ஐ.தே.க., கூட்டமைப்பு, மு.கா.வை உள்ளடக்கிய மைத்திரிபால கூட்டணியானது நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி ஈழம் என்ற கோட்பாட்டில் சமஷ்டி முறையை உருவாக்கமுயற்சிக்கின்றது. இது நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு பாரிய சவாலாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பின்கதவால் பேச்சுக்களை நடத்தியே கூட்டமைப்பும் மைத்திரிபாலவும் ஒரு அணியில் இணைந்துகொண்டுள்ளனர். மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன் வந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரவுப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததன் மூலம் நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
திட்டமிட்ட செயற்பாடு
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் செவ்வாய்க்கிழமை தமது முடிவை அறிவித்த தினத்தன்றே யாழ்ப்பாணத்தில் மைத்திரிபால சிறிசேன தனது பிரசாரக் கூட்டத்தை நடத்தினார். எனவே இது திட்டமிடப்பட்ட நீண்டகால செயற்திட்டம் என்பது தெளிவாகின்றது.
ஒற்றையாட்சிக்கு ஆபத்து
அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தனது தீர்மானத்தை பல வாரங்களாக திட்டமிட்டு எடுத்துள்ளமை தெரிகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளமையானது பாரிய அபாயமாகும். இவர்கள் இணைந்து வடக்கு கிழக்கை இணைத்து நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளது.
கரையோர மாவட்டம்
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு ரவூப் ஹக்கீம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. மாறாக இணைப்பதற்கு முயற்சி செய்து வந்தார். ஆனால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் அந்த முயற்சியை செயற்படுத்தவே தற்போது ஹக்கீம் சம்மந்தன் மைத்திரிபால கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாரிய அச்சுறுத்தலாகும். மேலும் ஹக்கீம் கிழக்கில் கரையோர மாவட்டத்தை வலியுறுத்துகின்றார். சம்மந்தனும் ரவூப் ஹக்கீமும் ஒற்றையாட்சியை சீர்குலைக்கும் சக்திகளின் மிகப்பெரிய தலைவர்களாக விளங்குகின்றனர்.
பின்கதவால் முயற்சி
இதனை உறுதிபடுத்தும் நோக்கில் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையை பாதுகாப்பதாக எங்கும் கூறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற இவ்வாறு செய்துள்ளார். பின்கதவால் பேச்சுக்களை நடத்தியே கூட்டமைப்பும் மைத்திரிபாலவும் ஒரு அணியில் இணைந்துகொண்டுள்ளனர்.
சமஷ்டிக்கு முயற்சி
மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன் வந்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை மீட்டு விடிவை ஏற்படுத்தியவர். 30 வருட கால பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை முன்னேற்றியவர். ஆனால் ஐ.தே.க. கூட்டமைப்பு மு.கா. மைததிரிபால கூட்டணியானது வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தனிஈழம் என்ற கோட்பாட்டில் சமஷ்டி முறையை உருவாக்க முயற்சிக்கின்றது. இது நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
கொள்கையில்லாத கூட்டமைப்பு
உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆதரவையும் வளங்களையும் பயன்படுத்தி நாட்டை குழப்ப முயற்சிக்கின்றனர். 2005 ஆம் ஆண்டும் ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பும் மு.கா.வும் இருந்தன. கடந்த 2010 ஆம் ஆண்டும் ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பும் மு.கா.வும் செயற்பட்டன. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தவை பார்ப்பதற்கு கூட தயாரில்லை என்று கூட்டமைப்பு கூறியது. ஜனாதிபதியை எதிர்த்துவிட்டு அவரது இராணுவ தளபதிக்கு வாக்களித்தனர். இதன்மூலம் தமக்கு கொள்கை இல்லை என்பதனை அவர்கள் காட்டினர். நாட்டில் பயங்கரவாதம் இருந்தபோது தமிழ்க் கூட்டமைப்பு மௌனமாக இருந்த அமைப்பாகும்.
பாரிய ஆபத்து
ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டமைப்பும் மு.கா.வும் ஐ.தே.க. வும் மைத்திரிபால தரப்பும் கூட்டிணைந்துள்ளன. இதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தேசிய பாதுகாப்பு ஒற்றையாட்சி மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோரிக்கை ஆகியவை தொடர்பில் மைத்திரிபால சிறிசேன மௌனமாக இருக்கின்றார். இது நாட்டுக்கு பாரிய ஆபத்தைக்கொண்டுவரும்.
