பலஸ்தீன நகரமான காஸாவின் பல்வேறு இடங்களில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.
இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிசைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.