சீற்றத்தோடெழுந்த கொடுஞ்சுழி பெருந்துயரை விரித்தது!

0
419

A local fisherwoman gestures for assistance to a hovering navy helicopter, unseen, in a tsunami affected fishermen's colony in Nagappattinam, in the southern Indian state of Tamil Nadu, Friday, Dec. 31, 2004. As the death toll from the earthquake-tsunami catastrophe soared to nearly 120,000, nations donated US$500 million (euro370 million) toward the world's largest-ever relief effort. The death toll in India is above 7,300. (AP Photo/Gurinder Osan)

கொடுஞ்சுழி வந்தடித்தது. ஒரு நிகழ்வுதான் ஆனால் அது ஆயிரமாயிரம் கதைகளை, பேசித்தீராத ஆச்சரியங்களை உருவாக்கிவிட்டுப் போய்விட்டது.

ஆழிக்கதைகள் சொல்லிக்கொண்டேயிருப்பர் எங்கள் மனிதர். மனதில் படிந்துவிட்ட நினைவுகளில் இருந்து அந்தக்  கதையூற்று பெருகியபடியே இருக்கும்.கொடுஞ்சுழி திரண்டுவந்து ஆசியாவின் கரைகளில் கூத்தாடியுள்ளது. நம்பிய கடல் நாசமாய் வந்து எல்லாவற்றையும் தின்றிருக்கிறது.

ஊருக்குள் கடல் வருமா? வீடுகளுக்குள் அது நுழையுமா? என்றெல்லாம் யாரும் ஒருபோதும் கடலைச் சந்தேகித்ததில்லை. எல்லோரும் கடலை நம்பியிருந்தோம். அதன் கரைநீளம் வேர்பாய்ச்சி வாழ்ந்திருந்தோம்.

ஒரு காலையில், ஒரு ஞாயிற்றில் வஞ்சம் கொண்டதுவாய், கோபமுற்றதுவாய் சீற்றத்தோடெழுந்த கொடுஞ்சுழி பெருந்துயரை எங்கும் விரித்தது.

சாவும் அழிவும் கரைநீளம் படலமாயிற்று.

கடல் எழுந்துவரக் கண்டவர்கள் ஓடினார்கள். ஓடியவர்களைக் கடல் துரத்தியது. வெறிகொண்டு கலைத்தது. உயிரோடு கொடுஞ்சுழி அடித்துச் சென்றது. சிலர் திகைத்து நின்றார்கள். நின்றவர்களைப் பேரலைகள் தூக்கி எறிந்தன.

வீடுகள் தரைமட்டமாகின. மரங்கள் சரிந்தன. படகுகள் கரையேறி, வானுயர்ந்து அங்குமிங்கும் மோதிச் சிதைந்தன. பள்ளிகள் இடிந்து வீழ்ந்தன. கோவில்கள் நொருங்கின. தேவாலயங்கள் பலிபீடத்தோடு பாறி வீழ்ந்தன.

கடல் ஊழிக்கூத்தாடியது.  வாழ்வைத் தந்த கடல் வடுவள்ளி வீசியது. நெய்தல் நில மக்கள் நெஞ்சடைத்துப் போனார்கள்.

அலைதிரண்டு படையெனப் பாய்ந்து வருகையில் இந்த அப்பாவிகள் என்ன செய்வார்கள்?  அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர்கள் அறிந்த கடல் தாயாக இருந்தது.  கரைநீளம் அலைக்கரங்களால் கால் தடவியது. மடிநிறைய அள்ளித் தந்தது அது. அவர்களருகில் அழகாயிருந்தது கடல். யாரும் அதைக்கண்டு அஞ்சவில்லை. அலையெறிந்து அலையெறிந்து அழகாகவேயிருந்தது அது. அதனால் அதனோடு அவர்கள் அருகாயிருந்தார்கள்.