பிரதேச தலைவர்கள் எம்முடன்
ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தைவி்ட்டு விலகினாலும் அதன் பிரதேச தலைவர்கள் எம்முடன் இணைந்துகொண்டுவருகின்றனர். ரிஷாத் பதியுதீனின் கட்சியின் உறுப்பினர்கள் எம்முடன் இணைந்துவருகின்றனர். இப்போது ரவுப் ஹக்கீம் விலகுவதாயின் ஏன் இவ்வளவு காலம் இருந்தார்?
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காப்பாற்றியதை மு.கா. மறந்துவிட்டது. அது மட்டுன்றி கிழக்கில். என்றுமில்லாதவாறு அபிவிருத்தியை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியது. எனினும் மு.கா. அரசாங்கத்தைவிட்டு சென்றாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. மு.கா.வும் ஐ.தே.க. வும் மைத்திரிபால தரப்பும் அமைத்துள்ள கூட்டணியானது ஏற்கனவே உருவாக்கப்பட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் மீண்டும் அதனை நிராகரிப்பார்கள்.
கேள்வி வடக்கு மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளாரே?
குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும்
பதில் யாரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். ஜாதிக ஹெல உறுமயவும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். ஆனால் அவற்றின் உண்மைத்தன்மையை நிரூபிக்கவேண்டும். வடக்கில் தற்போது இயல்பு நிலை உள்ளது. மேலும் அரசாங்கம் சட்டத்தை .நடைமுறைப்படுத்திவருகின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
காரை கவிழ்த்து தாக்குதல்
அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை ஒத்திவைத்து ஜே.ஆர். ஜயவர்த்தன சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். அன்று சந்திரிகா குமாரதுங்கவின் காரை கவிழ்த்து தாக்குதல் நடத்தினர். இன்று அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாம் வன்முறைகளை ஊக்குவிக்கமாட்டோம்.
கேள்வி: ஜனாதிபதி கடந்த 10 வருடங்களாக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணததால் புதிய தலைவருக்கு சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளதே?
பதில் அவரை புதிய தலைவர் என்று கூற முடியாது. அவர் புதிய வேட்பாளர் மட்டுமே. உண்மையை கூறுவது என்றால் அவர் அமைச்சரவையில் கூட பேசியதில்லை. அந்த அளவுக்கு சக்தி இல்லாதவர். அவர் தலைவராக வர முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய முயற்சிக்கும். காரணம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஈழத்துககு உதவும் என்று தெரியும். ரணிலும் பிரபாகரனும் செய்த உடன்படிக்கைகளை மறக்க முடியாது.
வடக்கி்ல் தேர்தல் நடத்தியது யார்?
அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி கூட்டமைப்புக்கு பல தடவை அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் வடக்கில் தேர்தலை நடத்தியது யார்? ஆளும் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று தெரிந்தும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தேர்தலை ஜனாதிபதி நடத்தினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்.
புலிகளை எதிர்க்கத் தயங்கிய சம்பந்தன்
ஜனாதிபதியுடனான பேச்சுக்களில் பயன்கிடைக்கவில்லை என்று சம்மந்தன் கூற முடியாது. கடந்த 20 வருடகாலமாக சம்மந்தன் பாராளுமன்றத்தில் புலிகளை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட கூறியதில்லை. எனவே சர்வதேசத்துடன் இணைந்து நாட்டை பிரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.
அரசியல் தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. கூட்டமைபபு அதில் பங்கெடுக்கவில்லை. கூட்டமைப்பு வராததால் ஐக்கிய தேசிய கட்சி வரவில்லை. இதுதான் அவர்கள் பாராளுமன்றத்தை மதிக்கும் விதம்.
எம்முடன் வர முடியாது
கேள்வி: கூட்டமைப்பை பிரிவினைவாதிகள் என்று கூறுகின்றீகள். அப்படியானால் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாதே?
பதில்: பிரிவினைவாதம் இருக்கும்வரை கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு வழங்க முடியாது. ஆனால் இளம் தலைவர்கள் கூட்டமைப்பை விட்டு எம்முடன் வருவார்கள்.
நன்றி: வீரகேசரி