பாக்கியம்மா – சிறுகதை

0
594

nangoori 0picture-3அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு  புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று.

அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள்.  எலும்புக்கு தோல் போர்த்தியது  போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது.

குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை  இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள்  இன்று  ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது போலிருந்தது.

இருள் கலைந்திராத அந்த விடிகாலைப் பொழுதில் தனது சுருங்கிப்போன கண்களை மேலும் இடுக்கிப் பூஞ்சியவாறு கரையிறங்கப் போகும் நிலத்தின் அசுமாத்தங்களை ஆவலோடு நோட்டமிடத் தொடங்கினாள் பாக்கியம்மா.

அது ஒரு ‘புளுஸ்டார்’ வகை மீன்பிடிப்படகாக இருந்தது. அதிலே பொருத்தப்பட்டிருந்த பதினெட்டு குதிரை வலுக்கொண்ட என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய படகோட்டிகள் இருவரும் ‘சளக்’ ‘சளக்’ என சத்தமெழும்படியாக தண்ணீருக்குள் குதித்து இறங்கினார்கள்.

சராசரி உயரமாயிருந்த அவர்களது நெஞ்சு மட்டத்திற்கும் மேலாக கடல்நீரேரி தளம்பியது. அதிக உயரத்திற்கு எழும்பாமல் மிதமாக மோதிக் கொண்டிருந்த அலைகளின் மீது பலமாக உலாஞ்சியது அந்தப் படகு.

ஆளுக்கொரு பக்கமாக அதன் விளிம்பை அழுத்தமாகப் பற்றிப் பிடித்தவாறு கரையை நோக்கி தள்ளிக் கொண்டு நடந்தனர்  படகோட்டிகள். இதுவரையிலும் அவர்களிடமிருந்த உச்சமான பதட்டம் இப்போது ஓரளவு தணிந்து போயிருந்தாற் போலிருந்தது. குழந்தைகள் முதியவர்கள் உட்பட பயணிகள் பத்துப் பதினைந்து பேர் வரை அந்தப் படகிலிருந்தனர்.

அதுவரையிலும்  மௌனத்தில் அமுங்கிப் போயிருந்த அனைவரது நாசிகளிலிருந்தும் நீண்ட பெருமூச்சுக்களோடு அச்சம் வெளியேறியது. உயிரைப் பறிக்கும் பெரிய கண்டமொன்றிலிருந்து இன்றைக்கு அரும்பொட்டில் காப்பாற்றப்பட்டு விட்டதற்காக தத்தமது கடவுள்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டனர் பயணிகள்.

“எண்ட தாந்தா மலையானே” பாக்கியம்மாவும் வாய் விட்டுப் பிரார்த்தித்துக் கொண்டாள். அவளது மனசுக்குள் அந்தரிப்பான உணர்வொன்று கிளறத் தொடங்கியிருந்தது. முழங்காலளவு தண்ணீருக்குள் பயணிகள் இறக்கி விடப்பட்டிருந்தனர்.

படகோட்டிகளில் ஒருவனின்  கையை உதவியாகப்  பிடித்துக் கொண்டு  பாக்கியம்மாவும்  இறக்கி விட்டிருந்தாள். உப்பிப் பெருத்திருந்த தனது பயணப் பையில் ஒரு துளியும் உப்புத் தண்ணீர் படாதவாறு அவதானத்துடன் உயர்த்தி  தலையிலே சுமந்து கொண்டாள். மறுகையால் சேலையை சற்றுத் துாக்கிப்பிடித்தவாறு தண்ணியைக் கடந்து நடந்த போது விறைத்துப் போயிருந்த மெலிந்தான அவளது கால்கள் தள்ளாமையால் இடறின. ஈர மணலில் புதையப் புதைய கஷ்டப் பட்டு நடந்து கரையேறியிருந்தாள் பாக்கியம்மா.

கடலின் தொடுவானத்தில் பனையளவு உயரத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த வெள்ளியொன்று திடீரென எரிந்து கொண்டே சென்று நீரேரிக்குள் விழுந்தது. பாக்கு நீரிணையின் தொடுப்பாக பரந்து கிடந்த அந்தக் கடல் நீரேரி இனம்புரியாத பயங்கரத்துடனும் துயரத்துடனும் தனது சிற்றலைக் கரங்களால் நெஞ்சிலடித்தபடி நிம்மதியற்றுத் துடித்துக் கிடப்பதைப் போல தோற்றமளித்தது. வாழ்வில் ஒரு தடவையேனும் பயணம் வந்திராத யாழ்ப்பாணப் பட்டினத்தின் கிளாலிக் கரையோரம் தலையில் நிறைந்த சுமையுடன் தனியாக நின்றிருந்தாள் பாக்கியம்மா.

