‘தமிழ் மக்கள் பேரவை’ அமைப்பின் உருவாக்கத்திற்கு பொறுத்திருந்து பதிலளிப்பேன் என்கிறார் சம்பந்தன் !

0
106

sampanthan 2364ee“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்திற்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைக்கப்போவதாகக் கூறி ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஓர் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குள் உள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரகசியமான முறையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்களின் அழுத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அரசியல் இராஜதந்திரிகளிடமிருந்தும் மற்றும் உள்ளூர், சர்வதேச ஊடகங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியிடம் ‘சுடர் ஒளி’ நேற்று வினவியபோதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஒரு புதிய அமைப்பு ஜனநாயக ரீதியில் உருவாகி செயற்படுவதை எதிர்க்கமுடியாது. ஆனால், ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் கட்சியின் கோட்பாடுகளை மீறி கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் தனிப்பட்ட ரீதியில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதை கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளாது. அதேமாதிரித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமைக்கு அறிவிக்காமல் கட்சியின் அனுமதியைப் பெறமால் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்திற்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியில் பெரிதும் பாடுபட்டுவருகின்றது. தீர்வுக்கான இந்த இலக்கை நாம் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம். சர்வதேச பிரதிநிதிகளுடனான ஒவ்வொரு சந்திப்புகளின்போதும் இதனை நாம் வலியுறுத்திக் கூறியுள்ளோம். இந்தச் சந்திப்புகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருக்கின்றார்கள்.

நாம் ஓரணியில் நின்று நிரந்தர அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். இதைக் குழப்பியடிக்க விரும்பவில்லை. குழப்பியடிக்க விரும்புவோர் இதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன்” – என்றார்.

(சுடர் ஒளி’ – 22.12.2015 – செவ்வாய்க்கிழமை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here