1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர் கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் 41 ஆம் ஆண்டு நினைவாக பிரான்சு Republique பகுதியில் இன்று (23.07.2024) செவ்வாய்க்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு அகவணக்கத்தோடு ஆரம்பமானது.
தொடர்ந்து நினைவுரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்களும் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பாட்டாளர் திரு.ஜமால் அவர்களும் கறுப்பு யூலையில் தமிழினத்துக்கு நேர்ந்த அவலம் பற்றி தமிழ்மொழியில் ஆற்றியிருந்த அதேவேளை, நுவாசியல் தமிழ்ச்சோலை மற்றும் கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவியர் கறுப்பு யூலை தொடர்பில் பிரெஞ்சு மொழியில் ஆற்றியிருந்தனர்.
இது வெளிநாட்டு பிற இன மக்களைக் கவர்ந்திருந்தது. இவர்களுக்கான துண்டுப் பிரசுரங்களை ஆர்ஜொந்தை தமிழ்ச்சோலை மாணவர் வழங்கியதுடன், பிரெஞ்சு மக்களின் கேள்விகளுக்கும் கறுப்புயூலை பற்றி விளக்கியதையும் அவதானிக்க முடிந்தது.
நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு கவனயீர்ப்பு நிறைவுபெற்றது.
நிகழ்வின் முழு உரைகளைக்காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)