கரையை வந்தடைந்திருந்த வேறு சில படகுகளிலிருந்தும் ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். தற்காலிகமாக முளைத்திருந்த சின்னஞ்சிறு கொட்டில் கடைகளும், பெற்றோல் மாக்ஸ் விளக்கு வெளிச்சங்களுமாக திருவிழாக் கால பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கிளாலிக் கடல் நீரேரிக்கரையின் பல இறங்கு துறைகளில் இதுவுமொன்றாகும்.

இன்றைக்கு வழமைக்கு மாறான இருளும் அமைதியும் கவிந்து போயிருந்தது. கண்ணுக் கெட்டிய துாரம் வரையிலும், ஒரு அரிக்கன் விளக்கு வெளிச்சத்தைக் கூட காண முடியாமலிருந்தது. இருளுக்கு பழகிப்போன கண்களின் நிதானத்துடன் அங்கிருந்தவர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டுக் கடந்து போகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர்.

“இன்னும் எப்பன் விடிஞ்சவுடன ‘பொம்மர்’ காரன் குண்டு போடத் தொடங்கிடுவான் அதுக்கிடையில எழுதுமட்டுவாள் சந்தியைக் கடந்திட்ட மெண்டால் தப்பி விடுவம்” என்றவாறே சற்று துாரமாக இருளுக்குள்  நிறுத்தப்பட்டிருந்த ‘மினிபஸ்’ ‘தட்டிவான்’ ‘லான்ட் மாஸ்ரர்’ போன்ற வாகனங்களில் இடம் பிடிப்பதற்காக மூட்டை முடிச்சுகளுடன் அறதி பறதியாக சனங்கள் ஓடிச் சென்று கொண்டிருந்தனர்.

பாக்கியம்மாவுக்கானால் அடுத்ததாக என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளது வீட்டிலிருந்து புறப்பட்டு இன்றோடு மூன்றாவது நாளாகிறது. கடலையும் கடந்து வந்தாயிற்று, இனி எந்தத் திசையால் எங்கே போவது என்ற குழப்பம்  பாக்கியம்மாவைப் பீடித்துக் கொண்டது.

அலங்க மலங்க  விழித்தவளாக சுற்று முற்றும் பார்க்கத் தொடங்கினாள். கண்ணுக் கெட்டிய துாரம் வரைக்கும்  நீண்டு செல்லும் கடற்கரையும், அதற்கு அப்பால் விரிந்து செல்லும்  வெட்டை வெளியுமே தென்பட்டது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது  போல பாக்கியம்மாளுக்கு எல்லாமே இருள் மூடிக் கிடப்பதாகத் தோன்றியது.

அதே கடல் நீரேரிக் கரையில் இன்னொரு பகுதியில் அமைந்திருந்த இறங்கு துறையை இலக்கு வைத்து ‘பைற்றர்’ ரக உலங்கு வானூர்திகள் இரண்டு வட்டமடித்தபடி தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தன. காதைக்கிழிக்கும் ‘கடகடகட.. கிர்..கிர்’ என்ற வினோதமான சத்தத்துடன் ‘தேட்டி கலிபர்’ கனரக துப்பாக்கிகள் சன்னங்களைப் பொழிந்து தள்ளின. கீழேயிருந்தும் மேற் கொள்ளப்பட்ட எதிர்த் தாக்குதல்களால் அந்தப் பிரதேசமே அதிரத்  தொடங்கியது. தனது பயணப்பையை இறுக்கிப் பற்றியவாறு பக்கத்திலிருந்த ஒற்றை தென்னையுடன் ஒண்டிக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா. இருண்ட வானத்தில் வெடித்துச் சிதறிய சன்னங்கள் ஒளிப்பிளம்புகளாக கடலிலும் கரையிலும் சொரிந்து கொண்டிருந்தன.

“எண்ட கதிர்காமத்தானே , நான் பெத்த புள்ளையை கண்ணால காணு மட்டுமெண்டாலும் இந்த உசிர காப்பாத்திக் குடப்பா” என அரற்றத் தொடங்கியது பாக்கியம்மாவின் மனது. அந்தப் பயங்கரமான வான வேடிக்கையை காணச் சகிக்காத தேய்பிறை நிலவு முகில்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் தாக்குதலை நிறுத்திய உலங்கு வானூர்திகள் தூரமாகச் சென்று மறைந்து போயின. இப்போது அந்த இடத்தை ஒரு மயான அமைதி மூடியிருந்தது. வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியதுமே கையிலிருந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் வீசியெறிந்து விட்டு, உயிரைக்காத்துக் கொண்டால் போதுமென ஓடிச் சென்றிருந்தவர்கள் பலர், மீண்டும் அவசர அவசரமாக அவற்றை எடுத்துச் செல்வதற்காக வரத் தொடங்கினர். தனக்குப் பக்கத்தில் மீண்டும் சன நடமாட்டங்களைக் கண்ட பாக்கியம்மாவுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டாற் போலிருந்தது.