தாயின் மீது எவருக்குச் சந்தேகம் வரும்? தாய்க்குப் பசியெடுத்ததா? வெறிபிடித்ததா? ஏனிந்தக் கோபம் வந்தது? அவர்களுக்குப் புரியவில்லை புரியவேயில்லை.

கொடுஞ்சுழி எல்லாவற்றையும் வெறியோடு புரட்டியெறிந்தது.

பிள்ளைகளை இழந்தனர் தாய்மார். மனைவியை இழந்தனர் கணவன்மார். எல்லோரையும் இழந்து தவித்தன பிள்ளைகள். சொந்தங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு மரமொன்றைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள் முல்லைத்தீவில் ஒரு குடும்பப்பெண். பயணத்துக்காக ஏறியிருந்த பஸ்ஸிலிருந்து கடல் வருகுதென்று பயத்தால் குதித்தோடிய குடும்பமொன்று அப்படியே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஒரேயொருவர் மட்டும் தப்பியுள்ளார். அவர் பஸ்ஸிலிருந்து ஏனோ இறங்காமல் இருந்தபடியால் தப்பியதாக நினைவெடுத்துச் சொல்கிறார்.

அலைகள் திரண்டுவந்து அடித்த அடியில், அவற்றின் வேகத்தில் எல்லாமே தூக்கியெறியப்பட்டன. எதிர்பாராத நிகழ்ச்சி அது. கற்பனையே செய்திராத அலைக்கூத்து. யாரையும் யாரும் காப்பாற்ற முடியாதென்ற நிலையின் அந்தரிப்பு.

கடற்கரையோரத்தில் கூடியிருந்த வீடுகளுள்ள இடங்கள் முற்றாக அழிந்துவிட்டன.

அம்பாறையில், கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, மருதமுனை, மட்டக்களப்பில் நாவலடி, கல்லாறு, காத்தான்குடி, வாகரை என்று ஏராளம் கிராமங்கள் இருந்தும் இல்லாமற் போயுள்ளன. முல்லைத்தீவில், வடமராட்சி கிழக்கில், வடமராட்சியில் என்று கடலோரமெங்கும் ஒரே சிதைவுகளும் அழிவுகளும் சாவுகளும்தான். எங்கும் கடலின் சீற்றம். கொடுத்த வாழ்வைக் கெடுத்த மாதிரி வாழ்வள்ளியெறிந்த கொடுமை.

மின்னல் தாக்கியதுபோல, கணநேர வேகத்தில், சுதாகரித்துக் கொள்ளமுன் அலைகள் அடாத்தாடின.

பிள்ளைகள் தண்ணீரால் அறுத்துச் செல்லப்பட்டு முக்குளிக்கும்போது பெற்றதாய் கண்ணால் பார்த்திருக்கிறாள். ஆனால் காப்பாற்றமுடியாத நிலை.  அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவளும் உயிருக்காகப் போராடி ஏதோ ஒரு மரக்கொப்பில் பிடிப்பதைத்தவிர பிள்ளையைத் தூக்க முடியவில்லை. கடல் ஒரு கொடும் விதியாக அவள் முன் நின்றாடியது. எதுவுமே செய்யமுடியாத சிறு தூசாகினாள் அவள்.

‘தண்ணீருக்குள் மூழ்கியவாறு ஏறக்குறைய மயங்கும் நிலையில் ஒரு பெண் தத்தளிக்கிறாள்.  அவளுடைய கண்கள் ‘தன்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சுகின்றன. ஆனால், என்னால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது’ என்கிறார் அலைகளால் அடித்தெறியப்பட்டு காயங்களோடு உயிர்தப்பிய ஒருவர்.

‘இன்றும் கெஞ்சிக்கொண்டிருந்த அந்தக் கண்கள் என் நினைவில் தெரிந்துகொண்டேயிருக்கின்றன. அதை மறக்கமுடியவில்லை’ என்கிறார் அவர்.

