ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தின் 11 ஆண்டு நினைவு இன்று சனிக்கிழமை (26) யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் உறவினர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு இதே நாள் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மாத்திரம் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சில நிமிடங்களில் காவு கொள்ளப்பட்டனர்.
இந்த அனர்த்தத்தில் வட மராட்சி கிழக்கு உடுத்தறையில் அதிகளவான மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதன் நினைவாக உடுத்துறையில் அதிகளவான மக்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இன்று உறவினர்களால் நினைவு கூரப்பட்டது.
குறித்த இடத்தில் திரண்டிருந்த, ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் பெருமளவான உறவினர்கள் கண்ணீருடன் சோகமே மையமான நிலையில் கல்லறைகளில் சுடரேற்றி உணவுப்பொருட்களை படைத்தும் நினைவு கூர்ந்தனர்.
இதன் போது அங்கு நினைவு கூட்டமும் இடம்பெற்றது. அதில் உடுத்துறையில் உள்ள குறித்த இடத்தினை புனித இடமாக அறிவிக்க வேண்டும் என்றும், அங்கு பொதுவாக ஆழிப்பேரலை நினைவுத் தூபி அமைக்க வேண்டும் என்றும் பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.