அங்கு நின்றிருந்தவர்கள் யாரிடமாவது உதவி கேட்கலாம் என நினைத்துக் கொண்டாள். தன்னைத்தானே சுமந்து நடப்பதே பெரும் பாடாக இருக்கும் நிலையில், கல்லுக்குண்டாக கனத்துக்கொண்டிருந்த பயணப்பையையும் இழுத்துச் சுமப்பதால் பாக்கியம்மாவுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ஆனாலும் கடவுளுக்குப் படைக்கும் ஒரு நைவேத்தியம் போல மிகவும் பக்குவமாக அதைச் சுமந்து கொண்டிருந்தாள். நகரத்திற்கு செல்லும் பஸ் வண்டியை பிடித்து விட்டால் அங்கு போனதன் பின் எப்படியாவது தனது மகனைப் பற்றிய விபரங்ளை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இப்போதும் அவளிடம் பலமாகவே இருந்தது.

அங்கே மிகவும் பர பரப்பாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டாள். அவசரமாக அவனருகே சென்றவள் “மகன்…..மகன்.. நான் யாழ்ப்பாணம் போக இருக்கன், எந்தப் பக்கத்தால போய் எங்க வசியைப் பிடிக்கிறண்டு விளங்கல்ல மகன், ஒல்லம் காட்டி விடுவியளோ நல்லாயிருப்பியள்” மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள் பாக்கியம்மா. மனமோ ‘கடவுளே… கடவுளே…’ என் அரற்றிக் கொண்டிருந்தது.

“யாழ்ப்பாணம் போற வாகனங்களெல்லாம் போட்டுது எண்டு நினைக்கிறன்..” அவளை நிமிர்ந்து பாராமலே பதில் கூறினான் அந்த இளைஞன்.  பாக்கியம்மாவுக்கு பகீரென்றிருந்தது. கண்கள் சிவந்து தலைமுடி கலைந்து, சேட்டின் மேல் பட்டன்கள் திறந்திருந்த நிலையில், எண்ணெய் வடியுமாப் போலிருந்த முகத்துடன் அந்த இளைஞன் மிகவும் களைப்படைந்தவனாயிருந்தான்.  ஏதோவொரு தூண்டுதலில் அவனது முகத்தையே ஊடுருவிப் பார்த்தக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா.`

“எவடம் போக வேணும்” எந்த உணர்ச்சிகளுமே இல்லாத இயந்திரக் குரலில் கேட்ட  இளைஞன், தனது வேலையிலிருந்து தலையை நிமிர்த்தி ஒரு கணம் கூட சுற்று முற்றும் பார்க்கத் தோன்றாதவனாக இருந்தான்.

“நான் யாழ்ப்பாணந்தான் போகவேணும் மகன்..” அதைத் தவிர சொல்லுவதற்கு அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.பாக்கியம்மாவின் தெளிவற்ற பதில், தனது வேலையில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த  இளைஞனுக்கு  சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
“இது யாழ்ப்பாணம் தானணை போக வேண்டிய ஊரைச் சொல்லுங்கோவன்”

தன்னைத்தானே மிகவும் பரிதாபமாக உணரத் தொடங்கினாள் பாக்கியம்மா. அந்த இளைஞனின் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா? இல்லையா? என்பதை அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. அந்த நேரத்தில் அவனை விட்டு விட்டால் அந்த இடத்தில் இன்னொரு உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் அவளுக்கு அறவே இல்லாதிருந்தது.

அன்றிரவு கிளாலிக் கடல் நீரேரியில் கடற்புலிகளுக்கும், கடற் படையினருக்கும் நடந்து முடிந்திருந்த கடற் போருக்கு பதிலடித் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தில், அந்த கரையோரப்பகுதி எந்தச் சன நடமாட்டமும் இன்றி துடைத்து விட்டாற் போலிருந்தது.

“நீங்கள் எவடமெண்டு சொன்னியலெண்டால் போற வழியில இறக்கி விடுறன்” இப்போது அவன் பொருட்களை வாகனத்தில் ஏற்றி முடித்திருந்தான். வானத்தை அண்ணாந்து பார்த்தவன் காற்றுத் திசையிலே தலையை சரித்து சத்தங்கள் ஏதும் கேட்கிறதா என அவதானித்தான். அதன் பின்பாகவே தனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பாக்கியம்மாவிடம் அவனுடைய பார்வை திரும்பியது.

“மகன்… நான் மட்டக்களப்பிலருந்து யாழ்ப்பாணத்திற்கு முதமுதலா இப்பத்தான் வந்திரிக்கன், இயக்கத்தில இரிக்கிற எண்ட மகனாரைப் பாத்துப் போக வேணும். எனக்கு முன்னப் பின்ன இடம் வலம் எதுவும் தெரியாதே மகன், நான் என்ன செய்யிற, இண்டைக்கெண்டு பாத்து சண்டயும் மூண்டிட்டு இந்தப் பாவி எங்க போவன் எப்பிடி என்ர புள்ளயை பாப்பனடாம்பி…..” அவளறியாமலே அடிவயிற்றிலிருந்து கேவலொன்று புறப்பட்டது. காலத்தின் கோடுகளால் நிரம்பியிருந்த அவளது முகத்தில் அதீதமான களைப்பு அப்பிப் போயிருந்தது. இமைச்சுருக்கங்களுக்குள் கண்ணீர் தேங்கியிருந்தது.

