கொழும்பு களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றின்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ 53 வீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என்று முடிவு பெறப்பட்டுள்ளதாக
களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பேராசிரியருமான ரொஷான் லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
தமது குழுவின் கருத்துக்கணிப்பு தொடர் பில் ஊடகங்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
எதிர்வரும் ஜனதிபதி தேர்தலின் பக்கம் அனைவரதும் கவனம் திரும்பியுள்ள நிலையில் கடந்த வருடங்கள் தமது குழுவின் ஆய்வு முடிவுகள் தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட சமாந்தரமாக இருந்தமையால் இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து கணிப்பொன்றினை நடாத்தி அதன் மூலம் முடிவுகள் பெறப்பட்டன. விஞ்ஞான முறைக்கிணங்க செய்யப்பட்ட மேற்படி ஆய்வில் 25 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி மாவட்ட அடிப்படையில் மேல்மாகாணம் தென் மாகாணம் ஊவா மாகாணம் வடமேல் மாகாணம் சப்ரகமுவ மாகாணங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேனவும் அதிகபட்ச வாக்குகளை பெற்றுக்கொள்வர்.
இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மொத்த வாக்குகளின்படி 44 வீதமான வாக்குகளை மைத்திரிபாலவும் 53 வீதமான வாக்குகளை மஹிந்தவும் பெறுவார்கள் என்றும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவாரென்ற எமது முடிவில் மாற்றங்கள் ஏற்பட கூடும்.
இதுவரை காலம் எமது கணிப்புக்கள் சரியானதாக அமைந்துள்ளமையால் இந்த முறையும் ஆய்வு முடிவுகள் எதிர்வரும் தேர்தல் முடிவுக்கு அண்மித்த முடிவுகளை கொண்டிருக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.