“ஜெயசிக்குறு” இராணுவ நடவடிக்கை முறியடிப்பு எதிர்ச்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட , “தமிழீழ தேசிய எழுச்சிப் பாடகர்” மேஜர் #சிட்டு அவர்களின் 27ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேஜர் சிட்டு அவர்கள் எமக்கு விட்டுச் சென்ற எம் உயிரில் கலந்த, உணர்வில் நிறைந்த பாடல்கள் ஏராளம். அந்தப்பாடல்களோடு அவர் எப்போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டுருக்கின்றார் என்பதே நிதர்சனமானது. இதை அனுவத்தில் கண்கூடு காண்கின்றோம்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டுபோராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே.
சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார்.
அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.