போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லை! மைத்திரி விரும்பவில்லை என்று தெரிவிப்பு!

0
235

ssssதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருப்பவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இராணுவ சேவையில் நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அறியமுடிகின்றது.

இதனால், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இன்றுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1960ஆம் ஆண்டு பிறந்த ஜகத் டயஸுக்கு இன்றுடன் 56 வயது பூர்த்தியாகின்றது. இராணுவ சட்டதிட்டத்தின் பிரகாரம் 55 வயது பூர்த்தியானதும் சேவையிலிருந்து ஓய்வுபெறவேண்டும். எனினும், முப்படைத் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி நினைத்தால், தரம் உயர்வு வழங்கி அவருக்கான சேவை காலத்தை நீடிக்க முடியும்.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரம் உயர்வுடன் தனக்கு இராணுவ சேவையில் பதவி நீடிப்பை வழங்குவார் என்றே ஜகத் டயஸ் பெரிதும் எதிர்பார்த்தார். இராணுவ தரப்பும் இதனையே எதிர்பார்த்தது.

இவருக்கு 55 வயதுக்குப் பின்னரும் சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்றும், போர்க்குற்ற விசாரணையில் இருந்து அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றில் கோரியிருந்தார்.

இதேவேளை, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில்கொண்டு இதைச் செய்வதற்கு ஜனாதிபதி விரும்பவில்லை என அறியமுடிகின்றது.

நல்லாட்சி அரசு ஆட்சிப்பீடமேறியதையடுத்து, இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டதால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதற்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேவை நீடிப்பை வழங்கினால் அது மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும், உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையில் அது தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்றும் கருதப்படுவதாலேயே சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது டிவிசனுக்குத் தலைமைவகித்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜேர்மனியில் இலங்கைக்கான துணைத் தூதுவராகவும், முல்லைத்தீவு படைகளின் தலைமையக தளபதியாகவும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில், இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் மீது இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளுக்கு இவர் உள்ளாகியுள்ளார். இதுபற்றி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவும் இவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தது.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் விடயம் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் ‘சுடர் ஒளி’ நேற்று வினவியபோது,

“இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் முடிவை நான் இன்னும் எடுக்கவில்லை. அதை முறையாகச் செய்யவேண்டும். ஆனால், ஓய்வு வழங்குவதற்குப் பாதுகாப்புத்துறை உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் அதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால், இது பற்றி எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை” – என்று பதிலளித்தார்.

இது விடயம் பற்றி இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம் ‘சுடர் ஒளி’ நேற்று வினவியபோது,

“ஓய்வு விடயம் பற்றி எமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி நாளை (இன்று) வெள்ளிக்கிழமை அறிவிப்பொன்றை விடுக்க முடியும்” – என்று பதிலளித்தார்.

அதேவேளை, மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் மனோ பெரேரா, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மைத்திரி டலஸ், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட மேலும் சில இராணுவத்தின் உயர் அதிகாரிகள் அடுத்த வருடம் ஓய்வுபெறவுள்ளனர். 55 வயது பூர்த்தியாகும் நிலையிலேயே அவர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.

(‘சுடர் ஒளி’ – 25.12.2015 – வெள்ளிக்கிழமை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here