் அந்த இரவுதான் கேட்டேன். அந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லித்தான் போலீசார், எங்கள் குடும்பத்தாரைத் திட்டினர்.
மறுநாள் காலைப் பொழுது விடிந்தது. சிரித்த முகத்தோடு ஓர் அதிகாரி என்னைச் சந்திக்க வந்தார். “இராத்திரி நடந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். தேவ…. பசங்க, அவங்க அப்படிதான் பேசுவாங்க. அவங்க பொறப்பு அப்படி. நீ பயப்படாதே. நான் பார்த்துக்கிறேன்” என்று ஆதரவாகப் பேசினார்.
“நீ நல்ல பையன், நன்றாகப் படிக்க வேண்டும். பெரிய ஆளாக வரவேண்டும்” என்றெல்லாம் சொன்னார். எனக்கு ஆறுதலாக இருந்தது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தேன்.
“தமிழரசன் எப்பவெல்லாம் உங்க வீட்டுக்கு வந்திருக்கிறார்…? என்கிட்டே மட்டும் சொல்லு” என்று புன்னகையுடன் கேட்டார். இவர்களைப் பார்க்க எனக்கு பயங்கரமாக இருந்து. இரவு விசாரித்தவன் குரூர மிருகம் என்றால் இவன் அவனை விட குரூர மிருகம் என அந்த வயதிலும் எனக்கு இவர்களை இனம் காண முடிந்தது. ஐயா சொன்னது போலவே “தமிழரசனை எனக்குத் தெரியவே தெரியாது. நான் பார்த்ததில்லை” என இறுக்கத்தோடும் தீர்மானமாகவும் ஒரு பொய்யை சொன்னேன். மேலும்
“மூனு வருசமா நான் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறேன்” என்றேன். அதற்குப் பிறகு, என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. மதியம் வரை ஐயாவிடம் மிகக் கடுமையாக விசாரித்தபடியே இருந்தனர். இறுதியாக தமிழரசன் வந்தால் கட்டாயம் தகவல் கொடுக்க வேண்டுமென்று எழுதி வாங்கிக்கொண்டு ஐயாவையும், என்னையும் அனுப்பி விட்டனர்.
அதற்குப் பிறகுதான் “பெரியவர் என்பவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்” என்று ஐயாவிடம் கேட்டேன்.
முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம், ஏழைப் பாட்டாளிகள், தோழர்கள், பொதுவுடைமை, அழித்தொழிப்பு, உழைக்கும் வர்க்கம், சுரண்டல்வாதிகள், மாவோ, லெனின், மார்க்ஸ் என என்னன்னவோ சொன்னார். அந்த வயதில் எனக்கு ஏதோ ஒரு அளவோடுதான் புரிந்தது. ஆனால் ஐயா நல்ல வேலைகளை மட்டும்தான் செய்வார், நல்லவர்களுடன் மட்டும்தான் தொடர்பு வைத்திருப்பார். அப்படியானால், தமிழரசனும் நல்லவராகத்தான் இருப்பார் என உறுதியாக நம்பினேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது கலைக்கழகப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியிலிருந்து சில மாணவர்களை பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போயினர். பள்ளி வளாகத்திலிருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, இயற்கைக் காட்சிகளை வரைந்து கொண்டு இருந்தேன்.
நான் கலந்து கொண்ட ஓவியப் போட்டியைக் கண்காணிப்பதற்காக வந்திருந்த ஓர் ஆசிரியர், இன்னோர் ஆசிரியரிடம் பதட்டத்தோடு எதோ சொல்லி கொண்டிருந்தார். அதில் வந்த தமிழரசன் என்கிற சொல் மட்டும் எனக்கு கேட்டது. அதை உன்னிப்பாகக் கவனித்தேன். பொன்பரப்பி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றபோது தமிழரசனை பொதுமக்கள் அடித்துக் கொன்று விட்டதாக இருவரும் பேசிக்கொண்டனர்.