வழிபாட்டுக்காக கூடியிருந்தவர்களை அப்படியே அலைகள் வந்து அமத்திவிட்டன. ஒருவர்கூட மிஞ்ச முடியாத அளவுக்கு கட்டடமே இடிந்துவிட்டது ஓரிடத்தில்.

இன்னோரிடத்தில் தளிர்களாகக் கூடியிருந்த சிறுவர்கள் அனைவரையும் அலைகள் பசியாறின. அத்தனை மழலைகளின் குரல்களையும் காற்றிலிருந்தே பறித்தன அலைகள். பறித்து விழுங்கின அவை.

தன்னுடைய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என நாற்பத்தியாறு பேரை பலிகொடுத்துவிட்டு தனிமரமாக நிற்கிறார் வடமராட்சி கிழக்கில் ஒரு முதிய பெண். அழுவதைத் தவிர வேறுவழியில்லை என்றமாதிரி ஒரு வாழ்க்கையை அந்தக் கணங்கள் உருவாக்கிவிட்டன. ஆனால், அழுதுகொண்டேயிருக்க முடியாது என்பது வேறு.

எங்கும் சாவோலங்கள். பிள்ளைகள், குழந்தைகள்தான் அதிகமாக இறந்தவர்கள். கொடுஞ்சுழிக்குத் தாக்குப்பிடிக்க முடியாது உடனே இறந்தவர்கள் அதிகம் அவர்கள்தான்.

ஆழக்கடலோடிய அனுபவமுடையவர்களால்கூட பெருகிவந்த பேரலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமற் போய்விட்டது.

கடலம்மா, ஏனெங்களை இப்படிவந்து அள்ளுகிறாய் என்று கேட்கவே முடியாத கணத்தில், நினைவேயெழ முடியாத விதமாய் கடல் கொண்டது கரைகளை; கரையின் உயிர்களை; நெய்தலின் ஆன்மாவை.

வாழ்வில் இப்படியும் ஒரு நிலையோ என்றுகூட அப்போது யோசிக்கமுடியவில்லை என்றார் அலைகள் அடித்துக் காயப்படுத்தி, உயிருக்குப் போராடி மீண்ட ஒருவர்.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கடல் கொண்டுபோன உயிர்கள் கொஞ்சமல்ல. கரையேறிவந்து எல்லாரின் சுவடுகளையும் அழித்துவிட்டு மீண்ட கடல், தான் வந்துபோன அடையாளமாய் விட்ட சுவடுகள் கற்குவியல்கள், இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான சடலங்கள், கண்ணீரோடும் கதறலோடும் விம்முகின்ற உறவுகள், ஆதரவற்ற குழந்தைகளைத்தான்.

தன் மடியிற் பிறந்தவர்களைத் தானே எடுத்துக்கொள்ளுகிறேன் என்ற உரிமையில்தான் கடல் அப்படிச் செய்ததா?

புயலை தன்மடியிற் சுமந்தவள் கடலன்னை. பெரு மழையையும் வெள்ளத்தையும் தன் வயிற்றில் ஏந்தியவள் அவள். கோடையிலும் வாடையிலும் தன் பிள்ளைகளை வாழவைத்தவள் அவள்.

கடலோடக் கடலோட தன்னை விரித்து தன்னை விரித்துத் தந்தவள் அவள். பாதையாக நின்றவள். வாழ்வாக மலர்ந்தவள். பயணத்தில் தோழியாக நின்றவள். அவள் அழகி. கரைநீளம் அலைமுகம்கொண்டு சிரித்தவள். நீலப்பெண். பேரியற்கையாய் பரந்தவள். மூத்தவள். ஆதியானவள்.

தன்னைப்பற்றி மனதில் எழுதப்பட்டிருந்த அத்தனை படிமங்களையும் அவளுடைய கொடுஞ்சுழிகள் அடித்து நொருக்கிவிட்டனவா?

