பிரான்சில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டிகள் – 2024

0
417

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு 450 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இம்முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் மூன்று தினங்கள் இடம்பெற்றிருந்தது.

நேற்று (06.07.2024) சனிக்கிழமை சார்சல் நகரத்தில் அமைந்துள்ள Centre Sportif Nelson Mandela மைதானத்தில் இறுதிப்போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. சார்சல் நெல்சன்மண்டேலா மைதானப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் லெப். சங்கர் நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு ஆரம்ப வணக்க நிகழ்வு இடம்பெற்றது. ஈகைச்சுடரினை 30.03.2001 அன்று புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த லெப். மனோரஞ்சிதன் (மனோ), 26.08.1996 அன்று மட்டக்களப்பு நாவலடி சந்தியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த ரஜிதீசன் (ராகதீபன்) ஆகிய இரு மாவீர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து முழவு (பான்ட்) வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

பிரெஞ்சுக்கொடியை கார்ஜ் சார்சல் பிராங்கோ தமிழ்ச் சங்க பரப்புரைப்பொறுப்பாளர் திரு.செல்லையா கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை போட்டியின் துணை முகாமையாளர் திரு.பீலிக்ஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை குறித்த இரண்டு மாவீரர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன் அவர்களும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் பொறுப்பாளர் திரு. பாலக்குமாரன் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சமநேரத்தில் 6 இல்லங்களுக்கான கொடிகளையும் இல்லங்களின் பொறுப்பாளர்கள் ஏற்றிவைத்தனர். ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு மெய்வல்லுநர் போட்டித் தலைவன், தலைவியிடம் கையளிக்க அவர்கள் வீரர்களோடு மைதானத்தை வலம் வந்து இந்த ஆண்டுக்கான மெய்வல்லுநர் போட்டித் தலைவன் ஜீவரத்தினம் ஜினுசன் மற்றும் மெய்வல்லுநர் தலைவி சிவராஜன் சிவானுஜா ஆகியோரிடம் ஒலிம்பிக் தீபத்தை ஒப்படைக்க அவர்கள் ஒலிம்பிக் சுடரினை ஏற்றிவைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து நடுவர்களுக்கான சத்தியப் பிரமாணத்தைத் தொடர்ந்து போட்டிகள் இனிதே ஆரம்பமாகின. சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன. தமிழ்ச்சோலை இல்ல மாணவர்களின் அணிநடை அணிவகுப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அணிவகுப்பு மரியாதையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மயில்ராசன், தமிழ்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.நாகயோதீஸ்வரன், மெய்வல்லுநர் போட்டி துணைமுகாமையாளர் திரு.பீலிக்ஸ், ,தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன், கார்ஜ் சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

அணிநடை ஆண்கள் பிரிவில் சார்ள்ஸ் இல்லம் முதலிடத்தையும் சோதியா இல்லம் இரண்டாம் இடத்தையும் ராதா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. அணிநடை பெண்கள் பிரிவில் மாலதி இல்லம் முதலிடத்தையும் சோதியா இல்லம் இரண்டாமிடத்தையும் சார்ள்ஸ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. வினோத உடைப்போட்டி இம்முறையும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆறு இல்லங்களும் வினோத உடைப்போட்டிகளை .திறம்பட அமைத்திருந்தன.

இவர்களில் சோதியா இல்லம் குருந்தூர் மலை ஆலய விவகாரத்தை கருப்பொருளாக்கி திறம்பட காட்சிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

போட்டிகளின் நிறைவில் மூன்று தினங்களும் நடுவர்களாகக் நடுநிலையோடு கடமைபுரிந்த நடுவர்கள் மைதானத்தின் நடுவே மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் 95 வல்துவா பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் Carlos Martens Bilongo அவர்களும் சார்சல் நகரபிதா Patrick Haddad அவர்களும் கலந்துகொண்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்களையும் வழங்கி மதிப்பளித்ததுடன், தமது கருத்துக்களையும் பகிர்ந்திருந்தனர்.

அண்மையில் நடந்து முடிந்த கெனீபா என்று அழைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத தமது நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த யூன் மாதம் 8 திகதி நோர்வே நாட்டில் பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டி பல்வேறு நாடுகளுடன் நடைபெற்றுருந்தது. அதில் தமிழீழ பெண்கள் அணி முதன் முதலாக களம் இறங்கியிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 25 வரையிலான எங்கள் பெண் வீராங்கனைகள் அதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களில் பிரான்சில் இருந்து 2 பெண் வீராங்கனைகளான அசானி தனபாலன், தர்சா பத்மநாதன் மற்றும் பயிற்றுவிப்பாளர்களான தீபன் துரைஸ், சுயன் இரத்தினசபாபதி ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களுக்கான மதிப்பளித்தலும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து அதன் பிரதம பயிற்றுவிப்பாளர் தீபன் துரைஸ் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

நிகழ்வுகளை செல்வன் நிதுசன், செல்வி இயல்வாணி, திருமதி ராஜினி ஆகியோர் திறம்பட தமது அறிவிப்புக்களின் ஊடாகக் கொண்டுசென்றதைக் காணமுடிந்தது.

அத்தோடு சிறார்களுக்கான விளையாட்டுக்கள் என்பனவும் சிறப்பாக அமைந்திருந்தன. குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு மகிழ்வோடு தமது இனிப்புப் பொதிகளை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

முடிவில் 639.33 புள்ளிகளைப்பெற்று ராதா இல்லம் முதலிடத்தையும் 344 புள்ளிகளைப் பெற்று சோதியா இல்லம் இரண்டாமிடத்தையும் 306.33 புள்ளிகளைப்பெற்று அங்கையற்கண்ணி இல்லம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.

நிறைவாக வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here