பாக்கியம்மாவின் பதில் அந்த இளைஞனது இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் ஈரம் கசியச் செய்திருக்க வேண்டும். இப்போது தலையை நிமிர்த்தி அவளின் முகத்தை ஆதரவோடு நோக்கினான்.

“ம்… சரியம்மா பிரச்சனையில்ல என்னோட வாங்கோ முதல்ல இந்த இடத்தை விட்டுப் போகவேணும், அங்கால போய் மிச்சத்தை யோசிப்பம்” எனக் கூறியவனாக பாக்கியம்மா சுமந்து கொண்டிருந்த பயணப்பையை தனது கையில் வாங்கிக் கொண்டான். சற்று தூரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியதொரு ஹைஏஸ் வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சட்டென ஒரு நிம்மதி மனதுக்குள் பரவுவதை உணர்ந்தாள் பாக்கியம்மா. அந்த இளைஞனுக்குப் பின்னால் இயன்றவரை வேகமாக நடந்து செல்ல முயற்சித்தாள். மணலுக்குப் புதையும் காலடிகளை தூக்கி நடப்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. எத்தனை அடிகள் முன்னோக்கியெடுத்து வைத்தாலும் அந்த இடத்திலேயே நிற்பது போலிருந்தது.

நீரேரியின் மெல்லலைகள் சடுதியாக வேகமெடுத்து ’தடபட’ வென சத்தமெழுப்பியவாறு அவளுக்கு பின்னே ஓடி வருவது போல ஒரு தோற்றம் ஏற்பட்டது. திடீரென அந்த இடத்தை விட்டுக் கடந்து போகவே அவளுக்கு விருப்பமில்லாதிருப்பது போல உணர்ந்தாள். அப்படியே அந்த குறுமணலில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொள்ள வேண்டும் போல  மிகவும் அசதியாக  இருந்தது.

“அம்மா எப்பன் வேகமா வாங்கோ” அந்த இளைஞன் அவளை துரிதப் படுத்தினான். தலையிலிருந்து வழிந்து கிடந்த முந்தானையை இழுத்துப் போர்த்துக் கொண்டவாறு நடையை வேகப்படுத்தினாள் பாக்கியம்மா. ’ஊ… ஊ…’ வென இரைந்து கொண்டிருந்த காற்று அவளை இறுக்கமாகத் தழுவிக் கொள்வது போலிருந்தது. “ம்… ஏறுங்கோம்மா மெதுவா.. மெதுவா.. பாத்து ஏறுங்கோ கவனம்” அந்த வாகனத்தில் வேறு ஆட்கள் எவரும் இருக்கவில்லை. ஏதேதோ பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, வாகனத்தை நிறைத்திருந்தது. சாரதியின் இருக்கையில் ஏறிக் கொண்ட இளைஞன் வாகனத்தை செலுத்தத் தொடங்கினான்

அவனுக்கு பக்கத்து ஆசனத்தில் பாக்கியம்மா அமர்ந்திருந்தாள். சற்று முன்புவரை அவளைச் சூழ்ந்திருந்த பதட்டங்களும் பயமும் மறைந்து போய் மனதில் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டிருந்த நிலை அவளது முகத்தில் தெரிந்தது. தனது மகனும் பெரியவனாய்  வளர்ந்து இந்த இளைஞனைப் பார்த்தாற் போல் இருப்பானோ என ஒரு கணம் நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பின் பூரிப்பில் தன் மகனைக் காணும் ஆவலால் உந்தப்பட்டவளாக தாந்தாமலையானை மனசுக்குள்  வேண்டிக் கொண்டாள். தென்னஞ் சோலைகளும் பனங்கூடல்களும் நிறைந்திருந்த கிளாலியின் கிடங்கு பள்ளமான கிரவல் வீதியில் கடலில் தள்ளாடும் படகைப் போலவே அந்த வாகனமும் பாக்கியம்மாவை ஏற்றிக் கொண்டு பயணிக்கத் தொடங்கியிருந்தது.

வான் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் நிறைந்ததான அந்தப் பகுதியைக் கடந்து பிரதான வீதியில் ஏறும் வரைக்கும் அவர்களிடையே இறுக்கமான  மௌனம் நிலவியது. எத்தனையோ வருடங்களாக கறுப்புத் தார் ஊற்றப் பட்டிராத பிரதான வீதியின் கிடங்கு பள்ளங்கள் இன்னும் பெரிதாக இருந்தன.