இனிக் கடலுக்கு அஞ்சும் காலம்தான் என்றவள் உணர்த்தினாளா?

அப்படியல்ல. அப்படியே அல்ல. அவள் என்ன செய்வாள்? அவள் நல்லவள்.

நிலம் பிளந்து அவள் நிம்மதியைக் குலைத்தது. நிம்மதி கெட்டவள், அமைதி குலைந்தவளின் சீற்றம் எங்கள் வாழ்வின் வயிற்றைக் கலக்கியது. அவளுடைய குமுறல்கள் எங்களில் மோதியிருக்கின்றன. அவை எங்களை வீழ்த்தியிருக்கின்றன.

கடலம்மா! நீ கேள்.

கல்முனையில் நீ விளையாடிய வினையில் வேலியினுள் சிக்கி நாலுபிள்ளைகள் விழி பிதுங்கிக் கிடந்தார்கள். அந்தச்சாவின் அவலம் கண்டு கதறுகிறார்கள் இரண்டு தாய்மார். பிள்ளைகள் எல்லோரையும் பறிகொடுத்து விட்டு மணலில் கைபரப்பி அடித்துக் கதறுகிறார்கள் நிந்தவூரில் இரண்டு பெற்றோர்கள். பிள்ளைகளையும் தன் துணையையும் தொலைய விட்டு தனித்த பறவையாக விம்முகிறார்

நாவலடியில் ஒருவர். நாவலடி என்ற ஓரிடமே இல்லை என்ற மாதிரி, கடலழித்து நிற்கிறது அங்கே. அங்கிருந்த ஒருவட்ட உறவுகள் அத்தனையையும் கடல் தின்றுவிட்டது.

மிஞ்சியவர்கள் சொல்லுகின்ற கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ‘கடலாடு காதை’கள்.

முதல்நாள் நத்தார்க் கொண்டாட்டங்கள் இரவிரவாக நடந்தது.  இரவு பாலன் பிறந்தார். அலைகள் அதைப்பாடின. எல்லோரும் விழித்திருந்தார்கள். அலைகளுக்கு அந்தத் தோத்திரங்கள் கேட்டிருக்கும்.

விடியவும், பாலனையும் அடித்துச்சென்றது கொடுஞ்சுழி. யாராலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை வெள்ளமாய் பெருகிநின்றது துயரம். சாவுகள் எண்ணப்பட்டுக் கொண்டேயிருந்தன.

தலைமுறைகள் அறியாத கொடுமையான அனுபவத்தை நாங்கள் அறியும்படியானோம். பேரழிவுகளைத் தெரிந்தவர் நாம். அகதி வாழ்க்கை நமக்குப் புதிதல்லத்தான்.

ஆனால், அலை கொண்டுவந்த பேரழிவு மிகப்பெரிது. அது கொடுமையிலும் கொடுமை.

அலைகளால் வெற்றிபெற்றவர் நாங்கள். ஓயாத அலைகளால் வாழ்வைக் கண்டெடுத்தவர் நாங்கள். அலை முதுகேறிப் படகோடிப் பயணம்போய் திரவியம் தேடி வந்தவரால் வென்றவர் நாம். அலையாடும் கடலோடிப் பகை மோதி வெடித்து வெற்றிபெற்றவர் நாம். கொடுஞ்சுழியாய் வந்த அலைகடலில் என்றால் வென்றிருப்போம் என்கிறான் ஒரு வீரன்.

கடல் கரையேறி வந்தது அபத்தம். அது கட்டுக்கடங்காத திமிர். அதன் திமிரை தென்தமிழீழத்தில் பார்ப்பதே ஆகக் கொடுமையாகவுள்ளது.

சில கிராமங்கள் முற்றாக இல்லை. கடலை அறிந்தவர்களில் பாதிக்கு மேலானவர்களைக் கடல் அள்ளியே விட்டது. இனி கடலை அறியவேண்டும். புதிதாய் வாழக் கடலை நெருங்கவேண்டும்.