இதுவரை எங்கள் குடும்பத்திலோ அல்லது எங்களின் நெருங்கிய உறவினர் குடும்பத்திலோ எந்தவொரு சாவும் நிகழ்ந்ததில்லை. சாவின் வலி என்னவென்றே எனக்குத் தெரியாது. செத்து விட்டார்கள் என்ற செய்தியை அப்பொழுதுதான் முதன்முறையாகக் கேட்டேன். ஐயாவோடு தொடர்புடைய ஒருவர் செத்துவிட்டார் என்ற துக்கம் என்னை நிலை குலைய வைத்தது. எதையே வரைந்து கொடுத்துவிட்டு, திட்டக்குடிக்கு வந்துவிட்டேன். இரவு தூக்கமே வரவில்லை.
“தமிழரசன் நல்லவர், மக்களுக்காக வாழ்பவர். தமிழ்நாட்டை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று பாடுபடுபவர். வறுமையை ஒழித்து விவசாயிகள், தொழிலாளர்கள் எல்லோரும் செழிப்போடு வாழவேண்டும் என போராடுபவர்” என ஐயா சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை எதற்காக போலீஸ் தேடினார்கள்? தமிழரசன் எதற்காக வங்கியில் கொள்ளையடிக்கப் போனார்? எதற்காக அடித்துக் கொன்றார்கள் எதுவும் எனக்கு விளங்கவில்லை.


தலைமறைவாக இருந்த சில நாள்களுக்குப் பிறகு ஐயா என்னை பார்க்க ஒருநாள் விடுதிக்கு வந்தார். “பெரியவர் என்று நீங்க சொன்ன தமிழரசன் என்பவரை பொன்பரப்பியில் ஏன் அடித்துக் கொன்று விட்டார்கள் என்று கேட்டேன்.
சட்டென கலங்கி, தலையை சாய்த்தபடியே “காவிரி நதி நீர்ப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரப் பெரியவர் முயற்சி செய்து வந்தார். அதற்காக வங்கியில் பணபறிமுதலுக்காக சென்றபோது, மொண்டி உளவாளி ஒருவன், காட்டிக் கொடுத்து விட்டான். திட்டமிட்டு போலீசார், பெரியவரை அடித்து கொன்று விட்டனர்” என்றார்.
காவிரியில் என்ன பிரச்சனை? அதைப் பெரியவர் எப்படித் தீர்க்கப் போனார்? எதற்காக வங்கியில் கொள்ளையடிக்க வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஒருவருக்கு மக்களும், போலீஸூம் உதவிதானே செய்திருக்க வேண்டும். ஏன் அப்படிச் செய்யாமல், அடித்துக் கொன்றார்கள் என பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. ஆனாலும், அதற்கான பதில் தேடும் வயது அப்போது எனக்கில்லை.
1989 ஆம் ஆண்டு இறுதியில், +2, தேர்வு எழுதிவிட்டு, நான் திரைப்படத்துறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டைவிட்டு சென்னைக்குக் கிளம்பினேன். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகன் திரைத்துறைக்குப் போவதை விரும்ப மாட்டார்கள், அதைத் தடுப்பார்கள். ஆனால் என் தந்தை “நீ திரைப்படத்துறைக்குப் போனால், பெரியவரைப் பற்றி ஒரு திரைப்படமாவது எடுக்க வேண்டும்” என்று என் கண்களைப் பார்த்து தீர்க்கமாக கேட்டுக் கொண்டார்.
நான் திரைப்படத் துறைக்கு வந்த பிறகு, பத்தாண்டுகள் துணை இணை இயக்குநராக வேலை பார்த்து 2000ஆவது ஆண்டில், ‘கனவே கலையாதே’ திரைப்படமும், 2007 இல் ஆட்டோ சங்கர் 2009 இல் சந்தனக்காடு தொடர்களையும் 2010ல் மகிழ்ச்சி திரைப்படத்தையும் இயக்கி முடித்தேன். ஐயா சொன்னது மனதில் உறுத்திக் கொண்டேயிருக்க ஒருமுறை ஊருக்குப் போகும்போது பெரியவர் தமிழரசன் கொல்லப்பட்ட பொன்பரப்பிக்கு சென்றேன். அங்கிருந்த எனது உறவினர், நண்பர்களிடம் “பெரியவர் தமிழரசன் கொல்லப்பட்டபோது பக்கத்திலிருந்த யாரையாவது பார்க்கவேண்டும்” என்று கேட்டேன்.
