சுனாமி பேபி 81 என்றழைக்கப்பட்ட அபிலாஷ் இப்போது 11 வயது நிரம்பிய சிறுவனாக!

0
210

Baby81_2இற்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் காணாமற்போன ஒரு குழந்தை தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும் பெரிதும் பேசப்பட்டது.

ஊடகங்களின் தலைப்புச் செய்தியை அலங்கரித்த அந்தக் குழந்தையை சுனாமி பேபி 81 என்றே அப்போது அனைவரும் அழைத்தனர்.

இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிரம்பிய குழந்தையாக சுனாமி பேபி 81 என்ற அடையாளத்துடன் ஊடகத்தின் கண்களை கவர்ந்திழுத்த அபிலாஷ் சிறுவனாக தனது தந்தை சகிதம் வருகை தந்திருந்தார்.

காணாமற்போன சுனாமி பேபி 81 இப்போது 11 வயது நிரம்பிய சிறுவனாக அம்பாறை செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்றுவருகின்றார்.

வந்தாரை வரவேற்கும் நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் வழமைபோன்று அபிலாஷ் மற்றும் அவரது தந்தையை இன்முகம் காட்டி இருகரம் நீட்டி வரவேற்பதற்கும் தவறவில்லை.

சுனாமி பேபி 81 இற்கு உரிமை கோரி 9 பெற்றோர்கள் கண்ணீரும் கம்பலையுமாக அன்று தேடி அலைந்து அழுது அரற்றியதை காணும் அரிய வாய்ப்பினை நாம் அபிலாஷிக்கு ஏற்படுத்திக் கொடுத்தோம்.

எனினும் அவரது கண்களை ஒருவித ஆச்சம் ஆக்கிரமித்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.

சுனாமி பேபி 81 இன் இறந்தகாலக் கதை என்ன? யார் இந்த அபிலாஷ்?

சுனாமி பேரிடர் கொடுத்த பேரிடியில் மூழ்கிய கல்முனை வைத்தியசாலை அன்று அல்லோலகல்லோலப்பட்டு அமைதியற்று காட்சியளித்தது.

கடலின் அத்துமீறலால் தமது பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரின் ஒப்பாரி அன்று கல்முனை வைத்தியசாலையின் செவிகளை ஆக்கிரமித்திருந்தது.

அதேவேளை தான் எதிர்நோக்கியுள்ள விக்கினத்தை அறியாமல் பால்மணம் மாறாத இந்தக் குழந்தை அன்று கல்முனை வைத்தியசாலையிலுள்ள தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருந்தது.

சுனாமி பேபி 81 என்று இந்தப் பாலகனுக்கு நாமம் சூட்டி பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்து தனயனை ஒப்படைக்கும் பணியில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தீவிரம் காட்டினர்.

இடியப்ப சிக்கலாய் அழுது சிவந்த கண்களுடன் 9 தாய்மார் கல்முனை வைத்தியசாலைக்கு படையெடுத்து சுனாமி பேபி 81 இற்கு உரிமை கோரினர்.

மண்டையைப் போட்டுடைத்த வைத்தியசாலை நிர்வாகம் சுனாமி பேபி 81 இன் பெற்றோரை கண்டுபிடிக்கும் கவலையில் ஆழ்ந்தது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் உதவியை வைத்தியசாலை நிர்வாகம் நாடியது.

தனது தனயன் இவர் என சுனாமி பேபி 81 இற்கு உறுதியாய் உரிமை கோரிய 9 பெற்றோரும் மரபணு பரிசோதனை செய்து உரித்துடைமையை நிரூபிக்குமாறு நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டனர்.

51 நாட்கள் உருண்டோடின…

52 ஆவது நாளில் சுனாமி பேபி 81 ,ஜெயராஜ்,ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு பெற்றோரின் அன்புக் கரங்களில் பிஞ்சுக் குழந்தை தவழ்ந்தது.

அன்று சர்வதேசத்தின் கவனத்தை கவர்ந்திழுத்து செய்திகளின் தலைப்பை அலங்கரித்த சுனாமி பேபி 81 இற்கும் அவரது பெற்றோர்களுக்கும் 2005 ஆம் ஆண்டு டொலர் தேசத்தில் நடைபெறும் குட்மோர்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கான அரிய வாய்ப்பு கிட்டியது.

இலட்சக்கணக்கான மக்களுக்கு அழிவினை ஏற்படுத்திய ஆழிப்பேரலை தந்த அதிஷ்டமாய் 13 நாட்கள் ஜெயராஜ் ஜூனிலதா தம்பதியினர் அபிலாசுடன் அமெரிக்காவில் தங்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here