என்ன நிறமென அனுமானிக்க முடியாதபடி பெயின்ற் கழன்று மங்கிப் போயிருந்த அந்த வாகனத்தின் கதவுகள் இப்போதே கழன்று விழுந்து விடுவன போல ‘கட கடா..கடகடா..’ வென ஆடிக் கொண்டிருந்தன. தண்ணீர் இறைக்கும் இயந்திரம் போன்றதொரு சத்தத்துடன், மண்ணென்ணையும் ஓயிலும் கலந்த  கரும்புகையைத் ‘புரு..புரு’ வென தள்ளியவாறு, யாழ்ப்பாணம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது அந்த  வாகனம். இனம் புரியாத பாசமும் நன்றியுமாக மெலிதாக துளிர்த்துக் கிடந்த கண்ணீருடன், அடிக்கடி தலையைத் திருப்பி அந்த இளைஞனின் முகத்தை பார்த்துக் கொண்டாள் பாக்கியம்மா. இப்போது நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற வயதிலேதான் அவளது மகன் ஊரிலிருந்த இன்னும் சில பையன்களுடன் சேர்ந்து காணாமல் போயிருந்தான். சின்னஞ் சிறுசுகளாக ஏழு பிள்ளைகளுக்கு தாயாக இருந்தவளால், அந்தச் சந்தர்ப்பத்தில் ஓடியாடித் திரிந்து தனது மகனைக் தேடிக் கண்டு பிடிக்க முடியாதிருந்தது.

கோயில் குளமெல்லாம் அலைந்து நேர்த்தி வைத்தாள். ஒரேயொரு தங்க நகையாக காதிலே அணிந்திருந்த தோடுகளை விற்று ஒரு பூசாரியைப் பிடித்து ’வெற்றிலையில் `மை’ போட்டுப் பார்த்தாள். அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்ததில் மகன் இயக்கத்திற்குதான் போயிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் எங்கே எப்படி இருக்கிறான் என்ற விபரங்களை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

இன்றைக்கு எப்படியாவது தன்னுடைய செல்ல மகனின் முகத்தை பார்த்து விடுவேன் என்ற நினைவு அவளுக்குள் அளவுகடந்த மகிழ்ச்சியையும், நலிந்து போயிருந்த அந்த சரீரத்திற்குள் புதிதான தெம்பையும் ஏற்படுத்துவது போலிந்தது. எப்போதும் இறுக்கமாக மூடிக்கிடக்கும் அவளது காய்ந்த உதடுகளுக்குள் அதிசயமாக இன்றொரு புன்னகை மலர்ந்திருந்தது.

“அம்மா உங்கட மகனின்ற இயக்கப் பெயர் என்ன? எந்தப் படையணியில இருக்கிறார்?” இதுவரையும் வாகனத்தை ஓட்டுவதிலேயே தனது கவனத்தைக் குவித்திருந்த இளைஞனின் கேள்வி பாக்கியம்மாவின் நினைவுகளைக் கலைத்தது.

அவளின் முகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த நுணுக்கமான மாற்றங்களை அவன் கவனித்தக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய எதிர்பாராத கேள்வியால் பாக்கியம்மாவின் மனம் மெல்ல உலுக்கப் பட்டதைப் போலிருந்தது.

“கோவிச்சிக் கொள்ளப்படாது மகன், 89 ல எண்ட புள்ள வீட்டை விட்டு வெளிக்கிறங்கீட்டான். அதுக்குப்புறவு எனக்கு எந்த விசழமும் தெரியாது, இந்த ஆறேழு வருசமா குளறிக் குளறிக் கிடந்தன். போன மார்கழிலதான் என்ர புருசனாரிட மருமகப் பொடியன் ஒருத்தன் ஏதோ கை காரியமா யாழ்ப்பாணம் வந்தடத்தில, றோட்டில எண்ட மகனைக் கண்டிரிக்கான்.

இவனுக்கு அடையாளம் பிடிபடல்ல. எண்ட மகன் தான் ‘மச்சான் மச்சான்’ எண்டு கூப்பிட்டு கதைச்சிரிக்கான். ரெண்டு நிமிசமும் வராதாம், ஒரு ட்ராக்கில கன பொடியனுகளோட நிண்டவனாம், ‘அம்மாவை கண்டியோ’ எண்டு மட்டும் தானாம் கேட்டவன் எண்ட புள்ள, மறுகா ‘அவசரமா போக வேண்டியிருக்குது மச்சான் வாறன்’ எண்டாப் போல ஓடிக் கொண்டு போய் ட்ரக்கில ஏறீட்டானாம், கனதுாரம் கையை ஆட்டிக் கொண்டே போனவனாம், ‘என்ன பொடிசா இருந்தவன் இப்ப பெருத்து உசரமா வளந்து மீசையெல்லாம் வைச்சி அப்பிடியொரு அழகனா இரிக்கான் மாமி’ எண்டு மருமகப் பொடியன் வாயில கையை வைக்கான்”

பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டாள் பாக்கியம்மா. துயரமும் பெருமிதமுமான உணர்ச்சிக் கலவைகள் அவளது முகத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன. தலையிலிருந்த சேலைத்தலைப்பை எடுத்து கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.

வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞனின் பார்வை வீதியில் பதிந்திருந்த போதும், அவனது மனதில் பாக்கியம்மாவின் வார்த்தைகள் கல் வெட்டுகளாக இறங்கிக் கொண்டிருந்தன. வழமையாக அதிகாலை நேரங்களில் அவனுக்கு ஏற்படும் நித்திரை மயக்கம் இன்றைக்கு அறவே இல்லாதிருந்தது.

பாக்கியம்மா விட்ட இடத்திலிருந்த தொடர ஆரம்பித்தாள். அவளுக்கு இப்போது நிறையக் கதைக்க வேண்டும் போலிருந்தது. கல்லுப் போல இறுகிய முகத்துடன் காணப்பட்ட அந்த இளைஞன் தனது கதைகளை விளங்கித்தான் கேட்கிறானா இல்லையா என்பதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் எப்போதுமில்லாதவாறு தன் மனசு மிகவும் இலேசாகியிருப்பதாக உணர்ந்தாள்.

“நான் அடுத்த நாளே யாழ்ப்பாணத்திக்கு கிளம்பியிருப்பன் மகன், அப்பிடி எண்ட மனசு கிடந்து துடிச்சிது, என்ன செய்யிற இவ்வளவு துாரம் பயணம் கட்டுறதெண்டா கையில மடியில செலவுக்கு வேணுமே, இவங்கட அப்பாவும் சொந்தத்தில ஒருத்தனோட சின்ன தகராறு பட்டதில சூனியம் வைச்சிட்டானுகள், அவரு இப்ப பாயும் படுக்கையுமாதான் இரிக்கார், மற்றதுகள் எல்லாம் பொட்டைக் குஞ்சுகள். நான் எங்க போறடா மகன்.. வெள்ளாமை விளையும் மட்டும் பாத்துக் கிடந்தன். இத்தினை வருசத்திற்குப் பிறகு பாக்கப் போற எண்ட புள்ளைக்கு ஆசைப்பட்ட பணியாரங்கள் எல்லாம் செஞ்சு வந்திருக்கன், மறுவா கிறுகிப் போவேக்க புள்ளைட காலடி மண் எடுத்துப் போய் கண்ணுாறு சுத்திப் போட வேணும்”

இப்போது தனது சீட்டில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள் பாக்கியம்மாள். இன்றைக்கு எப்படியாவது மகனின் முகத்தைப் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. அந்த இளைஞன் வாகனத்தை வீதியோரமாக ஒரு மரத்திற்கும் கீழே நிறுத்தி விட்டு இறங்கினான். “அம்மா கொடிகாமம் வந்திட்டுது இறங்குங்கோ தேத்தண்ணீ ஏதாவது குடிச்சிட்டுப் போவம்”

‘என்னவொரு இரக்கமான புள்ள.. எண்ட மகனைப் போல, அவனும் இப்பிடித்தான் வீட்டில இருந்த காலத்தில அம்மா அம்மா எண்டு, எண்ட காலைத்தான் சுத்திச் சுத்தி வருவான், காட்டுக்கு சுள்ளி முறிக்கப் போறண்டாலும் சரி, ஆத்தில றால் பிடிக்கப் போறண்டாலும் சரி, வெள்ளாமை வயலுக்க நெல்லுப் பொறுக்கப் போறண்டாலும் சரி எண்ட சீலைத்துணிய பிடிச்சிக் கெண்டு பின்னால இழுபடுவான். எல்லா வேலையும் செஞ்சு தருவான், நா பெத்த தங்க மகன் இப்ப எங்கயிரிக்கானோ..”

அவளுக்கு எப்போதுமே தனது மகனைப் பற்றி நினைவுகள் ஏற்படும் போது கட்டுக்கடங்காமல் உணர்ச்சிகள் பொங்குவது வழமையானது. இன்று  அதிகமாகவே அவளது மகனின் நினைவுகளால் மனம் நிறைந்து போயிருந்தாள்.

திடீரென அந்த இடம் ஒரே களேபாரமாகியது. “எடேய் வந்திட்டான்ர பொம்பர்காரன், எங்க கொட்டப் போறானோ தெரியேல்ல” சனங்கள் பதறியடித்தக் கொண்டு ஓடினார்கள். கிடைத்த மறைவுகளுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டார்கள். காலுக்கு கீழே நிலமும் காற்றும் அதிருவதை பாக்கியம்மா உணர்ந்தாள்.