அரசு வேலையிலிருந்த ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவரிடம் “என்ன நடந்தது…?” என்று கேட்டேன். தோழர் தமிழரசன் பணம் பறிமுதல் செய்த அந்த வங்கி வாசலுக்கு என்னை அழைத்துச் சென்று நடந்ததனைத்தையும் ஒரு காட்சிபோல என் கண்முன் விவரிக்க ஆரம்பித்தார். அன்று பொன்பரப்பி வாரச்சந்தை. பக்கத்து ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கனோர் அங்கு வந்து கூடியிருந்தனர். தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேரும் சைக்கிளில் வந்து வங்கிக்குள் நுழைந்து பறிமுதல் செய்த பணத்தையும் நகைகளையும் எடுத்துக்கொண்டு முதலியார் தெரு வழியாக வெளியே வந்தனர். அங்கே மாட்டு வண்டிகளைக் குறுக்கே போட்டு, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது.
ஏற்கனவே சீறுடையற்று காத்திருந்த காவல்துறையினர், “வங்கி அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு, கொள்ளைக் கூட்டம் தப்பிப்போகிறது” என்று சந்தைக்கு ஓடிச் சென்று கத்தியுள்ளனர். ஒட்டுமொத்த சந்தைக் கூட்டமும் ஆவேசத்தோடு தமிழரசன் குழுவினரை நோக்கி ஓடி வந்தனர். அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு லாரி, கொஞ்சம் போல ஆட்களை இறக்கி விட்டுச் சென்றது. அதிலிருந்தவர்களும், ஓடிவந்த பொதுமக்களோடு சேர்ந்து கொண்டு அருகில் கிடந்த கல்கட்டைகளை அள்ளி வீசி ஐந்து பேர்களையும் அடித்தனர். தமிழரசன் குழு பதிலுக்கு திருப்பித் தாக்கவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் ரயில்வே துறை தவறு செய்திருந்தாலும் அரியலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த உறவுகளால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஆற்றமுடியாத ரணமும் வலியுந்தான்.


அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முந்தைய நாள் முந்திரிக்காட்டில் வைத்து தமிழரசன் அவர்கள் தனது தோழர்களிடம் நாம் நடத்தவிருக்கும் இச்சம்பவத்தில் நமக்கு எது நடந்தாலும் சரி பொதுமக்கள் ஒருவருக்குக்கூட ஒரு சின்னக் கீறல் ஏற்பட்டு விடக்கூடாது என உறுதிபட சொல்லிவிடுகிறார். கூட்டம் கற்களால் அடிக்க அடிக்க அடிகளை வாங்கிக் கொண்டே தோழர் தமிழரசனும் இதர தோழர்களும் இதெல்லாம் உங்களுக்காகத்தான் எடுத்தோம் இந்தாங்க இந்தாங்க என பணத்தையும் நகைகளையும் வாரி வாரி மக்கள்முன் இறைக்கிறார்கள். மக்கள் எதற்கும் இசைவதாக இல்லை. பெருங்கூட்டம், பேரிரைச்சல். மக்களோடு மக்களாக அவர்களின் பின்னால் நின்ற சீறுடையற்ற காவலர்கள் கத்தியபடி கல்வீசி அவர்களை உணர்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை காத்துக் கொள்வதற்காக சுட்டால் அல்லது கைக்குண்டுகளை வீசினால் தங்களின் முன் நிற்கும் நமது உயிருக்கு நிகரான மக்கள்தான் பலியாவார்கள் என்பதை முற்றிலும் உணர்ந்த பெரியவர் இனி ஒருபோதும் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது என கட்டளையிடுகிறார். சுற்றி வளைக்கப்பட்ட மாபெரும் மக்கள் திரளுக்குள் அகப்பட்டுக் கொண்ட அவர்கள் இனி தப்பிக்கவே முடியாது என்பதனை உள்ளுணர்ந்த நொடிகளுக்குள்ளாகவே சரமாரியான கற்கள் ஒரு பெரு மழையைப்போல வந்து விழ நிலைதடுமாறிப் போகிறார்கள். அடித்து நகர்த்தி நகர்த்தி பொன்பரப்பியின் கீழேரிக்கரையில் உள்ள அரவான் களப்பலி நிகழ்விடத்தின் பக்கமாக கொண்டுவந்து மூர்ச்சையற்ற நிலையில் அவர்களை தரை சாய்க்கின்றனர். அன்றைய அந்தி நேரத்தில் என்னிடம் அவர் சொல்ல சொல்ல என் உடம்பெல்லாம் வலியெடுத்து துக்கம் தொண்டையடைக்க அதே அரவான் களப்பலி நிகழ்விடத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அப்போது முளைத்த நிலவொளி பட்டு வெள்ளிக் கோடுகளாக தளும்பிக் கொண்டிருக்கிறது எங்களுக்கு அருகில் கிடக்கும் கீழேரி. மேலும் தொடர்கிறார்.


“காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டவேண்டும். காவிரி நீரைத் தேக்கி வைத்திருக்கும் கபினி, கண்ணம்பாடி அணைகளை வெடிவைத்து உடைக்க வேண்டும் என பெரியவர் தமிழரசன் முடிவெடுக்கிறார்.
அதற்காகத்தான் எங்கள் ஊர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது அப்போது எங்களுக்கு தெரியாது. வந்தவர் தோழர் தமிழரசன்தான் என்பதும் தெரியாது. எதுவும் தெரியாமலேயே முகம் தெரியாத ஆட்களோடு சேர்ந்து நின்று மூக்கமாக அடித்துப் போட்டு விட்டோம்.
இரத்தக் காயங்களோடு நினைவற்று, நா வறண்டு கிடந்த தோழர்கள் தண்ணீர் தண்ணீர் என முனகினர். குளம் நிறைய நீரிருந்தும், நாங்கள் தண்ணீர் தர மறுத்து விட்டோம். தமிழ்நாட்டின் தாகம் தீர்க்க நினைத்த தோழர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலே உயிரை விட்டனர்.
பெரியவரின் மரணத்திற்குப் பிறகு, அரசு எங்கள் ஊருக்குப் பல சலுகைகளைச் செய்தது. அதில் ஒன்று மேல்நிலை குடிநீர்த்தொட்டி. எந்த இடத்தில் தொட்டி கட்டலாம் என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு செழிக்க வேண்டும் என்ற வேட்கையோடு புரட்சி செய்தவர் பெரியவர் தமிழரசன். தோழர்களை நாங்கள் அடித்துப் போட்டு, துடிதுடிக்க உயிர்விட்ட அதே இடத்தில் தண்ணீர்த் தொட்டி கட்டுங்கள்.
மகத்தான மக்களின் தலைவன் மரணத்துக்கு காரணமான நாங்களும், எங்களின் அடுத்த தலைமுறையினரும், காலம் முழுவதும் குற்ற உணர்வோடு அந்தத் தொட்டியின் தண்ணீரை குடிக்க வேண்டும் என்றோம்.
அதன்படியே அதே இடத்தில் கட்டப்பட்டு நின்று கொண்டிருக்கும் நீர்த் தேக்கத் தொட்டியினை கைநீட்டிக் காட்டினார். நிலவொளியில் பிரமாண்டமான அந்த நீர்த் தேக்கத் தொட்டியினை நான் அன்னாந்து பார்க்கிறேன். எனது அருகிலிருந்த ஊரார்கள் தலைகுணிந்து நின்று கொண்டிருந்தார்கள்.

பெரியவர் தமிழரசன் மக்களுக்காக வாழ்ந்தவர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருப்பவன், இல்லாதவன், சாதி, மதம் என்ற ஏற்றத் தாழ்வுகளைப் போக்க தன் உயிர் மூச்சென இறுதிவரை போராடியவர். எதிர்பாராமல் நடந்த கொடிய நிகழ்வால் இளம் வயதிலேயே துரோகத்தால் வீழ்த்தப்பட்டார். அவர் கொல்லப்பட்ட இடத்தில், கட்டியுள்ள தண்ணீர் தொட்டி எந்த வேறுபாடும் இல்லாமல், இன்றுவரை பொன்பரப்பி பொதுமக்கள் எல்லோருக்கும் குடிநீர் வழங்கிக் கொண்டுள்ளதை பார்க்க பார்க்க எனக்கு நெஞ்சமெல்லாம் கனத்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

ஈழ மண்ணின் விடுதலைக்காக 1970 களின் இறுதியில், மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஆயுதம் தாங்கிய போரைத் தொடங்கினார். அதே காலகட்டத்தில், பெரியவர் தமிழரசன் அவர்களும் தமிழ்நாட்டில் ஆயுதப் போருக்கு அடித்தளம் அமைக்கிறார்.
