என்னை நானறிந்த நாளிருந்து
உன் கரையில் ஓடியாடி உறவாடி
உன் அலைக்கரங்களின் தொடுகையில் மகிழ்ந்து
துள்ளித்திரிந்திருந்தேன் – என்
தோழியாய் நீ கிடைத்தாய்.
நண்டுகள் படம் கீறியபடி
தோண்டிடும் பொந்துகளை
அடையாளம் காட்டித்தந்து
அவைகளைப் பிடித்து விளையாட
என்னோடு கூட நின்றாய்.
அந்தி மாலையில் அழகாக
“பணியாரம்” போன்ற பந்துச்சூரியனை
எடுத்து மேலெறிந்து ரசிக்கச் செய்தாய்
என் அப்பா, சித்தப்பா, மாமா
அனைவரின் வலைகளிலும் – மீன்செல்வத்தை
அள்ளிக் குவித்து ஆச்சரியம் தந்தாய்
உனது நீரடியோரத்தில்
என் கால்களால் துளாவித் துளாவி
ஏரல் பிடித்துச் செல்லும் போதெல்லாம்
எனக்கு ஒத்துழைத்தாய்.
கட்டுமரங்கள் பலவற்றை உன் கையிலேந்தி
எம்மக்களின் கடற்தொழிலைக் காத்து நின்றாய்.
கரிகாலன் கடற்புலி அணியின்
அதிவேகக் கப்பல்களை அணைத்து
வெற்றிகளுக்கு வித்திட்டாய்
கரும்புலிகள் எனும் தற்கொடை இமயங்களை
உனக்குள்ப் பொத்திப் பாதுகாத்தாய் – இன்னும்
பிஞ்சுப் பருவம் முதல் இளமைக் காலம் வரை
உற்ற தோழியாய் உனை
உணரச் செய்த நீ
அன்று மட்டும் ஏன் அப்படிச் செய்து விட்டாய்?
அன்பான என் உறவுகளை – உன்
அகோரத்தனத்தால் சாகடித்தாய்
அதிரவைக்கும் சாத்தானாய் மாறி
உயிர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தாய்
அதிகாலைப் பொழுதொன்றை கொடுங்கூற்றின்
குறிகாலையாக்கினாய் – பலரின்
ஆடைகள் களைந்து அம்மணமாய் அடித்துச் சென்ற
அரக்கியானாய்.
ஆண்டுகள் பலவாய் சிங்களவர்
தாண்டவமாடி எம் வாழ்வைச்
சிதைத்துக் கொண்டிருக்க
அவலத்தின் உச்சியிலும்
அடிமைத்தனத்தை உடைப்பதிலுமாய்
நாம் முயற்சித்துக்கொண்டிருக்க – நீ
ஆரிடம் கைக்கூலி வாங்கி எம்மை
வேரறுக்கத் திட்டம் செய்தாய்.
உன்னையே நம்பியிருந்த
கரையோரக் குடிசைகளைக்
கசக்கித் தூளாக்கி – நீ
கண்டதென்ன கடற்தோழி
காவியம் பல கண்ட உன் மனதில்
கறைபடிய விட்டு விட்டாய்
கழுவிவிட முடியாத களங்கத்தை நீ
சுமந்து நிற்கிறாய்.
சுனாமியென்ற அந்தப் பெயரால்
சுடுகாட்டைக் கொண்டுவந்தாய்.
உயிர்பிடுங்கும் வலியைத் தந்து
உயிருள்ளவரை கிலி கொள்ளச் செய்தாய்.
அன்பை மட்டுமே பரிமாறிய தோழி நீ
அழகாக துரோகித்து விட்டாய் – உனை
அள்ளித்தெளித்த என்னில்
ஆறாத காயம் தந்தாய்
என் உயிர் பறிக்கத் துணிந்து
மாறாத வடுவாகிப் போனாய்.
தாய்மண்ணின் ஓர் அங்கம் நீ என்றாலும்
என் மரணத்தை எனக்கு அடையாளம் காட்டி – உன்
சுயரூபத்தை வெளிக்கொணர்ந்தாய்.
என் உறவுகளின் மனதில் ரணங்களை விதைத்து
எமனின் தோழியாய் நிற்கிறாய்
உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்
உள்நெஞ்சில் குருதி உறையுதடி.
உனை மன்னிக்க முடியுமா பார்க்கிறேன் – துயரத்தை
மறக்க முடியாது தவிக்கிறேன்.
தோழி நீ துரோகம் செய்து விட்டாய்.
-கலைமகள்-