“தலைக்கு மேலால றவுண்ட் எடுக்கிற படியால இவடத்திற்கு அடிக்க மாட்டான், கிளாலிக் கரைக்குத்தான் அடி விழப் போகுது. அந்தா..அந்தா பதியிறான்.. குத்தியிட்டான் குத்தியிட்டான், இந்தா எழும்புறான், அங்கார் அடுத்தவனும் அதே இடத்திலதான் குத்திறான்”

ஒவ்வொரு குண்டு வீச்சு விமானங்களையும் அதன் தாக்குதல் உத்திகளையும் சனங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். திகிலுாட்டும் சினிமாப் படத்தின் காட்சிகளைப் பார்ப்பது போல விறைத்த மனநிலையுடன் விமானங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வீதியில் போய்க் கொண்டிருந்த வாகனங்களும் அந்தந்த இடத்திலே அகப்பட்ட மறைவுகளில் புகுந்து நிறுத்தப்பட்டன.

அந்த நேரம் பூமியின் அசைவியக்கமே நின்று போனதைப்போல இருந்தது. குண்டுகள் வெடித்த போது எழுந்த காற்றின் உதைப்பினால் நீண்ட துாரத்திலிருந்த கட்டடங்களும், மரங்களும் கூட அசைவதை உணர முடிந்தது. இறுதியாக பெரிய இரைச்சலுடன் வட்டமடித்த விமானங்கள் இரண்டும் ஆகாயத்தில் பரப்பில் காணாமல் போயின. அவைகள் குண்டுகளை வீசிச் சென்ற கிளாலிக் கடல் நீரேரிக்கரையிலிருந்து கரிய புகை மண்டலங்கள் வானளாவி எழுந்து கொண்டிருந்தன.

“நேற்றிரவு கடலில பெரிய சண்டைதான் நடந்திருக்குது போல”

“இண்டு முழுக்க அடியாத்தான் இருக்கப் போகுது”

“கடைக்காரண்ணை இன்னும் பேப்பர் வரல்லையே” இப்படியாகக் கதைத்த படியே மக்கள் தத்தமது வேலைகளில் மூழ்கத் தொடங்கினார்கள். இப்போது சூரியக் கதிர்களின் வெம்மை பூமியில் பரவத் தொடங்கியிருந்தது.

அந்த  வாகனம் தொடர்ந்தும் ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளைப் புறாக்களாக பள்ளி மாணவர்கள் வீதியை நிறைத்தபடி பாடசாலைகளுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். கடைக்காரர்கள் வாசலுக்கு தண்ணீர் தெளித்து சாம்பிராணி துாபம் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆவேசமாக சைரன் ஊதியபடி அம்புலன்ஸ் வண்டியொன்று வீதியைக் கிழித்தவாறு வேகமாக யாழ்ப்பாணப் பக்கமாக பறந்து சென்றது. அது கிளறிச் சென்ற தூசு மண்டலம் வீதியை மூடி மறைத்தது.

ஒரு ஒழுங்கையின் முகப்பில் நாதஸ்வர தவில் வாத்தியங்களுடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பளபளப்பாக உடுத்துக் கொண்டிருந்த கூட்டத்தினரிடையே சில பெண்கள் தட்டுகளில் ஆராத்திப் பொருட்களை சுமந்து கொண்டிருந்தனர். அதுவொரு சாமத்தியச் சடங்கு ஊர்வலமாக இருந்திருக்க வேண்டும்.

இன்னும் சற்றுத் துாரத்தில் வீதிக்கரையை அண்டிய சிறிய கோவிலொன்றின் முகப்பில் லவுட்ஸ் பீக்கர் பாடிக் கொண்டிருந்தது. ஓரிரண்டு கச்சான் கடைகளும் பக்கத்தில் ஒரு ஐஸ் பழ வண்டியும் நின்று கொண்டிருந்தது. காலைப் பூசைக்கு போயிருந்த சனங்கள் தலைக்கு மேலாக கைகளை உயர்த்தி ‘அரோகரா’ சொல்லிக் கொண்டிருந்தனர் ’அம்மாளே.…நல்ல சகுனம்’ என நினைத்துக் கொண்டாள் பாக்கியம்மாள்.

“அம்மா உங்கட மகன்ர இயக்கப் பேர் என்னண்டாவது தெரியுமே?” தன்னுடைய மகனைக் கண்டு பிடிப்பதற்கு ஏதாவதொரு விபரம் அகப்படுமா என அந்த இளைஞன் அந்தரப்படுவது அவளுக்குப் புரிந்தது.

“தாந்தா மலை முருகன்ர பேரைத்தான் எண்ட புள்ளளைக்கு ‘காத்திகேசு’ எண்டு சூட்டினன், அவங்கட அப்பாட பேர் ‘நாகரத்னம்’, இயக்கத்தில் என்ன பேர் வைச்சிருக்கான் எண்டு எனக்கு தெரியாதே மகன்.” சட்டென தலையைத்திருப்பிய அந்த இளைஞன் பாக்கியம்மாவை ஒருகணம் உற்றுப் பார்த்தான். என்ன நினைத்தானோ பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளியேறியது.