சிங்கள ஆளும் வர்க்கம், ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது. கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை சட்டம் போட்டு தடுத்தது, திட்டமிட்டு பறித்தது. ஆட்சி, அதிகாரமற்ற நிலையை உருவாக்கி, தமிழர்களை அடிமைப்படுத்தியதால், மேதகு பிரபாகரன் சமரசமின்றி போராடினார்.
அப்போது இந்திய ஆளும் அதிகாரவர்க்கமும், அடிமைப் பட்டுக் கிடக்கிற தமிழீழ தமிழர்களின் பக்கம் நிற்காமல் சிங்கள அரசுக்கு துணை போனது. இங்கிருந்து அமைதிப்படையை அனுப்ப முடிவெடுத்ததைக் கண்டு வெகுண்டெழுந்த பெரியவர் தமிழரசன், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான அரியலூர் மருதையாற்று இரயில் பாலத்தை குண்டு வைத்துத் தகர்த்து தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அதிகாரத்தைப் பறித்து கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை சிதைத்தது. தமிழர்களின் வாழ்வாதார உரிமையான காவிரி நீதிநீர் பங்கிட்டில், தொடர்ந்து துரோகம் செய்து வந்தது. இத்தகைய சூழலில்தான் கர்நாடகாவில் உள்ள அணைகளை உடைக்கத் தீர்மானித்து வஞ்சகத்தால் இன்று நம்மிடையே இல்லாமல் போய்விட்டார் தோழர் தமிழரசன்.
அறுபது ஆண்டுகளுக்குமுன் தமிழீழ, தமிழ்நாட்டு மண்ணில் தோன்றிய இவர்கள் இருவராலும் தொடங்கப்பட்ட இயக்கங்கள் இன்று மௌனித்து இருக்கலாம். ஆனால் அவர்களின் லட்சியங்களும், நோக்கங்களும் நிறைவேறாமல் அப்படியேதான் இருக்கின்றன. சொல்லப் போனால், இன்னும் இன்னும் மோசமான பின்னடைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறது .
இப்பூமிப் பந்தில் அறம் சார்ந்து வாழும் ஒரு ஆதி இனத்தை வேரறுப்பதை அதிகாரவர்க்கங்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இயற்கையும், காலமும் தனக்கான நாயகர்களை தானே உருவாக்கிக் கொள்ளும் என்கிற கோட்பாட்டிற்கிணங்க வாழ்ந்த மேதகு பிரபாகரன் அவர்களையும், தோழர் தமிழரசன் அவர்களையும் போல மீண்டுமொருவர் உருவாவதை இந்த உலகத்தில் எவராலும் தடுக்க முடியாது. இதே நிலை நீடித்தால்
எதிர்காலத் தலைமுறை தமிழ் தேசியத்தின் இருக் கண்களாக, ஆகப் பெரும் தமிழினத் தலைவர்களாக இவர்கள் இருவரையும் முன்னிறுத்திப் போராடி வெற்றி பெற்ற தமது சொந்த மண்ணில் ஒன்றுகூடி கொண்டாடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே நான் உறுதியாக சொல்வேன்.

பொன்பரப்பிக்கு சென்று வந்த பிறகு அவ்வப்போது நான் ஊருக்குப் போகும் போதெல்லாம், பெரியவரோடும் என் தந்தையோடும் தொடர்புடைய பலரையும் பார்ப்பேன், பேசுவேன், விசாரிப்பேன். ஆனால் எந்த செய்தியையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் எல்லோருமே பெரியவரைப் பற்றிய சிறுசிறு செய்திகளை மட்டுமே சொன்னார்கள். பெரியவருடைய பயணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் பரவி இருந்துள்ளது. அதனை ஒரு பகுதியில் விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியாது என்பதும் தெரிந்தது.
பெரியவர் தமிழரசனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் என்னைப் போலவே பலருக்கும் இருக்கிறது. இந்த நூல் அதற்குத் தீர்வாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

பெரும்நம்பிக்கையோடு,
வ.கௌதமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
01.09.2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here