“செந்தீயில் செஞ்சோலை”
போர்ச்சூழலிலும் அவர் வளர்த்த பூஞ்சோலை அது.
காய்ந்து போன தேசத்தில்
வாடிக்கிடந்த அரும்புகளை
கருணை நீரூற்றி செழிப்புற வைத்த
செஞ்சோலை அது
வெஞ்சமர் வேளையில் சிதறிய செல்வங்களை எல்லாம் திரட்டி
வாழவைத்த நெஞ்சக்கூடு அது
ஆற்ற முடியாத் துயர் தீர்க்க
அவர் ஓடிச்சென்று நிம்மதி தேடிய சந்நிதி அது.
ஆருமில்லா அநாதைகள் என்ற எண்ணம் மறந்து வண்ணத்துப்பூச்சிகளாய்
சிறகடித்த சிறார்களின் வசந்தமாளிகை அது
சிறகு கட்டிப் பறந்து வந்து குண்டு போடும் வல்லூறுகளின் இரைச்சலெல்லாம் தொலைந்துபோன புன்னகைதேசம் அது
தேசத்தின் எதிர்கால சிற்பிகளை தன்னகத்தே அமைதியாய் அடைகாத்த அன்புக்கடல் அது.
பாசமுல்லைகளாய் படர்ந்து கொடிபரப்பிய தேசப்பூக்களின் பூவனம் அது.
எவன் கண் பட்டதோ
கவண் இவர்மேல் ஏன் திணிக்கப்பட்டதோ?
வெற்றி கொள்ளும் தந்திரத்தில்
சிட்டுக்களையும் வேட்டையாடலாமென யார் சொல்லிக்கொடுத்தாரோ??
அடக்கமுடியாப்புலி வீரனின் ஆத்மாவில் கை வைத்தால் அடங்கிவிடும் தமிழ் வீரமென எவன் சொல்லிக்கொடுத்தானோ???
கனவிலும் கருதிலாக் காட்சி அரங்கேறியது
அழகாகப் புலர்ந்த பொழுதில் அவலத்தை அரங்கேற்றிச் சென்றது சிங்கள வான்படை
நாசகாரப் பிசாசுகளின் நயவஞ்சகம் இங்கேயும் தீர்க்கப்படுமென கனவிலும் நினைத்திலோம்.
வானேறி வந்து வஞ்சம் தீர்க்க பிஞ்சுக் குழந்தைகளா கிடைத்தது சிங்களத்துக்கு?
போரிட்டு வெல்ல முடியாப் பூதங்களுக்கு பூக்களா கிடைத்தது
தங்கள் போரியல் தந்திரம் காட்ட?
வள்ளிபுனம் செஞ்சோலை பிணக்காடானது
சொல்லி அழுது தீர்க்கமுடியா சோக வெளியானது
ஆவணி பதினான்கும்
தமிழர் வரலாற்றில்
சோக எழுத்துகளை
பொறித்துச் சென்றது.
வலி சுமந்த வள்ளிபுனமும் தமிழர்
வாழ்விலோர் மறக்கமுடியா வடுவானது
செந்நெருப்பில் என்மேனி வேகும்வரை
செஞ்சோலை சிவந்த தினமும் என்
சிந்தையிலழியாது.