வழியற்ற விதியா விதியற்ற வழியா இனியென்று கொடுஞ்சுழி தந்தது என்று எங்கும் மிஞ்சிய உறவுகள் சொல்லிமுடியாத வேதனைக் கதைகளோடு அகதிமுகாம்களில் இருக்கிறார்கள்.

வாழ்வை அள்ளிக் குடித்துவிட்டு நெய்தலின் மனிதர்களை அகதி முகாம்களில் தள்ளிவிட்டது கொடுஞ்சுழி.

அகதி முகாம்களில் துயரோடும் வேதனையோடும் கூடியிருக்கிற சனங்களை முட்களின்மேல் படுங்கள் என்ற மாதிரிச் சூழ்ந்திருக்கின்றன அதிரடிப்படைகள்.

பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதைபோல அலையால் அடித்து அகதியாக்கப்பட்டவர்களை அதிரடிப் படை வளைத்து நிற்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஆற்றுப்படுத்த வேண்டியதற்குப் பதிலாக ஆறாத காயத்தின்மேல் புதுக்காயம் என்பதாக படையினரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கண்ணீரும் கவலையுமாக இருக்கின்ற மக்களின் கவலைகளைத் துடைத்து அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய காரியங்கள் ஆயிரம் உண்டு. அதற்கு அரவணைக்கக் காத்திருக்கும் கைகளை நீளவிடாமல் தடுக்கப் பார்க்கிறது படை.

உலகம் எல்லாம் இருந்து உதவிகள் வந்து குவிகின்றது. ஏன்? துயரத்தைப்பகிரும் பெரார்வத்தொடும் அவலத்தைத் தீர்க்கின்ற பெரும் கரிசனையோடுமல்லவா. இழப்புகளைச் சுமந்த மக்கள் பேசட்டும், அவர்களின் சொந்தக் கதைகளை. அது அவர்களுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருக்கும் மனச்சுமை குறைவதற்கு ஏதுவாகும். அவர்கள் தங்களின் உணர்வுகளைச் சொல்வதற்கும் விருப்பங்களை வெளிப்படுத்து வதற்கும் அதைவிட வேறு வழியென்ன. தங்களுக்குத் தேவை யானவற்றை கேட்பதற்கு அவர்களுக்கு உதவும் உறவுகளோடு இணைவதற்கு, கூடி ஆறுதல் பெறுவதற்கு ஏன் இடையில் தடைகள் வேண்டிக்கிடக்கிறது.   கொடுஞ்சுழியின் அழிவுத்துயரங்கள் வரலாற்றின் வழி நெடுகவும் பெருகிக் கிடக்கத்தான் வேண்டுமா?

அலையெறிந்த மனிதர்களை அரவணைத்து அவர்கள் சொல்லத்துடிக்கின்ற வார்த்தைகளைச் செவிமடுக்க வழிவேணும்.

 

கடல் அமைதியாக இருக்கிறது இப்போது. அது இப்படி எத்தனை நிகழ்ச்சிகளைத் தன் வாழ்வில் பார்த்திருக்கிறது. அதற்கு எல்லாம் ஒன்றுதான்.

அது பேரியற்கை. நாளை நாங்கள் படகேறும்போது மீண்டும் அலைபாடி வரவேற்கும் மடிநிரைக்கும். வாழ்வள்ளித்தரும்.

கரைநீளம் குடி வந்தால் மீண்டும் அலை முகங்காட்டி வரவேற்கும். காற்றாக வருவோர்க்கு கையசைத்து மகிழும்.

அவள் தாய். ஆதி. எல்லாவற்றிற்கும் அப்பாலானவள்.

வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.

தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.

இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.

தமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.

பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.

26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.

கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.

அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.

தலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.

ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.

இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.

கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன….தமிழ் பிரபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here