“மட்டக்களப்பில எந்த ஊரம்மா நீங்கள்?” எங்கட சொந்த இடம் ‘பண்டாரியா வெளி’ மகன் கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு எல்லாம் பக்கத்திலதான். எண்ட மகனைப் பாத்திட்டுப் போய் தான்தோன்றியீசுவரருக்கு பாற்சொம்பு எடுக்கிறண்டு இரிக்கன்”.

நெரிசலான கட்டடங்களும் சனங்களுமான  ஊர்களைக் கடந்து வாகனம் சென்று கொண்டிருந்தது. மனதிற்குள் புளகாங்கிதமும், பதட்டமும் ஒன்று சேர்ந்தாற் போல கண்களை விரித்து ஆவலுடன் வெளியே பார்த்துக் கொண்டே வரத் தொடங்கினாள், இந்த மக்கள் கூட்டத்திற்குள் தனது மகனும் இருந்து விட மாட்டானோ என பாக்கியம்மாவின் தாயுள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது.

சுற்றிவரத் தகர வேலி அடைக்கப்பட்டு, பெரியதான ‘கேட்’டுகளும் மறைக்கப் பட்டிருந்த ஒரு பரந்த காணியுடன் கூடிய பெரிய வீட்டின் முன்பாக அந்த இளைஞன் வாகனத்தை நிறுத்தினான். “அம்மா இந்த இடம் கோண்டாவில், இதுதான் இயக்கத்தின்ர அரசியல் ஒபீஸ், இங்க போய் கேட்டியளெண்டால் உங்கட மகனை சந்திக்கிற ஏற்பாடுகளை செய்து தருவினம். அப்ப நான் வாறன்”

முகமெல்லாம் புன்னகையாக வாகனத்திலிருந்து இறங்கினாள் பாக்கியம்மா. அந்த இளைஞனுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளின் பயணப்பையை எடுத்துக் கொடுப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்த அவனது உயரத்தை அண்ணாந்து பார்த்தவாறு நடுங்கும் கரங்களால் அந்த இளைஞனின் கன்னங்களை வருடினாள். உதடுகள் துடித்தது.

“யார் பெத்த பிள்ளையோ பெரிய உபகாரம் பண்ணியிருக்காய் மகன், நீ நல்லா இருப்பாய், அந்த தாந்தா மலை முருகன் உனக்கு ஒரு குறையும் வராமல் காவலிருப்பாரடா மகனே..”. கண்களில் நீருடன் விடை கொடுத்தாள் பாக்கியம்மாள். மெலிதான முறுவலோடு தலையசைத்துக் கொண்டான் அந்த இளைஞன்.

தனது வாகனத்தை திருப்பிக் கொள்ள எத்தனித்தவன் அருகிலிருந்த பெட்டிக்கடையில் காலைப் பத்திரிகைக்காக சனங்கள் முண்டியடிப்பதைக் கவனித்தான். அன்றைய வழக்கமான பத்திரிகையுடன்  ஒற்றை தாளாக விசேட செய்திப் பத்திரிகையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இயல்பாக எழுந்த ஆர்வத்துடன் தானும் ஒன்றை வாங்கிப் பிரித்தான்.

முன் பக்கத்தில்  கறுப்பு சீருடை, கறுப்பு தொப்பியுடனான மார்பளவு புகைப் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே விழிகளை மேய விட்டான். இயக்கப் பெயர் இருந்தது அதற்கும் கீழே அடைப்புக்குறிக்குள் …‘ஓ… இதென்னது… .இது…கடவுளே… அதே சொந்தப் பெயர் அதே ஊர்’. எப்போதுமே எதற்காகவுமே தனது உணர்ச்சிகள் பொங்கியதை அறிந்திராத அந்த இளைஞனுக்கு, தாங்க முடியாதபடி நெஞ்சு வெடித்து விடுமாப்போல பதறியது. சட்டென வியர்க்கத் தொடங்கிய கைகளுக்குள் பத்திரிகையின் தாள்கள் நனைந்தன.

“அம்மா… எணையம்மா.” என பாக்கியம்மா நின்ற பக்கம் திரும்பி கதறிக் கூப்பிட வேண்டும் போலிருந்தது. வார்த்தைகளுக்குப் பதிலாக காற்று மாத்திரமே அவனது வாயிலிருந்து வெளியேறுவதை  உணர்ந்தான்.. கால்கள் நடுங்குவதைப் போலிருந்தது. நித்திரையற்றுச் சிவந்திருந்த அவனது விழிகள் கடும் எரிவுடன் சூடாக பொங்கி வழியத் தொடங்கின.

தலையில் பெரியதொரு பணியார மூட்டையைச் சுமந்தவளாக, தனது மகனின் முகத்தை காணப் போகிறேன் என்ற நம்பிக்கையோடு அந்த முகாம் வாசலில், காத்துக் கொண்டிருந்தாள் பாக்கியம்மா.

– தமிழினி ஜெயக்குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here